Friday, 8 December 2017

   மகரந்த ஒளி உமிழும் மெழுகு விளக்குகளும்
மேசைக்கரண்டிகளின் முத்தங்களும்
சூழ் வெளியில் , நம் நட்புகளுக்கிடையே நீ இருக்க .
பரிசுபெட்டகத்தோடு நெருங்கினேன் .
நம் கண்களின் சந்திப்பை மௌனச்சிரிப்போடு
எல்லோரும் எதிர்நோக்கிக்கொண்டிருக்க !
பரிசை உன்னிடம் சேர்ப்பிக்கையில் -நம்முள்
ஊடுருவிய நம் கண் பார்வைகள் உடைபடாமல்
ஒரு வாழ்த்தை உமிழ்ந்தேன் அனிச்சையாய் .
அவள் காத்திருந்த அதிமுக்கியமான பரிசு
இதோ ! என்றாள் தோழி .
  அதற்குள் அங்கிருந்தவர்களில் ஊகங்ள்
உருக்கொள்ளத்தொடங்கின .
iphone x என்றான் ஒருவன் .வைர நகையாக
இருக்குமோ என்று நகைத்தாள் ஒருத்தி .
பரிசின் உடை உதிர்க்கையில்
எதிர்பார்ப்பு எதிர்ப்படும் உன் மின்னும்
கண்ணின் ஒளி என்னுள் அழுத்தத்தை கூட்டியது.
மழைக்காலத்தில் மொத்தமாய் அணையும்
மாநகர விளக்குகளைப்போல
எல்லாம் அவிழ்ந்து எதிர்ப்பட்டது ,
அணைத்தது அனைவரது பிரகாசத்தையும் .
ஊரே அணைகையில் மெருகேறும்
நிலவை ப்போல கூடியது உன் ஒளி .
என்றோ கதைக்கையில், நீ விரும்பியதாய் சொன்ன
மலிவானதொன்றை பொதித்து வைத்திருந்தேன் .
கண்களால் சிரித்துக்கொண்ட நமக்கு மட்டுமே
தெரியும், நான் கொடுத்தது பொருளை அல்ல
நமக்கே நாமக்கான அந்த நினைவை என்று !

Wednesday, 1 November 2017

The Beguiled - 2017 - Sofia Coppola



      கதாபாத்திரங்களின் அதி நுட்பமான மனஓட்டத்தை ,அப்படியே பார்வையாளனிடம் காட்சி வழியே கடத்தும் கடினமான விஷயத்தை தொடர்ந்து அவரது படைப்புகளில் இலகுவாக நிகழ்த்துகிறார் இயக்குனர் - Sofia Coppola .
மனித மனங்களாக பாவனை செய்துகொண்டிருந்தவை ஆண் , பெண் மனங்களாக உண்மையுரு கொள்ள .படர்ந்து நின்ற காமம் புயலாக மாறிய தருணமும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்வுகள். அந்த வீட்டில் இருந்த மற்ற கதாபாத்திரங்கள் என்ன பதைபதைப்புக்கு உள்ளானதோ ,அதில் இம்மிகூட கசியாமல் நம் மனதிற்கு அந்த அதிர்வுகளை கடத்திவிட்டார் இயக்குனர் . Nicole Kidman - என்ற பெயரையும் , படம் நெடுக இல்லாமல் வியாபித்திருந்த அந்த பின்னணி இசையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் .

Friday, 27 October 2017

Perumthachan -1991 -G. Jayakumar




   தடம் வைத்த மணல் சரிவதை போல சரிந்து கொண்டே சென்றன காட்சிகள் .சுதாரிக்க நேரம் கொடுக்காமல் முதல் காட்சியிலிருந்தே நம்மை உள்ளிழுத்துக்கொண்ட கதை, இறுதிவரை தன்னோடு பிணைத்து வைத்துக்கொள்கிறது .பார்வையாளனை இருப்புகொள்ளமுடியாமல் செய்ய அலைந்து திரியும் கதை கட்டமைப்பும் ,கேமரா கோணங்களும் , வேகமான இசையும் கட்டாயமில்லை என்றுணர்த்துகிறது இந்த கதையின் ஸ்த்திரத்தன்மை .


   தனக்கு குழந்தை ஒன்று இருக்கிறது என்பதை செல்லுகையில் அவர் முகத்தில் படரும் வெட்கம் , பால்ய தோழனை பார்க்கையில் இயல்பாய் வெளிப்படும் வாத்சல்யம் . மாடிப்படியிலிருந்து திரும்புகையில் நண்பனை எதிர்கொள்ளமுடியாமல் திணறும் காட்சி .போன்றவற்றில் நடிப்பால் நம்மை திணறடிக்கிறார் அவர் .படைப்புத்துறையில் இருக்கும் அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டியது இந்த பெருந்தச்சனின் பாண்டித்யம் 


பச்சையாய் எதுவாகினும் பசிக்காவிடினும்
பல்லினால் பதம்பார்!
ஆடாதொடையென்றால் அதைத்தொடாதே,
கிளுவையா ! அடியொட்ட ஆய்ந்துவிடு .
அசைப்போட ஆலமர நிழல் தேடு .
பெருமழையின் முதல் துளி
முகர்ந்ததும் கொட்டில் நோக்கிச்செல் !
கீதாரியை கீச்சுக் குரலில் கூப்பிடு .
ஆறறிவுக்கு ஒன்று கம்மிதான் என்றாலும் .
இதிலும் அப்படி எண்ணங்கள் இருந்திருக்கும்தானே!
தட்டில் தம்பிவிலாஸ் மூளை மிளகுக்கறி .

27.10.2018

Monday, 23 October 2017

   சம்பாரம்



    ஆறாறு முப்பத்தாறு , ஆறேழு நாப்பத்திரெண்டு என்ற சப்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டிருந்தாலும் , நாசியைத் துளைத்துக் கொண்டிருக்கும் சத்துணவின் தாளிப்பு , வெண்கல மணியை மரசுத்தி முத்தமிடும் சப்தத்தை எதிர்நோக்கச் செய்யும் . பாவ்ளாவின் நாய்- மணி சோதனை நம்மையறியாமல் நம்முள் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் . சப்தம் செவிப்பறையை தொட்ட வினாடி வெளியே ஓட எத்தனிக்க . நாளைக்கு இதை 3 வாட்டி எழுதிட்டு வாங்க .என்று ராதாகிருஷ்ணன் சார் சொல்லவும் சரியாக இருக்கும். நாளைக்கு சம்பாரம் சார்! ஸ்க்கூல் லீவு ,ஒருமித்த குரலில் என்று சொல்ல . இதற்கெல்லாம் லீவா என்று கேள்வியே முகமாக அறையை விட்டு விலகுவார்.


    வெளியே ஓடி வந்தால் ஐப்பசி மாச மேகக்கூட்டம் கிழத்தெரு முனையில் முகிழ்ந்து நிற்பது போலதொரு பிரமை கொடுக்கும் சூழ்ந்துநிற்கும் சாம்பிராணி புகை . மேகம் விலக வேல் வந்துகொண்டிருக்கும் . நவ வீரர்களாய் காப்புகாட்டிக்கொண்டவர்கள் வேல் தூக்கிக்கொண்டுவருவார்கள் . வீட்டு வாசலில் குடத்து தண்ணீருடன் பெண்கள் காத்து நிற்பார்கள். அவரவர் வீட்டு வாசலுக்கு வருகையில் வேல் வீரர்களின் காலில் நீரை ஊற்றி ஆசி வாங்குவர் . நவ வீரர்களின் மையமாக வீரவாகுவாய் வரிந்துக்கொண்டு KKS- நிற்பார் தேஜசுடன், எல்லோருக்கும் திருநீர் கொடுப்பார் . கடக்கும் வேளையில் நாமும் தலையை நீட்ட மேலுக்கு சிறு தெளிப்போடு நெற்றியில் திருநீரு இடுவார் . அடுத்து "ஆ" வென வாயை திறந்துநிற்போம் வேறு வழியில்லாமல் கையில் இருக்கும் மிச்சத்தை வாயில் போடுவார் . இப்போதெல்லாம் விபூதியில் அந்த சுவை இருப்பதில்லை. மண் நிறைந்த அந்த தெருவில் பெண்கள் ஊற்றிய நீர் ஏற்படுத்திய நீர்ச்சுவடு வீடுகளுக்கியிடையே உருவாக்கிய நீர் பாலங்கள் ஒரு மாய தண்டவாளமாய் வானில் சுற்றிக்கொண்டிருக்கும் கருடனுக்கு தெரிந்திருக்கலாம் .


   தீபாவளிக்கு பின் தொடங்கும் கந்தசஷ்டி ஆறு நாட்கள் தொடரும் . ஒன்பது பேர் தங்களை நவவீரர்களாக வரிந்துக்கொண்டு காப்புக் கட்டிக்கொள்வர் . மதியமும் ,இரவு உற்சவர் விதிவுலாவுடன் வேல் எடுத்துக்கொண்டு வீதி வலம் வருவார்கள் . முன்னெல்லாம் காலை உணவை தவிர்த்துவிட்டு மதியம் வேல் பார்த்த பின்னரே மதிய உணவை எடுக்கும் சில தாத்தாக்களின் கடும் விரதம் பற்றி அப்பா சொல்லி கேள்விப்பட்டதுண்டு . தீபாவளிக்கு வந்த சொந்தங்கள் ஊருக்குசென்றுவிடாமல் இருக்க காப்புத்தடை என்றொரு அஸ்திரத்தை அம்மாக்களும் ஆத்தாக்களும் பிரயோகிப்பார்கள் . காப்பு காட்டுகையில் ஊர் எல்லைக்குள் இருந்தால் அவர்கள் சம்பாரம் பார்த்தே ஆகவேண்டும் .இதற்கு பயந்தே பக்கத்து கிராமங்களான ஆலங்குடிக்கும் , காடந்தேத்தி உண்டியல்அடிக்கும் தெறித்து ஓடுவர் வெளியூர் வாழ் மணக்குடி சொந்தங்கள் . ஒருசில முறை அங்கு சென்றதுண்டு ஏறக்குறைய " கிடாயின் கருணைமனு " படத்தில் வரும் உப்புமா கிண்டும் களம் போன்றே இருக்கும் அது .அந்த ராத்திரி நேரத்தில் இருட்டில் ஒரு கூட்டமாய் சம்மந்தமே இல்லாமல் அங்கு அவர்கள் இருப்பது நகைப்பாய் இருக்கும்.அவர்கள் அந்த பகுதியை கடப்பவர்களிடமெல்லாம் " காப்பு கட்டியாச்சா " என்று நச்சரித்துக்கொண்டிருப்பார்கள் .


   சூர சம்பாரம் அன்று காலையிலிருந்தே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். மக்கள் சுப்ரமண்யர் சந்நிதியில் மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்துகொண்டிருப்பார்கள் . மாவிளக்கு சட்டி வைக்க இடமிருக்காது . கடந்த 364 நாட்களாக கன்னிமூலை கணபதியை பார்த்த கையோடு காலில் குத்திய நெருஞ்சி முள் கவனத்தில் போர போக்கில் இவருக்கு ஒரு கும்பிடை போட்டு விட்டு உலகநாயகி சன்னதிக்கு ஓடிய மக்கள்தான் அம்புட்டு பேரும் . இன்று பவ்யமாய் அவர் சன்னதியில் கண்மூடி நிற்பார்கள் . எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா! என்று முருகனே விக்கித்து முறுவளிப்பதாய் தோன்றும் எல்லோரும் எல்லோருக்கும் மாவிளக்கு பிரசாதம் விநியோகிப்பார்கள் , எல்லாம் வெல்ல மாவிளக்காக இருக்க வெள்ளை மாவிளக்கு (சீனி போட்டது ) கிடைத்தால் நம் பாக்யம். முன்வாசலுக்கு வந்தால் அவ்வளவு நாள் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அமானுஷ்யமாய் தலை இல்லாமல் நம்மை மிரட்டிக்கொண்டிருந்த சூரனின் மரச்சிலை , முண்டமே தேவலாம் ! என்பதைப்போல ஆனை முகம் தரித்து நம்மை அதிகமாய் மிரட்டிக்கொண்டிருக்கும் . உள் மண்டபத்தில் பளிங்கு கண் பதித்த ஆட்டு கிடா வாகனத்தில் முருகன் சிலையை ஆயத்தம் செய்துகொண்டிருப்பார்கள் . மாலையில் நடைபெறப்போகும் யுத்தத்திற்கு .


   வெளியூரில் வாக்கப்பட்டு போன பெண்கள் சம்பாரம் பார்க்க குடும்பத்தோடு வந்திருப்பார்கள் . தை பூசத்திற்கு தலைக்காடுக்கும் காளிகட்டுக்கு காட்டூருக்கும் இங்கிருந்து மக்கள் போவதுபோல , ஊர் முழுக்க விருந்தினர்கள் நிறைந்திருப்பார்கள். தெருவில் ஆங்காங்கே குசலம் விசாரித்துக்கொண்டிருக்கும் நபர்கள் கண்ணில் தட்டுப்படுவார்கள். சாயந்திரம் மக்கள் தயாராகிக்கொண்டிருக்க ஒத்தையடியாக தப்பு சப்தம் சூரனின் வரவை தெரிவிக்கும் . தெருவையே அட்டகாசம் செய்துகொண்டு போவார் அவர். சூரனை தூக்கிக்கொண்டு வரும் இளந்தாரிகள் கண்ணுமண்ணுதெரியாமல் ஓடுவார்கள் , தெருவிலிருப்பவர்கள் விலகுவார்கள் . சூரன் தெருவை கடந்துவிட்டால் இன்னும் 20 லிருந்து 30 நிமிடத்தில் வேல் வரும் என்பது ஒரு கணக்கு .

   தெருவே வேலை வரவேற்கும் வேலைக்கு தயாராகும் . தெரு முனையில் உள்ள மம்முசாமி வாசலில் கோலமிட்டு அவர்கள் அமர வசதி செய்து வைத்திருப்பார்கள், இதுபோல எல்லா தெருவிலும் வேல் வரவேற்பு நிகழும் . போருக்கு செல்வோரை அந்தக்காலத்தில் எப்படி வழியனுப்பி வைத்திருப்பார்கள், என்பதை கண்ணுற விரும்புவோர்கள் அந்த வேல் வரவேற்பை நிச்சயம் பார்க்கவேண்டும் . பஞ்சாயத்துபோர்டு முனையில் வேல் வந்துட்டு என்று சொல்பவர் ட்டு......... என்று முடிக்கும் முன் மம்முசாமியை வேல் வீரர்கள் ஒரு சுற்று சுற்றி இருக்கையில்அமர்ந்திருப்பர் . அத்தனை நாள் வந்த வேலாக அது இருக்காது வாயு வேகதில், மனோவேகத்தில் வந்து செல்லும் வேலாக இருக்கும். அமர்ந்த நொடியில் வேலுக்கு எலுமிச்சை மாற்றி வீரர்களுக்கு மாலை சாற்றுவர் ,பல இடங்களில் போட்ட மாலைகள் நிறைந்த மார்பில் திருநீறு துலங்க . வேல் தாங்கி நிற்கும் தோள்கள் அவ்வளவு அழகு , “தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் பாட்டு கண்முன்வந்து செல்லும் . குடம்குடமாய் நீரை காலில் ஊற்றி ஆசி வாங்குவார்கள் . இது ஒரு சாதாரண காட்சியாய் கடக்கமுடியாதபடி பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் அந்த இடத்தையே பரிணமிக்கச்செய்யும் . வேலுடன் வரும் முதியவர் வேல் பாடல்களை பாடுவார் , அவர் தோதாக விடும் இடைவெளியில் சபாஷ் .....சபாஷ்..... என்றும் ஆ ஆ அலேபகா ... ஆ ஆ அலேபகா என்றும் வேல் வீரர்கள் தொடர்ந்து சொல்ல அங்கு கூடியிருக்கும் மக்களும் சபாஷ் சபாஷ் என்று சேர்த்துக்கொள்ள அந்த இடமே வேறொரு அதிர்வில் இருக்கும் .


  வேல் கோவிலை நோக்கிச் செல்லுகையில் இந்த சபாஷ் சப்தம் அதிகரித்துக்கொண்டே போகும் , காரணம் ஆங்காங்கே வேல் வரவேற்பு கொடுத்த மக்கள் வேலுடன் சேர்ந்து கொண்டே செல்வதால் . பலர் சம்கார களத்துக்கு சென்றாலும் . விஷயம் தெரிந்தவர்கள் வேலுடன் கோவிலுக்கு செல்வார்கள் . அதிமுக்கியமான "அன்னையிடம் வேல் வாங்கும்" நிகழ்வை காண . கோவிலை வலம் வந்த வேல் ,மூடி இருக்கும் தெற்குவாசல் பெரிய மரக்கதவின் முன் வந்து நிற்கும் . அத்தனை நாளும் சம்பந்தமே இல்லாமல் எதற்கு இப்படி ஒரு கதவு என்று ! யோசித்தவர்களுக்கெல்லாம் அப்போது புரியும் . அந்த கதவு அமைக்கப்பட்டதே இதற்காகத்தான் என்று . வீரவாகுவான K.K.S- திரிசூலத்தை மூடிய கதவின் மேல் வைத்து நிற்பார் . வேல் பாட்டு பாடுபவர் தனது மொத்த வித்தையையும் அங்கு காட்டுவார் . உத்வேகமான பாடல்களை ஒரு 15 நிமிடம் பாடுவார் . சபாஷ் கோஷம் உச்சத்தில் இருக்கும் . அதேபோல அந்த 30 நிமிடங்களில்தான் கோவிலின் உச்சக்கட்ட கொள்ளளவிற்கு மக்கள் உள்ளே நிற்பார்கள் . எப்படி சமிக்கை கொடுப்பார்கள் என்று தெரியாது . கதவு உள்ளிருந்து திறக்கும் . ஆட்டுக்கிடா வாகனத்தில் ஆர்ப்பரிக்க அமர்ந்திருக்கும் முருகருக்கு மஹா தீபாராதனை காட்டப்படும் . பெரும் சிலிர்ப்பை தரும் அந்த நிகழ்வில் கதவு தானாகவே திறப்பதாக சிறுவயதில் நம்பிக்கொண்டிருந்தேன் . அவ்வளவு தத்ரூபமாக அதை நிகழ்த்துவார்கள் .


   முருகனை ஒரு பால்வடியும் குழந்தையாகவே நம்மிடம் பலர் முன்னிறுத்தினாலும் . அவர் தோன்றியதே போர் செய்யத்தான், அவர் ஒரு போர் வீரர் என்பதாகத்தான் கந்தபுராணம் காட்டுகிறது . "பெரும் சேனையை வழிநடத்துபவன்" என்று பொருள்படும் "மஹாஸேனாய" என்ற பெயருக்கும் தேவர்களின் சேனைக்கு அதிபதி என்று பொருள்படும் "தேவசேனாபதி " என்ற பெயருக்கும் ஏற்றார் போல அன்றொரு போர் வீரனாக காட்சிகொடுப்பார் . முருகனை எடுத்துக்கொண்டு உலகநாயகி சன்னதிக்கு செல்வார்கள் . திரை மூடியிருக்கும் அங்கு முன்னுக்கும் பின்னுக்கும் வந்து வந்து செல்லும் முருகனும் வேலும் . திரை விலகி ஆராதனை காட்ட , சக்தி வேலுடன் பெரியய்யா வந்த வேகத்தில் கொடுத்துவிட்டு மூர்ச்சையாகிவிடுவார் . வேலை ஆட்டு கிடாயின் தலையில் வரிந்துக்கொண்டு . புறப்பட தயாராக . வேண்டுதல்கள் உள்ள பலர் முடியாத பெரிய மாலைகளை சூடுவார்கள் . அந்த நேரத்தில் வேண்டுதல் செய்துகொண்டு மாலை சூடுவது எண்ணியதை நிறைவேற்றும் என்றொரு நம்பிக்கை . வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக சம்கார களத்திற்கு செல்வார் .

    இவ்வளவு விஷயங்கள் இங்கு நடந்திருக்க களத்திற்கு முன்னமே சென்றிருந்த சூரன் எப்பயா இவன்க வருவான்க! என்ற கணக்காய் இளைப்பாறும் பந்தலில் நின்றிருப்பார் . இளைப்பாறும் பந்தல் தெற்கு வடக்காக இருக்கும் நீண்ட களத்தில் ஒரு 20 அடி உயர்ந்த பந்தலாய் தென்னன்ட மூலையில் அமைக்கப்பட்டு மேலே ஒரு இழுவை விசிறி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் . பின்னே அந்த விசிறியை யாராவது இயக்கிக்கொண்டிருப்பார்கள் . இரு மருங்கிலும் காத்துநிற்கும் மக்கள்கூட்டத்தின் காதில் சன்னமாய் "சபாஷ் " ஒலி கேட்க ஆயத்தமாவார்கள் . உதாரணத்திற்கு திடீரென்று வீட்டில் அறைக்கதவை நாம் திறக்கையில் உள்ளே அகப்பட்டுக் கொண்டதொரு பூனை ,அது வெளியேற ஒரே வழி நாம் நிற்கும் அந்த கதவுதான் என்கையில் .எப்படி அடித்துபிடித்து வெளியேறும். அதுபோன்றதொரு சிக்கல் சூரனுக்கு தெற்கு மூலையில் இருக்கும் அவர் வடக்கு பக்கம் செல்லவேண்டும் .வடக்கிலிருந்து முருகனும் வேல்வீரர்களும் வேகமாக வந்துகொண்டிருக்க . அவர்களை நேருக்கு நேர் சந்தித்தே ஆகவேண்டிய இக்கட்டு இவருக்கு . அவர்கள் வந்த வேகத்திற்கு இவர் வேகமாக முன்னேற ஒரு பெரும் உரசல் நிகழ்ந்து தப்பி வடக்கு நோக்கி சென்றுவிடுவார் . இந்த சமயம் கூட்டத்தின் மேல் சூரனை போட்டுவிடும் நிலைகூட சிலமுறை நிகழ்ந்ததுண்டு .


   சென்றவர்கள் ஆனைமுக சூரனின் தலையில் ஆணி அடித்து பெரும்பலத்தோடு திரும்பிவர . முதல் தலை எடுக்க பிரம்ம பிரயத்தனம் மேற்கொள்ளவர் வேல் வீரர்கள் . தலையை கொடுக்கக்கூடாது என்பதில் சூரன் தரப்பு உறுதியாக இருக்கும் . அந்த நேரத்தில் பெரிதாக என்ன நடக்கிறதென்று தெரியாது வேல் வீரர்கள் சூரனை தொடர்ந்து ஓடுவார்கள் , திரும்பி வருவார்கள் . மக்களெல்லாம் எடுத்தாச்சா ! எடுத்தாச்சா !என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வர் . ஒருவழியாக 30-40 நிமிட போராட்டத்திற்கு பிறகு தலையை வேல் வீரர்களில் ஒருவர் எடுப்பார் . முதல் தலையை கொய்தவர் இளைப்பாறும் பந்தலில் பார்த்துக்கொண்டிருக்கும் முருகனின் காலடியில் வைப்பார் . அந்த 40 நிமிடமும் ஏறக்குறைய ஒரு கால்பந்து போட்டியின் சுவாரஸ்யாம் இருக்கும் . அந்த தலை கொய்தவரை "கோல்" போட்டதுக்கு இணையாக கொண்டாடுவர். எனக்கு தெரிந்து அதிகமான முறை அப்படி தலை கொய்தவர் கவி அண்ணன் . இரண்டாவது ஆடு முகம் அது அதிகபட்சம் 10 நிமிடங்களில் கொடுக்கப்படும் . இறுதியாக மாமரத்தில் மறைந்ததை உணர்த்த ஒரு மாமர கிளை பொருத்தி வரும் சூரபத்மனின் தலையை எடுக்க தேவசேனாபதியே நேரடியாக களத்துக்கு வருவார் . மேலே அமர்ந்திருக்கும் அர்ச்சகரே கையாலே அந்தத்தலையை எடுத்துவிடுவார் . அதோடு சம்பாரம் நிறைவுற்று எல்லோரும் வீடு திரும்பினாலும் நமக்கு பெரிய பலூனும் கல்லைகடையில் உப்புக்கல்லையும் வாங்கிக்கொடுத்தால்தான் நிறைவுறும் .அன்று இரவும் வேல் ஊர்வலம் ஆடு வாகனத்தில் வாகை சூடிய முருகரோடு நிகழும் . அன்று இரவு அவருக்கு போர் களைப்பு போக்க ரசம் சாதம் பிரசாதமாக படைக்கப்படும் என்று கேள்விப்பட்டதுண்டு . அடுத்தநாள் காலை வரை அந்த பலூன் தங்கினால் அதிசயம் . சம்பாரம் பார்க்க வராத பெருசுகள் யார்ரா தலையெடுத்தா ? என்று முதல் நாள் மேட்சின் ஸ்கொர் கேட்பது போல கேட்டுக்கொண்டிருப்பார்கள் .



     மறுநாள் காப்பு அவிழ்ப்பதும் பின் வள்ளித்திருமணமும் நடைபெறும் . எங்கள் பகுதியில் திருத்துறைப்பூண்டி , வலிவலம் மற்றும் புகழ்பெற்ற எட்டுக்குடி & சிக்கல் போன்ற ஊர்களில் கந்தசஷ்டி நடைபெற்றாலும் . மணக்குடி சூரசம்ஹாரம் பிரசித்திபெற்றது . காரணம் மாற்ற ஊர்களில் அந்தந்த கோவில்களால் அந்த விழாக்கள் நடத்தப்பட இங்கு கிராமவாசிகளே முனைப்போடு எடுத்து நடத்துவது. இந்த ஆண்டும் சம்பாரம் நடைபெறுகிறது காப்புக்கட்ட ஆள் 9க்கு குறைவாய் விருப்பம் தெரிவித்திருப்பதாக சொன்னார்கள் . ஆச்சர்யமாய் இருந்தது . காரணம் ஒரு காலத்தில் 12-15 பேர் காப்புக்கட்ட விருப்பம் தெரிவித்து வந்துவிட என்ன செய்வதென்று தெரியாமல் (எண்ணிக்கை 9 என்பதை மாற்ற முடியாது ) , சுப்ரமண்யர் சன்னிதியில் சிட்டில் பெயர் எழுதி 9 பெயரை தேர்ந்தெடுப்பர் . திருமணத்திற்கு முன் ஒரு முறையாவது வேல் தூக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கையும் கிராமத்தில் இருந்தது . ஒரு வேளை பக்தி குறைந்துவிட்டதா ! என்றால் அதுவும் இல்லை . கடுமையாக 40 நாள் விரதமிருந்து பழனிக்கு ஊரிலிருந்து நடந்தே செல்லும் ஒரு யாத்திரைக்குழு கடந்த பத்துவருடங்களாக சிரத்தையோடு இருக்கிறார்கள் . அப்படி இருக்க ஏன் இந்த விரதத்திற்கு தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை.


   திரைப்படங்களுக்கு முன்னோடி நாடகம் நாடகத்துக்கு முன்னோடி கூத்துகள் என்று சொல்வார்கள் அந்த கூத்திற்கும் முன்னோடி இதுபோன்ற விழாக்கள்` மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த கதையும் , காரைக்கால் மாங்கனி விழாவும் ,திருசெங்காட்டாங்குடி பிள்ளைக்கறி கதையும் இன்றும் விழாவாக நடத்தப்படுகின்றன .புராணத்தை என்னதான் வாசித்தாலும் ் புரியாத விஷயங்கள் , கண்முன்னே நிகழ்வுகளாய் நிகழ்த்த அப்படியே நம் மனதில் பதிகிறது. நான் சம்பாரம் பார்த்து ஒரு 12 வருடங்கள் ஆகிறது . இவையெல்லாமே நினைவடுக்கிலிருந்து மீட்டவை , அந்த அளவுக்கு அவை பதிந்து விட்டன . 

Wednesday, 11 October 2017

The Big Sick - 2017 - Michael Showalter





   புலம்பெயர்ந்தவர்கள் அந்நிய மண்ணில் வழியின்றி பொருந்திக்கொண்டு வாழும்பொழுது , தங்களின் வேர் கலாச்சாரத்தை விட முடியாமல் முடிந்த அளவு பின்பற்ற முயன்றுக்கொண்டிருக்க . அவர்களின் சந்ததிகள் பிறந்ததிலிருந்து ஒரு கலாச்சாரம் சூழ வளர்ந்துவிட்டு , அதுவரை அவர்கள் அதிகம் பார்த்திராத பெற்றோர் வழியே கேள்விப்பட்டிருந்த ஒரு கலாச்சாரத்தை பாவனை செய்ய எவ்வளவு சிரமப்படுகிறார்கள் ,என்பதை அழுத்தமாக தோட்ட விதம் இந்த படத்தை மற்றுமொரு நகைச்சுவை படம் என்று ஒதுக்கிவிடமுடியாதவாறு செய்கிறது .
இது கதை அல்ல , நாயகனாக நடித்த Kumail Nanjiani நிஜ வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் என்பது படத்தோடு நமக்கான பிணைப்பை கூட்டுகிறது .

Friday, 6 October 2017

SOLO - 2017 - Bejoy Nambiar



 




   கதை சொல்லிக்கொண்டிருக்கும் கதைச்சொல்லியின் காதில் விழும் ம்-கொட்டலுக்கும் அவரிடமிருந்து வெளிப்படப்போகும் அடுத்த சொல்லுக்கும் இடையேயான சில நொடிகள் இடைவெளியில் , கதைகேட்டுக்கொண்டிருக்கும் எதிராளியின் மனதில் சில கதைகள் வியாபித்து நிற்கும் . கேட்டுக்கொண்டிருப்பவரின் அனுபவம் மற்றும் அதுவரை அவர் சேகரித்து வைத்திருக்கும் தரவுகளைக்கொண்டு இந்தக்கதை இதை நோக்கித்தான் செல்கிறது என்ற ஒரு முடிவு அவரிடம் உருவாகும் . அடுத்த அடுத்த நிலைகளில் அதை உடைத்தலில் இருக்கிறது அவர் கேட்டுக்கொண்டிருக்கும் கதையின் சுவாரஸ்யமும் திண்மையும் . முற்றாக கதையின் முடிவு அவர் எதிர்ப்பார்த்ததாக இல்லாதபொழுது , ஒரு நல்ல சுவாரஸ்யமான கதைக்கேட்ட அனுபவமும் . அவரின் கதைத் தரவுகளில் ஒரு புதுக்கதையும் சேர்ந்துகொள்கிறது . அதுபோல நம்மை சுவாரஸ்யப்படுத்தும் நாலு கதைகளை சொல்கிறார் இயக்குனர்.

   இயக்குனர் அந்த நாலு கதைகளை படமாக்கிய விதத்தில் சில இடங்களில் பிசிறு தட்டினாலும் ஒரு சிறந்த கதைச்சொல்லியாக நம்மை ஆட்கொள்கிறார் .ஒரு ஸ்டைலிஷ் டைரக்டர் என்பதை அழுத்தமாக மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார் . நேர்த்தியான படைப்பாளி என்ற எல்லையை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அடுத்த அடுத்த படைப்புகளில் நிச்சயம் கைகூடும்.

Saturday, 16 September 2017

Thupparivaalan - 2017 - Mysskin



    தொடர்ந்து விழும் முடிச்சுகள் பின் அதை ஒவ் ஒன்றாக அவிழ்ப்பது இறுதியில் விழும் பெரும்முடிச்சை முற்றாக உடைப்பது என்ற அடிப்படையில்தான் கதை பயணிக்கிறது . ஆரம்பத்தில் அந்த சிறுவன் கனியனிடம் ஒரு விண்ணப்பம் வைப்பான் . சரி , அதை நிறைவேற்றினால் என்ன செய்வாய் என்ற கேள்விக்கும் அவனிடம் பதில் இருக்கும் . இறுதியில் அந்த நிகழ்வு நடக்கும் .நிகழும் என்று சொல்வதுதான் பொருந்தும் அது எப்படி நிகழ்ந்தது என்பதற்கு நாடகத்தனம் இல்லாத சில காரணங்கள் இயக்குனரிடம் இருக்கிறது . சொன்னதை நான் நிறைவேற்றிவிட்டேன் பார் ! என்று நாயகன் மார்தட்டமாட்டான் , அந்த நிகழ்வின் ஒரு அங்கமாக சாட்சியாக இருப்பான் . இந்த ஒரு காட்சிக்காகத்தான் இதுவரை பார்த்த இரண்டரை மணிநேர காட்சிகளும் என்று தோன்றியது . அந்த இறுதிக்காட்சிக்கு பின் திரை இருண்டு மிஷ்கின் பெயர் ஒளிர்ந்தது . இதுக்கு நீங்க கைத்தட்டலாம் சார் ! என்று காதோரம் அவரின் கணீர் குரல் கேட்ட பிரமையில் கைத்தட்டினேன் .

Friday, 15 September 2017

நம்ம நாட்டு அறிவுஜீவி



ஒரு காலத்தில் அனேக ஆசிரியர்கள் திமுக பற்றுடன் இருப்பார்கள் , குறிப்பாக அண்ணாதுரையின் ரசிகர்களாக .அண்ணாதுரை என்ற பெயரை முதன் முதலில் நான் கேள்விப்பட்டது இரண்டாம் வகுப்பு படிக்கையில்.அந்த வகுப்பு ஆசிரியராக இருந்த திருஞானம் சார் மூலமாக . அவர் தீவிர அண்ணாதுரை ரசிகர் . அடிக்கடி அவரைப்பற்றி பேசுவார் . எதிரே உட்கார்ந்திருக்கும் 6 வயது குழந்தைக்கு அது புரியுமா என்றெல்லாம் யோசிக்கமாட்டார் . அப்படிதான் ஒருமுறை " இந்நாட்டு இங்கர்சால் தென்னாட்டு பெர்னாட்ஷா " என்று சொல்ல . அதில் இங்கர்சால் , பேர்னாட்ஷா ஆகிய வார்த்தைகள் என்னவென்று புரியாமல் அப்பாவிடம் கேட்க . அவர்கள் வெளிநாட்டு அறிவுஜீவிகள் என்று சுருக்கமாக சொன்னார் . அப்போ நம்மநாட்டு அறிவுஜீவி அண்ணா என்ற வகையில் அப்போது புரிந்துகொண்டேன் .


   அண்ணாவைப்போலவே திருஞானம் சாருக்கும் பொடி போடும் பழக்கம் உண்டு . ஒருமுறை அவர் சொன்ன ஒரு சம்பவம் அதை சொன்னவிதமும் சுவாரஸ்யமாக இருந்தது . இப்படி தொடங்கினார் . நம்ம அண்ணா பெரும் மேதையாக இருந்தும் அவரை அறியாமல் சிறுவயதிலேயே இந்த பொடிப்போடும் கெட்ட பழக்கம் ஒட்டிக்கொண்டது .மேடையில் தொடர்ந்து உரையாற்றும் வேளையில் அவரால் பொடி போடாமல் இருக்கமுடியாது .அப்படி பொது மேடையில் பொடி போட்டால் அது அவரை தொடரும் ரசிகர்களிடம் தொண்டர்களிடம் பொடிப்போடும் பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகிவிடுமே என்ற பிரக்ஞை அவருக்கு இருந்தது . அந்தமாதிரி சமயத்தில் என்ன செய்வார் தெரியுமா ! இப்படி பொடியை எடுத்து கையின் மேல்பகுதியில் தேய்த்து வைத்துக்கொள்வார் (அப்படி சொல்லுகையில் இவரும் பொடியை எடுத்து எப்படி தேய்ப்பார் என்று தேய்த்து காட்டுவார் ) . பிறகு மேடை பேச்சின் இடையில் கையில் அவர் தேய்த்த இடத்தில் நாசியை வைத்து மூச்சை இழுத்துக்கொள்வார் (இவரும் அப்படியே இழுத்து பொடி போட்டுவிடுவார் ). அது வித்யாசமாக தெரியாது அவர் பொடியை சுகித்தார் என்பது மேடையில் இருக்கும் சிலரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பார் . எங்களுக்கு அண்ணா பொடி போட்ட விதமும் பொடி என்பது தவறான ஒன்று என்ற விஷயம் மட்டுமே அப்போது மண்டையில் ஏரியது, எங்களை ஏமாற்றி இவரும் பொடிபோட்டார் என்பது புரியாது  ;) . இப்போது யோசிக்கையில் தொண்டர்களிடம் அல்லவற்றை எடுத்துச்செல்லக்கூடாது என்று அண்ணாவிற்கு இருந்த அதே பிரக்ஞை அந்த ஆசிரியருக்கும் இருந்திருக்கிறது என்பது புரிகிறது . இன்று அண்ணா பிறந்தநாள் என்று காலெண்டர் காட்டுகையில் அண்ணாவின் இந்த சம்பவமும் அவரை அறிமுக

Tuesday, 5 September 2017

கிராம "savior"



  சிறுவயதில் பள்ளி விடுமுறை ஒரு பொருட்டே அல்ல . டியூசன் விடுமுறையாக இருந்தால்தான் மகிழ்ச்சி .ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவே . காரணம் ,என்ன இடி இடித்தாலும் மழை பெய்தாலும் டியூஷன் இருக்கும் . காலை & மாலை என்று இரு வேளையும் உண்டு . அது கிராமசேவர் நடத்தும் ட்யூஷன் , அதுஒரு அணையாவிளக்கு. கிராமத்து பிள்ளைகள் பைகளை சுமந்துக்கொண்டு கிராமத்தின் தென் திசை நோக்கி நடப்பர் .கிராமத்தின் தென்முகக்கடவுள் அங்குதான் வீற்றிருப்பார். "கிராமசேவர்" என்று மக்களால் விளிக்கப்பட்டாலும் அவர் "கிராமசேவகர்" என்ற பணி நிமித்தம் ஊருக்கு வந்து பின் முழுதாக ஊர்க்காரர் ஆகிப்போனவர் . பலருக்கு இன்றும் அவர் பெயர் தெரியாது , கிராமசேவகர் என்றால்தான் விளங்கும். அவரது உண்மையான பெயர் வெங்கடேசன்.


  சுமார் 50 வருடங்களுக்கு முன் காவேரியின் கடைமடைப்பகுதியான எங்கள் கிராமத்திற்கு அன்றைய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியாக வெங்கடேசன் வந்து சேர்ந்தார் . இன்றைய கிராம நிர்வாக அலுவலருக்கு இணையான பதவி அது . கிராமத்தில் மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது , காலரா போன்ற நோய்களின் தன்மை மற்றும் அது பரவுவது பற்றிய சரியான புரிதலை மக்களிடம் கொண்டுவருது போன்றவையே அந்த பதவியின் முக்கிய பணிகள் . பிற்காலத்தில் எப்படி அவர் டியூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார் என்று தெரியாது . 70 துகளிலிருந்து இந்த பணியை செய்துவருகிறார் .

  அந்த டியூஷன் என்பது இப்போது இருப்பது போல ஷிப்ட் முறையில் யார் மாணவன் என்பதே தெரியாமல் வந்து கடைமையை முடித்து செல்லும் ஆசிரியர்கள் நிறைந்தது போல அல்ல .ஒவ்வொரு மாணவனின் படிப்பார்வத்தின் நீள அகலம் தெரிந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கவனம் செலுத்துவார் . நான் 92-95 காலகட்டங்களில் அங்கு படிக்கும் வாய்ப்பு அமைந்தது . அது நான்கைந்து அரசு காலனி வீடுகள் நிறைந்த பகுதி .ஊரின் தென் எல்லையில் வேப்ப மர நிழல் சூழ அமைதியாக இருக்கும் .டியூஷன் செல்கையில் எதிர்ப்படும் குறவன் கோவிலின் அமானுஷ்யமும் தைல மர வாசமும் எங்கோ ஒரு புது நிலப்பரப்பில் நுழையும் அனுபவத்தை ஒவ்வொருமுறையும் கொடுக்கும் . எப்போது போனாலும் மரத்து நிழலில் குழு குழுவாக வகுப்பு வாரியாக பிரிந்து ,கொடுக்கப்பட்ட பாடங்களை படித்துக்கொண்டிருப்பது மந்திர உச்சாடனம் உருகொட்டுவதைப் போல ஒத்திசைவாய் காதுகளை வந்து முட்டும் . அந்தக்கால குருகுலம் போன்றே தோற்றமளிக்கும். மையமாக துரோணர் போல அமர்ந்திருப்பார் கிராமசேவர். உண்மையில் அவர் எங்கள் கிராமத்தின் துரோணர்தான், ஆனால் கட்டைவிரலை காணிக்கை கேட்காத துரோணர் , அவர் எவரிடமும் பாகுபாடு பார்த்ததே இல்லை . அன்றைய தேதிக்கு டியூஷன் பீஸ் மாதத்துக்கு 10 ரூ , அதையும் கறாராக வாங்கமாட்டார் .

   வெற்றுடம்புடன் வேட்டி மட்டும் தரித்து கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பார். நாம் நம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து ஒரு அரைமணிநேரம் அன்றைக்கு அவர் குறிப்பிட்ட பாடத்தில் இதையெல்லாம் கேட்பார் என்று படித்திருக்க . நாமக்கு தெரியாத கேள்வியை சரியாக கேட்டு நம்மை சிக்க வைப்பார் . அவர் சொல்லிக்கொடுத்த அடிப்படை ஆங்கில இலக்கணமும் & கணிதமும் அப்படி இறங்கும் நம் மனதில். பிற்காலங்களில் பல கடுமையான பாடங்களுக்கு அதுதான் பாலபாடம் என்பது அப்பொது தெரியாது .அவர் அடித்ததே கிடையாது அதிகபட்சமாக "உன் பொண்டாட்டிய நண்டு கடிக்க " என்று திட்டுவார். அத்தகைய சமயங்களில் எல்லோரும் "கெக்கே பிக்கே" என்று சிரித்து அடங்குவது பின்னணியில் கேட்கும் .

  பூஜை புனஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உடையவர் .அவர் வீட்டில் அடிக்கடி ஏதேனும் ஒரு பூஜை நடந்துக்கொண்டே இருக்கும் . அதுபோன்ற சமயங்களில் டீச்சர் (அவர் மனைவி ) சிறு பாத்திரத்தில் பிரசாத்தை எடுத்துவந்து சிறு கரண்டியால் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார் . எப்படி இந்த சிறு பாத்திரத்திலிருந்து வந்துகொண்டே இருக்கிறது என்று சிறுவயதில் யோசித்ததுண்டு . அது மணிமேகலையின் அட்சயபாத்திரம் போல அல்ல அல்ல குறையாது . அனைவருக்கும் அளவாக கொடுக்கப்படும் .


  எங்கள் கிராமத்தில் கல்வி பற்றிய ப்ரக்ஞையை மக்களிடம் விதைத்தவர் அவர் . அந்த காலங்களில் கிராம மாணவர்கள் படிக்க ஏதுவான வசதி வீடுகளில் இருக்காது . மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான ஏதுவான சூழலை அமைத்து கொடுத்தார் . சில அற்புதங்களை நிகழ்த்த முடியாது நிகழ்வதற்கான சூழலை ஏற்படுத்தினால் போதும் என்பார்கள் . அந்த சூட்சமத்தை புரிந்த மாமனிதர் அவர். அவர் ஏற்படுத்திக்கொடுத்த சூழலை பயன்படுத்தி அற்புதமாக வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள் பலர் . எனக்கு பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தியை பார்க்கும் பொது அவர் ஞாபகம் வரும் . அந்த கதாபாத்திரம் செய்த சில செயல்களை அவரின் எல்லைக்குட்பட்டு செய்திருக்கிறார் . இப்பொழுது ஏறக்குறைய 85-90 வயது இருக்கும் அவருக்கு , ஊர் பேர் தெரியாத ஒரு கிராமத்திற்கு இப்படி தன் வாழ்நாளையே கொடுக்கும் மனம் எப்படி ? ஒருவருக்கு வந்தது என்பது இன்றும் என்னுள் இருக்கும் கேள்வி . மணக்குடியில் பிறந்து கிராமசேவரிடம் கல்வி கற்காதவர்கள் மிகக்குறைவு . அது ஒரு நாற்றாங்கால் அவர் ஊற்றிய உயிர் தண்ணியும் உரமும் கொண்டு உரு பெற்ற மரங்கள் உலகின் பல மூலைகளில் இன்று நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறன்றன . அவர் அமைதியாக தன் அந்திமக்காலத்தை அதே கிராமத்தில் கழித்துக்கொண்டிருக்கிறார் . அவர் எப்படி அந்த " கிராம சேவகர்" அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியாது . ஆனால் அந்த பெயருக்கு தகுந்தாற்போல எங்கள் கிராமத்திற்கு அவர் செய்த சேவை அளப்பெரியது . மக்கள் அவரை விளிப்பது போல அவர் எங்களின் கிராம "savior " .

Friday, 1 September 2017

Arjun Reddy - 2017 - Sandeep Vanga




   
  ஒரு கதை கால ஓட்டத்தில் தன் ஸ்திரத்தன்மையை இழந்துவிடாமல் , களம் , கதாபாத்திரங்கங்கள் மாறினாலும் அதன் ஸ்வாரஸ்யத்தை இழக்காமல் தன்னை மீள் உருவாக்கம் செய்துகொள்கிறது என்றால் ! அதை காவிய கதையாகக்கொள்ளலாம் என்றால் ! இந்தப்படம் அதுபோன்றதொரு காவியக்கதையின் இன்றைய பரிமாணம் .
இந்த கதையை பரிமாறிய விதத்தில் இயக்குனர் தனித்து தெரிகிறார் .அவரின் மேதமைத்தன்மை அர்ஜுன் கதாபாத்திரத்தின் வார்ப்பில் தெரிந்தது .


    குடும்பம் தோழர்கள் என்று சுற்றியுள்ள ஏனைய மனிதர்கள் புறவயமாக தவறான விஷயம் என்று சுட்டும் அனேகத்தையும் தன்னகத்தே சூடிக் கொண்டவன் ,ஒரே ஒரு விஷயத்தில் அவர்களிடமிருந்து மேம்பாட்டு நிற்கிறான். அகவயமாக அவர்களிடம் இல்லாத தன்னறம் இவனிடம் இருக்கிறது . அதுதான் அந்த கதாப்பாத்திரத்தின் ஆன்மா . அதுவே படத்தின் மையச்சரடாக நிற்கிறது . அதன் தன்னறத்தின் அதீத வெளிப்பாடு இறுதிக்காட்சியிலும் அழகாக வெளிப்பட்டிருக்கும் .அந்த காதாபாத்திரத்தின் வார்ப்பே அந்த காவியக்கதையை ஒரு படி மேலான தளத்தில் நிறுத்தி நம்மை வசீகரிக்கிறது .

Thursday, 31 August 2017

நாமளா சொல்லிகிட்டாதான் உண்டு


நிசப்த சாலையில்
வீடு திரும்புகையில்.
தம்ஸப் காட்டி
நிறுத்த முற்பட்டவனை
தவிர்த்துவிட்டு வந்தவன்.
சுமந்து திரிகிறேன்
இரண்டு நாட்களாய் !

31.08.2018

Tuesday, 22 August 2017

Ramante edanthottam - 2017 - Ranjith Sankar



    அவர்களுக்குள் காதல் இருக்கிறது .ஒருமுறை அதைப்பற்றி பேசியும் விடுகின்றனர் . இருந்தும் அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் நிலை எப்போதும் இல்லை என்ற தெளிவு அவர்களிடம் இருக்கிறது . குறிப்பாக அவனிடம் அதிகமாக . அந்த உறவை அதே நிலையில் பராமரிக்கலாம் என்ற முடிவோடு பயணிக்கின்றனர் . இன்னும் சிறப்பாக எடுத்திருக்கவேண்டிய படம் . கொஞ்சம் கனமான விஷயத்தை சாதாரணமாக கையாண்டுவிட்டதாக தோன்றியது . In the Mood for Love - படத்தின் ஆன்மாவிலிருந்து ஒரு துளியை பரிமாற முயற்சித்திருக்கின்றனர் . அந்த அளவுக்கு செம்மை இல்லாவிடினும் அது போன்ற பாவனையே நம்மை கவர்கிறது . 

Friday, 18 August 2017

Comrades: Almost a Love Story - 1996 - Peter Chan



தோழர்கள் : ஏறக்குறைய ஒரு காதல் கதை .



  காதலில் நட்பு வரலாம் , நட்பில் காதல் வரக்கூடாது என்றெல்லாம் என்னதான் பேசிக்கொண்டிருந்தாலும் ,நிதர்சனத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நட்பில் ஒரு காதல் வந்தால் ! . அப்படி ஒரு வித்யாசமான உறவைப் பற்றித்தான் படம் பேசுகிறாது.
எனக்காக, நீ ஹாங்காங் வரல , உனக்காக நான் ஹாங்காங் வரல! என்று அவனை மடைத் திருப்புகையில் , அவன் காதலிக்கு வாங்கும் அதே பரிசை இவளுக்கும் வாங்குகையில் அவனைப்பார்க்கும் பார்வை ! இதே போன்ற ஒரு நட்பு உன் காதலிக்கு இருந்தால் அது உனக்கு தெரியவந்தால் என்ன செய்வ ? என்று அவனை விக்கித்து நிற்க செய்கையில் நடிப்பின் நகாசுகளை நமக்கு கோடிட்டு காட்டுகிறார் Maggie Cheung .


  சிறிது நேரம் வந்தாலும் அதிகம் கவர்ந்தது அந்த கேங்ஸ்டர் கதாபாத்திரம் . அவனையே நெனச்சிட்டு இருக்காத தூங்கு , என்று சொல்லும் நகைச்சுவையும் . அவள் விலக நினைத்து அதை சொல்ல வருகையில் ! அவள் சொல்வதற்கு முன்னே , நீ ஏன் என்னையே கட்டிட்டு அழுற , உனக்கு பிடிச்ச யாரோடையாவது வாழலாம்ல என்று செல்லுகையில் அந்த பாத்திரத்தின் மீது நமக்கும் பற்று அதிகமாகிறது . நன்றாக கவனித்தால் ஒரு கேங்ஸ்டரின் முழு வாழ்வும் பட்டும் படாமல் சில வசனங்கள் சில காட்சிகள் மூலமும் படத்தில் விரவிக்கிடக்கிறது .


  ஒரு காதல் கதையாக மட்டும் இந்தப் படத்தை நகர்த்தாமல் ஹாங்காங் நகரத்தின் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் கதையினுடே பின்னிப்பிசைந்ததில் இயக்குனரின் திறன் தெரிகிறது . 90கள் ஹாங்காங் நகர வரலாற்றில் முக்கியமான காலகட்டம் இங்கிலாந்து வசமிருந்த குத்தகைக்காலம் முடிந்து சீன வசம் திரும்பிய காலக்கட்டம் அந்த மாறுதல்கள் நம்மை உறுத்தாத வண்ணம் பின்புலத்தில் நிகழ்ந்தவண்ணமிருக்கிறது .

Monday, 14 August 2017

Cléo from 5 to 7 - 1962 - Agnès Varda



   ஒரு புலி நமக்கு பின்னே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . நமது பிரக்ஞையில் அது வராத வரை அதாவது நமக்கு அது இருப்பது தெரியாதவரை . அங்கு நிதர்சனத்தில் புலி இருந்தாலும் நமக்கு அது இல்லைதான் . அதன் இருப்பை உணர்ந்தால் ஏற்படும் பதற்றம், பயம் எதுவுமே அந்த நிலையில் நம்முள் இருக்காது .இதேபோன்று இல்லாத புலியையும் நாம் கற்பனை செய்து பீதி கொள்ளலாம் .இரண்டிலும் மனமே மையம் , இது ஒரு மாய விளையாட்டு நாமும் பல முறை நம்மையறியாமல் அந்த விளையாட்டில் பங்கு பெற்றிருப்போம். அப்படி ஒரு மனவிளையாட்டைப் பற்றிய படம் இது .


  பிரபல பாடகி அவள் , தனக்கு புற்று நோய் வந்திருப்பதாக நினைக்கிறாள் . அதற்கான சோதனை முடிவு மாலை 7 மணிக்கு கிடைக்கவிருக்கிறது . இந்த இடைப்பட்ட இரண்டுமணி நேரத்தில் அவளைச்சுற்றி நடப்பவை எல்லாமே எதிர்மறையாக தோன்றுகிறது . எல்லா சம்பவங்களும் அவளை சாவை பற்றிய எண்ணத்திற்கே இட்டு செல்கின்றன .அவளது மனக்கிலேசமும் அதிலிருந்து அவள் வெளிவர படும் பாடும் . 5 மணியிலிருந்து 7 மணிவரை இரண்டுமணிநேரம் அவள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதும்தான் படம் . 55 ஆண்டுகளுக்குபின்னும் நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறது .

Saturday, 12 August 2017


Tharamai - Ram - 2018




பல படங்களில் சில குறிப்பிட்ட
கலைஞர்களின் வீச்சு அதிகமாக இருக்கும் . உதாரணத்திற்கு இயக்குனரின் அல்லது இசையமைப்பாளரின் மேதமைத் தன்மை மற்றவர்களைக்காட்டிலும் கொஞ்சம் துருத்திக்கொண்டு தெரியும் . இந்த படத்தில் இயக்குனர் , ஒளிப்பதிவாளர் ,இசையமைப்பாளர் என்று மூன்று பேர். ஆண்ட்ரியாவுடன் சேர்த்து நாலு பேர் என்றுகூட செல்லலாம் . எந்த இடத்தில் எவருக்கு இடம் தரவேண்டும் (அல்லது எடுத்துக்கொள்ளவேண்டும் ) என்று இவர்களுக்கு புரிந்திருக்கிறது .கதை அந்த ஒத்த அலைநீளத்தை அவர்களுக்குள் பரிணமிக்க செய்திருக்கிறது நால்வரும் இந்த கதைக்காக தம் துறையின் முழு வீச்சையும் தந்துள்ளனர் .

படம் என்ன பேசுகிறது என்பது முக்கியமாகிப்போவதால் , எப்படி பேசியது என்பது முக்கியமாகப்படவில்லை . இதுவரை தமிழ் திரையுலகம் ஆண்பெண் உறவு சிக்கல் பற்றி பேசிய படங்களை பட்டியலிட்டால் ,(பட்டியல் கொஞ்சம் சிறுசாகத்தான் இருக்கும் ) அந்த பட்டியலில் தரமணியை முதலில் எழுதவேண்டி வரும் .

💕💕ராம் - தேனி ஈஷ்வர் - யுவன் - ஆண்ட்ரியா

Thursday, 10 August 2017

உள்ளங்கவர் கள்வர்கள் - அன்குர் ராவுத்தர்



  இயோபு ஆங்கிலேயரிடம் அடிமை சேவகம் செய்த விசுவாசத்துக்கு பரிசாக பெற்ற ஒரு சிறு நிலப்பரப்பில் குறுநில மன்னன் போல ஆதிக்கம் செலுத்தி வருகின்றார் . அங்கு அனுமதி பெறாமல் மரம் வெட்டியதாக சிலரை பிடித்து வருகின்றான் அவர் மகன் . விசாரித்ததில் மதுரை அன்குர் ராவுத்தர் ஆட்கள் என்றும் அந்த கூட்டத்தில் அவன் தம்பியும் இருக்கிறன் என்று சொல்கிறார்கள் .


   இந்த இறுக்கமான சூழலில் அன்குர் ராவுத்தர் அங்கு வருகிறான் ( சில வில்லன்களுக்குதான் அப்படி சிறப்பான அறிமுகக்காட்சி கிடைக்கும் ) , பெரியவருக்கு ஒரு அத்தர் பரிசு கொடுக்கிறான் ஏற்க மறுக்கிறார் . உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு பண்ணிருக்கணும். எங்களிடம் அரசு அனுமதி இருக்கு என்று ஒரு சிட்டையை காட்ட ,ஆக்ரோஷமாகிறார். இது இயோபோட ராஜ்ஜியம்! இங்க எல்லாமே நான்தான் என்று மிரட்டுகிறார். அமைதியாய் கேட்டுக்கொண்டிருக்கும் அன்குர், நான் ஒரு வியாபாரிங்க உங்க தயவு இல்லாம எதுவும் பண்ணமுடியாது! என்கிறான். கோபம் குறையாமல் வெளியே போ ! என்கிறார் பெரியவர் . மெலிதாக புன்முறுவலுடன் வெளியேறுகிறான் .

  அப்போது சற்றே கோபம் தணிந்த இயோபு , இதெல்லாம் பெரிய ராவுத்தருக்கு தெரியுமா ?. அவருக்கு இந்த மாதிரி விஷயங்கள்லாம் பிடிக்காதே என்கிறார் . அப்பா ஆறு மாசத்துக்கு முன்ன இறந்துட்டாரு என அன்குர் சொல்ல . எப்படி? என்கிறார் . இந்தக்காலத்துக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் . என்னோட தொழில் விஷயங்கள்ல அதிகமா தலையிட்டார் . ஒரு தலைகாணியை முகத்துல அழுத்தி மேல அனுப்பிட்டோம். நானும் சித்தப்பாவும் . என்று சொல்லிவிட்டு அமைதியா அங்கிருந்து வெளியேறுவான் . இயோபு அதிர்ச்சியோடு அவனை பார்த்துக்கொண்டே இருப்பார் .அது இயோபுக்கு இடப்பட்ட எச்சரிக்கை என்பது அப்போது அவருக்கு உரைக்காது . பின்னணியில் இந்த இசை இழைந்துக்கொண்டிருக்கும் .


Monday, 7 August 2017


வயது வந்தவர்களுக்கு மட்டும்



    ஏதோ ஒன்றின் இருப்பு தேவையற்று போகும்போது , கண்ணனுக்குத் தெரியாத ஒரு மாய கண்ணியிலிருந்து அவை விடுவிக்கப்பட்டு அற்றுப்போகும் , என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு படி என்பர். அது போலவே கலை , இலக்கியங்களிலும் நிகழ்கின்றன, தேவையற்றவை அற்று போகின்றன . இந்த பாலியல் கதைகளும் அப்படியே ் கையடக்க கதைச்சொல்லிகள் வந்துவிட்ட காரணத்தால் அந்த கண்ணியை விட்டு விலக முற்பட்ட தருணத்தில் , அதை தடுத்து நிறுத்தி நித்யமாக விளங்க பதிவு செய்திருக்கின்றனர் கிராவும் கழனியூரானும்.

   எத்தனை மனிதமனங்களை தாண்டி பயணப்பட்டு வந்திருக்கும் அந்த கதைகள் . இவர்கள் இந்த முயற்சியை எடுக்காமல் இருந்திருந்தால் அவை காற்றோடு கலந்திருக்கும் . தளபதியாய் கழனியூரன் சேகரிக்க கிரா தொகுத்திருக்கிறார் . ஆரம்பக்காலங்களில் சில தொகுப்புகளுக்கு தெக்கத்தி கிராமங்களில் அலைந்து திரிந்து சேகாரம் செய்தவற்றை கிராவிடம் கொண்டுவந்து கொடுக்க . சரியாக சில இடைச்செருகல்களை கண்டுபிடித்துவிடுவாராம் . என்னயா சொந்த சரக்க சேர்த்துட்டியா? என்று குறும்பு சிரிப்பு சிரிப்பாராம். எப்படி கண்டு பிடிசீங்க என்று இவர் கேட்க . துருத்திட்டு தெரியுதய்யா . மக்களின் கதை இயல்பா இருக்கும் பாண்டித்யத்த உள்ள வைக்கமாட்டாங்க என்பாராம் . பின் கிடைத்ததை மட்டுமே அவரிடம் கொடுக்க ஆரம்பித்தாராம் அவர் .


   இந்த பாலியல் கதைகளில் சிலவற்றை நாம் பள்ளிக்காலங்களில் கடந்து வந்திருப்போம் . முன்னுரையில் அவர் சொல்வது போல உறவுகள் எல்லாம் பின்னே முளைத்தவை எல்லாவற்றிற்கும் முந்தியது இவை . எனவே கலாச்சார & உறவு கட்டுமானங்கள் இல்லாத காலத்திய கதைகள் என்ற பிரக்ஞையோடு கதைகளை அணுகவேண்டி இருக்கிறது . பெரிதாக படிப்பறிவு இல்லாமல் இருந்த அந்தகால மக்களுக்கு பாலியல் விஷயங்களை & பாலியல் சிக்கல்களை எளிதில் புரியவைக்க இவை நிச்சயம் ஆகச்சிறந்த கருவியாய் உதவியிருக்கும் .

   ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு இது எந்த விஷயத்தை பேசுகிறது என்று யோசிக்க வேண்டி இருந்தது . எல்லா கதைகளும் படித்துவிட்டு எளிதாக கடந்துவிடக்கூடியதாக இருந்தாலும் இரண்டு கதைகள் மறக்கமுடியாத அளவிற்கு திண்மையாக இருந்தது . ஒன்று அண்ணியின் சாபம் வாங்கி குழந்தை இல்லாமல் , அண்ணி தரும் விமோச்சனத்துக்காக காத்து நிற்கும் ஒருத்தனின் கதை அந்த கதையில் ஒருவித புராண அம்சம் மிளிர்ந்தது . அடுத்து அந்த கிறுக்கு ராஜா கதை . எல்லாரும் அவனை ஒரு காமுகனாக சித்தரிக்க . அந்த முடிவு ஒருவித ஆன்மிக நிலையை பற்றி விவாதித்தது . படம் முழுதும் காமமும் வன்முறையும் வியாபித்து இருந்தாலும் இறுதியில் அறத்திற்கு இட்டுச்செல்லும் கிம்-கி-டுக் படம் பார்த்த உணர்வைக்கொடுத்தது அந்த ஒன்றரை பக்க கதை .


   சாதாரணமாக கதைகள் எழுத்தாளரின் மனதில் வியாபித்து எழுத்துருவாகும் பின் மக்களின் மனதில் புழங்கும் , அதற்கு மாறாக இந்த கதைகள் மக்களின் மனங்களில் புழங்கி ஒரு மேதமை எழுத்தாளரால் எழுத்துருவாக்கப்பட்டுள்ளது . இன்றைய சூழலில் இந்த கதைகளின் தேவை என்ன என்றெல்லாம் யோசிக்க தோன்றவில்லை, பாலியல் சிக்கல்களின் விகாரங்களை வெளிச்சமிட்டு காட்டி விவாதித்த ஒரு படிப்பறிவு இல்லாத பண்பட்ட சமூகம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கு சான்றாக நிற்கின்றன இந்த கதைகள் . அடிப்படையிலேயே ஆவணப்படுத்தலில் நாம் பெருமளவில் பின்தங்கி இருக்கும் வேளையில் . இது போன்ற பணிகள் மிக முக்கியமானது . தஞ்சை மண்ணில் புழங்கிய மக்களின் கதையை தஞ்சை நாடோடிக்கதைகள் என்று ஒரு தொகுப்பாக தஞ்சை பிரகாஷ் ஆவணப்படுத்தியிருக்கிறார் .பெரும் ஆளுமைகளுக்கு இது போன்ற தொன்மங்களை ஆவணப்படுத்துவதின் அவசியம் மற்றும் அவசரம் புரிந்திருக்கிறது .

வயது வந்தவர்களுக்கு மட்டும் 
(நாட்டுப்புற பாலியல் கதைகள் )
தொகுப்பு : கி.ராஜநாராயணன் & கழனியூரான்
பதிப்பகம் :அகரம் பதிப்பகம்

Monday, 31 July 2017


கவிதமாதிரிஏதோஒன்னு


நித்தம் குருதி வழியும்
என்றோ மரித்த மரம்.
கசாப்புக்கடை .

31.07.2017





குழந்தை மனதை ஏமாற்றக்கூடாது,
என்ற எண்ணத்திற்கு அடியில்
ஒரு ஏமாற்றத்தின் சுவடு பதிந்துள்ளது !

13.07.17

.............................................................

 
நித்தம் குருதி வழியும் 
என்றோ மரித்த மரம்.
கசாப்புக்கடை . 

01.08.17

Wednesday, 19 July 2017

முகிழ்த்தலும் முறித்தலும்....


அடிப்படையில் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான காட்சிகள்தான் . இந்தக்காட்சிகளின் மையம் ஒன்று போலவே தோன்றுகிறது . இரண்டுக்காட்சிகளிலும் ஒரு முக்கியமான முடிவை ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்துகிறார் , அந்த விஷயம் அவளைச் சேரும் பொது அவர்கள் அங்கு இருக்க விரும்பவில்லை . அவர்கள் தங்களுக்கே புரிந்த ஒரு சங்கேத பாஷையில் உரையாடிக்கொள்கின்றனர் . முதல் காட்சி ஒரு காதலை முகிழ்த்தெடுத்தது மற்றது முறிக்கிறது . இரண்டுமே இரண்டு மேதமைக்கலைஞர்களின் ஆக்கங்கள் .





[ Namukku Parkkan Munthiri Thoppukal - 1986 -Padmarajan ]

சாலமனின் எதிர்பாராத வருகையும் , அதற்கு தயாராய் இருப்பது போல எதிர்கொள்ளும் அவனது தாயாரின் அணுகுமுறையும் , அந்த பாத்திரம் எப்படிப்பட்டது என்பதை நமக்கு சொல்லிவிடுகிறது . நடு இரவில் வருவான் , பின் சொல்லாமல் கொள்ளாமல் செல்பவன் . ஒரு நாடோடியின் அணுகுமுறை கொண்டவன் . ( சார்லி படத்து துல்கரின் கதாப்பாத்திரம் சாலமனின் சாயல் கொண்டிருந்தது ). அப்படி பட்டவன் அந்த முறை திரும்பி செல்வதை தாமதிக்கிறான் . பக்கத்து வீட்டில் இருக்கும் சோபியா அவனை எதோ ஒரு விதத்தில் வசீகரிக்கிறாள் . இந்த முறை சாலமனின் அணுகுமுறையின் இருக்கும் மாற்றத்தை குடும்பத்தினர் ஒருவாறாக யூகிக்கின்றனர் இருந்தும் பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை .
ஒருநாள் இரு வீட்டிற்கும் இடையே இருக்கும் வேலியை சரிசெய்யும் சோபியாவிடம் பேச்சு கொடுக்கிறான் .எப்போ திரும்ப செல்கிறாய் ? என்கிறாள் . இன்னைக்கு இருக்கலாம் என்கிறான் .ஏதேதோ பேசிவிட்டு திராச்சைத்தோட்டத்தை பற்றிய பேச்சு வருகிறது. திராச்சை தோட்டங்களை பார்த்திருக்கிறாயா ? என்கிறான் , பைபிளில் வரும் சாலமன் ராஜாவின் திராச்சை தோட்டங்களைப்பற்றி வாசித்ததுண்டு நேரில் பார்த்ததில்லை என்கிறாள் . உன்னை ஒருமுறை அங்கு அழைத்து செல்வேன் என்கிறான் . சாலமனின் song of songs - ல் வருவதுபோல என்று அந்த அத்தியாயத்தை சொல்ல ஆரம்பிக்கிறான் . ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி இதற்கு பிறகு தெரியுமா என்கிறான் . மறந்துவிட்டது என்கிறாள்.மீதியை சொல்லுங்கள் என்று வற்புறுத்துகிறாள் . பைபிளை எடுத்து அந்த அத்தியாயத்தை வாசி . என்று சொல்லிவிட்டு புன்முறுவலோடு செல்கிறான் . அவள் உடனே வீட்டிற்கு சென்று அந்த அத்தியாயத்தை வாசிக்கிறாள் . அதில் வரும் சாலமன் ராஜ சொல்வதுபோல இருக்கும் காதல் கசியும் அந்த ஷரத்துகள், இந்த சாலமன் சொல்வது போல அவளுக்கு படுகிறது . அவனது காதலை அவள் உணர்ந்து கொள்கிறாள்.




[Fallen Angels - 1995 - Wong Kar-wai ]


ஓங் -சி ஒரு paid killer அவனுக்கு தொழில்சார்ந்த அனைத்து வித உதவிகளும் புரிபவள் அவள் . அவன் செய்யும் கொலைகளுக்கு வேவு பார்த்து ஸ்கெட்ச் போட்டு தருவதே அவள்தான் . பெரிதாக இருவரும் சந்தித்துக்கொள்வதில்லை இருந்தும் அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பு .அவ்வப்போது அவன் போகும் இரவுவிடுதிக்கு சென்று அவன் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்திருப்பாள் . ஒருநாள் தன் விருப்பத்தை அவனிடம் வெளிப்படுத்துகிறாள் , அதைப்பற்றிய முடிவை அவன் சொல்லவேண்டும் என்று வேண்டி நிற்கிறாள். அவனால் சரியாக ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை . அவன் தொழிலுக்கு இதுபோன்ற விவகாரங்கள் சரிவராது என்ற எண்ணம் கொண்டவன் .அவன் தொழிலுக்கு அவள் சிறந்த துணையாக இருக்கமுடியும் ஆனால் அவன் வாழ்கையில் அவள் வருவது சரியாக இருக்காது என்ற முடிவை அவன் எப்போதும் செல்லும் அந்த விடுதியில் எடுக்கிறான் . அங்கு அவளும் வருவாள் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது .அந்த சிப்பந்தியிடன் ஒரு சில்லரை காசைக் கொடுத்து , என்னைத்தேடி ஒருத்தி வருவாள் . நான் இனி இங்கு வரமாட்டேன் இதை அவளிடம் கொடுத்து 1818 என்று சொல்லு. என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான் . அந்த விடுதியில் ம்யூசிக் பிளேயரில் அவள் எப்போதும் பாடல்கள் கேட்கும் வழக்கமுடையவள் என்பது அவனுக்கு தெரியும் . பின் அவள் அந்த 1818 பாடலை ஒலிக்கவிடுகிறாள் . அவனை மறந்துவிடு என்று பொருள் தொனிக்கும் அந்த பாடல் இழைகிறது . அந்த முறிவை அவள் உணர்ந்துக்கொள்கிறாள் .


Monday, 17 July 2017

The Handmaid's Tale - 1990 - Volker Schlöndorff





      இப்படியெல்லாம் நடக்குமா ? என்று நாம் யோசிப்பதற்கு முன்பாகவே .அடுத்தடுத்து வேகமாக நகரும் ஆரம்பக் காட்சிகளைக்கொண்டு இதுதான் களம் இந்த எல்லைக்குள்தான் கதை என்று முதல் 15 நிமிடத்தில் நம்மை தயார் படுத்திவிடுகின்றனர் . அந்தக்களத்துக்குள் எவ்வளவு சிக்கலாக முடிச்சுகளைப்போடலாமோ அவ்வளவு சிக்கலாக போட்டு இறுதியில் எளிதாக முடிச்சுகளை அவிழ்க்கிறார் இயக்குனர்.இது நடப்பது ஒரு கற்பனையான கதைக்களத்தில் என்ற எண்ணம் கதை நகர நகர மாறுகிறது . கதையில் வரும் பெண்களும் அவர்களை அந்த மனிதர்கள் நடத்தும் விதமும் விசித்திரமாக தோன்றினாலும் .அதில் நிகழும் பல சம்பவங்கள் சமகாலத்தில் நாம் நிகழ்த்திகொண்டிருப்பதுதானே ! அதை காத்திரமாக காட்சிகளில் காட்டி நம்மை கதிகலங்க வைக்கிறார் இயக்குனர்.


   பெண்களுக்கான உரிமைகள் சார்ந்த நமது நிலைப்பாடுகளின் மேல் சில கேள்விகளை எழுப்பி செல்கிறது இந்த படம் .
சமீபமாக The Handmaid's Tale​ - என்ற புது சீரியல் பற்றிய பரிந்துரைகள் பல சினிமா சம்பத்தப்பட்ட தளங்களில் வந்தன . அதை பற்றிய தகவல்களை தேடியபொழுது அது 1985-ல் எழுதப்பட்ட ஒரு நாவலை தழுவி எடுக்கிப்படுகிறது என்றும் . 1990 ல் அதே பெயரில் ஒரு படம் வந்திருக்கிறது என்ற தகவல் கிடைக்க . இந்த படத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டது . படம் பார்த்த பிறகு அந்த சீரியலை பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது .

Monday, 10 July 2017

The Royal Tailor - 2014 - Lee Won-suk



 

    கலைஞனை அழிக்கலாம் கலையை அழிக்கமுடியாது என்று சொல்வதுண்டு அதுதான் இந்தக்கதையின் அடிநாதம் . கொரியாவை ஆட்சிசெய்த சோசன் அரசகுலத்தின் ஆஸ்தான உடை வடிவமைப்பாளன் அவன் . அரசகுலத்திற்குரிய ஆடைகள் குறிப்பிட்ட சம்பிரதாய கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளுடன் மட்டுமே வடிவமைக்கவேண்டும் என்ற நம்பிக்கை உடையவன் . ஒரு இக்கட்டானா சூழலில் புதியவன் ஒருவன் அங்கு வருகிறான் . உடைகள் என்பது அணிபவரின் வசதிக்கும் பார்ப்பவரின் பரவசத்திற்கும் என்ற கோட்பாடு உடையவன் , முக்கியமாக எந்த வரைமுறைக்குள்ளும் சிக்காமல் தனித்து நிற்கும் வடிவமைப்பாளன் .சக வெகுஜனங்களும் நல்ல உடை உடுத்துவதில் தவறில்லை என்று , அந்த பழமைவாதிக்கு மாறான கருத்துடையவன் . அந்த மேதமை பழமைவாத கலைஞனுக்கும் புதுமை விரும்பி கலைஞனுக்கும் இடையேயான அகங்கார மற்றும் கலைப்போட்டியே படம்.


  உன் பெயரை வரலாற்றிலே இல்லாத அளவுக்கு செய்கிறேன் என்று அந்த பழமைவாதி ஒருமுறை சவால் விடுவார் . அதேபோல ஒரு கட்டத்தில் அவன் செய்த அத்தனை ஆடைகளையும் தீயிட்டு எரிப்பார் . ஒரு குறிப்பிட்ட உடையை அவரால் ஏரிக்கமுடியாது . அந்த உடையில் அவனது கலை மட்டுமல்லாது அன்பும் வியாபித்து கிடக்கும். புதியவனின் மேதமை கலையையும் தாண்டி அன்பென்ற ஒரு விஷயத்திற்கு முன் அவனது அகங்காரம் உடையும் . சுவாரஸ்யம் குறைவான படம்தான் இருப்பினும் ,அந்த பழமையான கோட்பாடுகளை உடைத்து உட்புகும் புதுமைத் தன்மை எல்லாக்காலங்களிலும் எல்லாக்கலைகளிலும் நடந்துகொண்டே இருக்கிறது என்ற அந்த ஒரு விஷயத்தை அழகாய் பரிமாறியதற்காக பார்க்கலாம் .


Saturday, 1 July 2017

Thondimuthalum Driksakshiyum - 2017 - Dileesh Pothan





பெரிய விஷயங்களை பிரம்மாண்டமாகச் சொல்ல சிலர் சிரத்தையெடுக்கும் அதே வேளையில் . பலரும் கவனிக்காத சிறிய விஷயங்களை சிலிர்ப்பாய் சொல்லி , அவர்களுக்கு சவால் விடுகிறார்கள் சில கலைஞர்கள் . எல்லோரும் சூரியனை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கையில் புல்லின் நுனியில் வீற்றிருக்கும் பனித்துளியை கவனிக்கும் சிலர் போல . Dileesh Pothan - அப்படி ஒருவர். எளியவற்றை ஏகாந்தமாக சொல்லும் ஒரு பாணியை தனக்கென வகுத்துக்கொண்டிருக்கிறார் . Fahadh தை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது .. நீ எல்லாம் ரொம்ப நாள் பொழச்சி கிடக்குணும்டா ! என்ற எண்ணம்தான் தோன்றிக்கொண்டே இருந்தது அந்த கதாபாத்திரத்தின் சிரிப்பை பார்க்கையில் .

Sunday, 4 June 2017




உள்ளங்கவர் கள்வர்கள்  - ஜாக் ஸ்ப்பேரோ




  ஜாக் ஸ்ப்பேரோவின் நாடோடித்தனமான அந்த உடைப்பற்றி விசித்திரமாக தோன்றிக்கொண்டிருக்கும் . அதற்கான காரணத்தை இந்த பாகத்தில் தெளிவுபடுத்தினர் . ஒரு இக்கட்டான சூழலில் சக கடற்கொள்ளையர்களின் கப்பல்கள் சூறையாடப்படுகிறது , ஜாக்கின் கப்பல் மட்டும் சேதமாகாமல் இருக்க தந்தை கொல்லப்படுகிறார் , இறுதித்தருவாயில் ஜாக்கிடம் கப்பலை ஒப்படைக்கிறார் இனி எல்லாம் உன் கையில்தான் என்று சொல்லிவிட்டு இறக்கிறார் . விடலைப்பையன் ஜாக் முன் இடப்பட்ட முதல் சவால் அது , சாதுர்யமாக அவன் அந்த சவாலை முடிக்கிறான் . அதுவரை அவனை கேப்டனின் மகன் , விளையாட்டு பையன் என்றிருந்த சக கொள்ளையர்கள் அன்றுமுதல் அவனை தலைவனாக ஏற்கின்றனர் . அப்போது தங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பொருளை அவனிடம் அற்பணிக்கின்றனர் அந்த வெற்றிக்கு ஈடாக . அப்படி கிடைத்தவைதான் அந்த தலைப்பாகை , மணிகள் , கொம்பு போன்ற விசித்திர பொருட்கள் . ஜாக் அதை சூடிக்கொள்கிறான். அதன் பின் அவன் எத்தனையோ வெற்றியை நிகழ்த்தியிருந்தாலும் அந்த முதல் வெற்றி அவனுக்கு விலைமதிப்பற்றது .அந்த வெற்றியை என்றும் தன்னோடு வைத்துக்கொண்டிருக்கிறான் அந்த 

Saturday, 3 June 2017

 




   சைக்கிள் ஓட்டுதல் நீச்சல் பழகுதல் போன்ற சிலவற்றை புதிதாக பழகினால் சும்மா இருக்க முடியாது . எந்த சைக்கிளைப்பார்த்தாலும் எடுத்து ஓட்டத்தோன்றும் , குளமோ குட்டையோ கிணறோ எந்த நீர்நிலையைப்பார்த்தாலும் உள்ளே குதித்து நம்மை சோதித்து, நமக்கே நம்மை நிருபித்துக்கொள்ளத் தோன்றும். அப்படி நீச்சல் பழகிக்கொண்டிருந்த இரு பொடுசுகள் அந்த நாட்டிலேயே பெரிய குளம் என்று நம்பப்படும் ஒரு குளத்தில் அவர்களைச்சோதித்துக்கொள்ள இறங்கினர் .


   பல ஏக்கர் பறந்து விரிந்த அந்த குளத்தின் நடுவே ஒரு சிறிய கோவில் உண்டு கிட்டத்தட்ட ஒரு தீவை ப்போல. அந்த தீவை தொட்டுவிட்டு வருவதுதான் இலக்கு என்று தங்களுக்குள் முடிவு செய்துக்கொண்டனர் . நீரில் நீளத்தை கணிப்பது சிரமம் கானல்நீர் போல ,பெரும் தூரம் சிறிதாய்த்தெரியும் . இளம்கன்றுகள் என்பதால் பயமறியாமல் இறங்கிவிட்டன. பாதிக்குளத்தை கடக்கும்போதுதான் எவ்வளவு பெரிய தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்று ஒருவனுக்கு புரிந்தது .கூப்பாடு போட்டாலும் கரையில் செல்லும் பெரியவர்களுக்கு கேட்காதே , இப்படியே போனால் சாகவேண்டியதுதான் !
அந்த பயத்தை பதற்றத்தோடு அடுத்தவனிடம் சொல்லி , நாம் திரும்பிவிடுவோம் என்று அழத்தொடங்கினான் , மற்றவனுக்கோ இலக்கு மட்டுமே கண்ணில் தெரிந்துக்கொண்டிருக்கிறது . பயந்தவனை அசுவாசப்படுத்தினான் . நாம் இப்போது நம் இலக்கை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தில் இருக்கிறோம். முன்னே சென்றாலும் அதே தூரம்தான், திரும்பி பின்னேச் சென்றாலும் அதே தூரம்தான் , முன்னதை தேர்ந்தெடுத்தால் இலக்கை அடைத்துவிடுவோம் , பின்னதைத்தேர்ந்தெடுத்தால் நாம் தோற்று விடுவோம் . இரண்டுமே ஒன்றுதான் நாம் எதைத்தேர்ந்தெடுக்க போகிறோம் , என்பதே நம் வெற்றியை நிர்ணயிக்கும் . என்ன செய்வோம் ?என்று தீர்க்கமாக கேட்டான் . பதற்றமானவன் அமைதியானான் , முன்னோக்கி சென்று தீவில் இளைப்பாறி மீண்டனர் .அந்த மனோபாவம்தான் அந்த சிறுவனை பிற்காலத்தில் பல தூரங்களைக்கடந்து பல இலக்குகளை அடையாச்செய்தது . இன்று அவருக்கு பிறந்தநாள் .


( பயந்த அந்த நண்பனின் பெயர் தென்னன் ,இது நடந்த இடம் திருவாரூர் கமலாலயம் குளம் .பிறகு இந்தக்கதையின் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது , ஆனால் அப்படி நடந்ததிருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறது , ஏனென்றால் அந்த ஆளுமை அப்படிப்பட்டது )

Friday, 19 May 2017

உப்புமா  நூடுல்ஸ்




   முன்பொருமுறை சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் படித்துக்கொண்டிருந்த பொழுது , அந்த கல்யாண கோஷ்டிக்கு வாஷிங்டனில் காலை உணவாக ரவா உப்புமா செய்வதை , அதை அவர்கள் உண்ணும் முறையை அப்படி எழுதியிருப்பார், அந்த இலையில் பளிச்சிடும் நெய்யின் மினுமினுப்பு படிக்கும் நம் கண்னை கூசும் அளவிற்கு விவரித்திருப்பார் . வாசித்துவிட்டு இருப்பு கொள்ளவில்லை , கடைக்கு ஓடிப்போய் ரவா வாங்கி வந்து உப்புமா கிண்டி உண்ட பின் தான் ஆசுவாசமானது . உப்புமா பலருக்கு பிடிக்காத வஸ்து . காரணம் நாம் பெரும்பாலும் சாப்பிடும் உப்புமா உப்புமாவே அல்ல உப்புமா என்று நம்பப்படும் ஒன்றுமட்டுமே . எப்படி ஒரு உணவகத்தின் தரத்தை அவர்கள் தரும் சாம்பார் கொண்டு கணிக்கலாமோ அது போல ஒரு தேர்ந்த சமையல்காரரின் நிபுணத்துவத்தை அவர் கிண்டும் உப்புமாவைக்கொண்டு கணிக்கலாம் (அப்படினு யார் சொன்னா ? நாமளே சொல்லிக்க வேண்டியதுதான் ).


   தாளிச்சு வறுத்த ரவா & தண்ணி சேர்த்து கிண்டி ஒருவித பசைப்போல இறக்கினால் உப்புமா ரெடி என்றே பலரும் நம்புகின்றனர் . ரவையை வறுக்கும் பதத்தில் தொடங்கி , இறுதியில் சில நாழிகைகள் அடுப்பில் அமைதியாய் அதை இருத்தி வைப்பது வரை நாம் தரும் அடுப்பு தணலின் அளவை இசைக்கலைஞரின் லாவகத்தோடு கூட்டி குறைக்கும் கலை கைவரப்பட்டவர்கள் ஒரு சிலரே . நீரும் நெருப்பும் நெய்யும் அளவு கூடினால் குழாகி, குறைந்தால் பொறுக்காகி உண்பவரின் பொறுமையை சோதிக்க வாய்ப்பு அதிகம். இடும் உளுந்து தோலோடு இருக்கிறதா இல்லையா , இஞ்சி துகள்கள் , தேங்காய் சிதறல்கள் சில உண்டா இல்லையா என்பதும் கணக்கில் வரும் . இறுதியாக மேலே சேர்க்கப்போவது தேங்காய் எண்ணையா , நெய்யா என்பதுவரை சிறு காரணிகளும் சில சுவை மாற்றத்தை கொடுக்கும் . சமைப்பவருக்கு உப்புமா என்றவுடனே ஒருவித அலட்சியம் வந்துவிடுவதாலோ என்னவோ பெரும்பாலானோர் அதை சரியானமுறையில் சமைப்பதில் சறுக்கி விடுகின்றனர் என்றே தோன்றுகிறது . சிரத்தை இன்றி செய்வது எப்படி சிறப்பாக அமையும் . வாஷிங்டனில் திருமணம் ரவா உப்புமா போன்றே Tampopo ன் ரேமன் நூடுல்ஸும் என்னை நூடுல்ஸ் வாங்க கடையை நோக்கி துரத்தியது .

   சமையல் & உணவு பற்றி தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன , அதே அளவு திரைப்படங்களில் இருக்கிறதா என்றால் ? இல்லை என்றே தோன்றுகிறது . ஒரு சில காட்சிகளுண்டு , இருந்தும் முழுக்க முழுக்க நம்மிடமிருக்கும் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் இன்னும் வரவில்லை . Tampopo - படம் முழுக்க முழுக்க உணவு சம்பந்தப்பட்டது . முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை உணவு மற்றும் உணவு சார்ந்த விஷயங்கள் மட்டுமே .


   ஒரு சமையல் கலைஞர் சொன்னது " எந்த சமையல் செய்முறையிலும் சில படிநிலைகள் இருக்கும் . 1,2,3,4 என்று , அதில் ஒரு படிநிலையை மாற்றினாலும், உதாரணத்திற்கு 1,2,4,3 என்று மாற்றினாலும் சமையலின் சுவையில் மாறுபாடு ஏற்பட்டுவிடும்".அந்த அளவுக்கு சிறு மாறுதல்கள் கூட சுவை மாற்றத்தை ஏற்படுத்திவிடும் . அதே போல சாப்பிடுவதற்கும் சில படிநிலைகள் இருக்கின்றன . அப்படி அவர்களின் படிநிலை ஒன்றை இந்த முதியவர் அவனுக்கு சொல்லித்தருகிறார் . நம்மிடமும் இப்படி உணவு சார்ந்து பல விஷயங்கள் இருந்தும் நாம் இந்த படம் போல பதிவுகளாக்க தவறுகிறோம் .
உங்கள் இட்லியை சில்லி இட்லி போன்று எதோ ஒன்றாக உருமாற்றி ஒரு நாட்டில் அது உடல் நலத்திற்கு கெடுதல், அது குப்பை உணவு என்று சொன்னால் எப்படி இருக்குமோ! அது போலத்தான் இங்கே என்னை கொடூரமாக்கி வைத்திருக்கிறீர்கள், என்னை நூடுல்ஸ் என்றால் நானே நம்பமாட்டேன் .என்று படம் முடிந்த பிறகு சாப்பிட்ட நூடுல்ஸ் பல்லிளித்து .

Monday, 15 May 2017

LENS - 2017 - Jayaprakash Radhakrishnan 





   ஒரு நல்ல கவிதைக்கு நேர்த்தியான சொற்கட்டுமானம் மட்டுமே போதுமா அல்லது நல்ல பொருளும் வேண்டுமா ? நல்ல உணவுக்கு சுவை மட்டுமே போதுமா ? அல்லது அவை தரும் ஆரோக்யமும் அவசியமா ? இப்படி எல்லா கலைகளிலும் இரண்டு பக்கங்களை பற்றி விவாதங்கள் நடத்திக்கொண்டே இருக்கலாம் . இவையிரண்டும் சரியான விகிதத்தில் கலந்த சில படைப்புகள் உன்னதமாக பார்க்கப்படுகின்றன உதாரணத்திற்கு சங்க பாடல்களைப்போல அல்லது தேனைப்போல . சுவை , சொற்கட்டு போன்ற நகாசு எளிதாக பெருவரியானவர்களை கவர்கிறது என்பது உண்மை. . திரைப்படங்களுக்கும் இவை பொருந்தும் சுவாரஸ்யம் மட்டுமே போதுமா, அல்லது அது நம்மிடம் விட்டுச் செல்லும் அல்லது நம்முள் உருவாக்கும் கருத்தாக்கங்களும் (நரம்பு புடைக்க சத்தமாக நாயகன் பேசும் கருத்துக்கள் அல்ல இயக்குனர் நமக்கு உணர்த்த விரும்பும் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள் ) அவசியமா? .அரிதாகவே சிலப்படங்கள் இந்த இரண்டையும் செவ்வனே ஒருங்கேபெற்று வருவதுண்டு . "லென்ஸ்" அப்படிப்பட்ட படைப்பு . அவர்களுக்கு கிடைத்த பொருளாதார எல்லைகளை வைத்துக்கொண்டு நிறைவாய் படைத்திருக்கிறார்கள்.

நாம் சில மெய்நிகர் குற்றங்களில் கர்த்தாவாக இல்லாமலிருக்கலாம் . ஆனால் பார்வையாளர்களாக பங்குதாரர்களாகவே இருக்கின்றோம் . பிரக்ஞை இன்றி வந்து விழுபவற்றை வாங்கி எரியும் செங்கல் அடுக்கும் சித்தாள் போல -Forward களை பறக்க விடுகிறோம் . அது ஏற்படுத்தப்போகும் பாதிப்பின் வீரியம் உணராமல் . மெய்நிகர் உலகில் நம்மால் சிறிய விஷயமாக பார்க்கப்படும் ஒன்றின் வீரியத்தை நமக்கு உணரவைக்கிறார் .

மிகக்குறைந்த கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் அல்லது சில காத்திரமான படங்களைப்ப்பார்க்கும்போது ,நமது தமிழ்ச்சூழலில் அது போன்ற படைப்புகளுக்கான வாய்ப்புகளே இல்லை என்ற என் எண்ணத்தை பொய்யாக்கிவிட்டார் இயக்குனர் . இந்த ஆண்டு நல்ல படைப்புகள் என்று கொண்டாடப்பட்ட வந்த D16, மாநகரம் , குற்றம்- 23 , 8 -தோட்டாக்கள் வரிசையில் இந்த படத்தையும் வைக்கலாம் . அந்த பட்டியலில் முதலிடத்திற்கு தகுதியானது .

Wednesday, 3 May 2017


உள்ளங்கவர் கள்வர்கள்  - தேவசேனா


இந்த படமே தேவசேனாவின் கதையாக எனக்கு பட்டது . அவளின் வளர்ச்சி வீழ்ச்சி பின் மீண்டு வருதல் என்று அந்த கதாபாத்திரம்தான் இந்த கதையின் முதுகெலும்பாக தோன்றியது .
அவள் இல்லையேல் பாகுபலி இல்லை .படத்தில் சில பிசிறு கண்ணில் பட்டாலும் "தேவசேனா " காதாபத்திரத்தின் நேர்த்தி எல்லாத்தையும் மறைத்துவிட்டது .



 வலை கிழித்து வரும் வாளைப் போல 
வெண்திரைக் கிழித்து வந்த கண்கள் . 
எண்ணாயிரம் பொன் கொணர்ந்து 
விண்ணோன் வரினும் மாறாத தன்நிலை . 
தன்னவன் அழைத்தாலும் தளைப்பட மறுக்கும் கம்பீரம் . 
தன் தடம் பதிக்க முன்னவனின் மூங்கில் தோள் கேட்கும் காதல் ! 
செங்கோல் வேண்டாம் இவள் செங்கை போதும் 
என்றவனைப் பார்த்த பார்வை .
மேனி மேவ எண்ணிய மாற்றான் விரல்களை 
மண்ணில் தூவச் செய்த வீரம்! 
பெருஞ்சபை எனினும் வாதியாய் வரிந்து நிறுத்திய வாதம் . 
பதியில்லா பாதி வாழ்வை விதியே என்று வாழாத தீரம் !
"ம்" என்றிருந்தால் , கட்டுடைத்திருப்பார் கட்டப்பா 
கண்ணசைக்கவில்லை கல்லி.
தன் வயிற்றில் கனன்றவன் வருவான் என 
யாகத்திற்காக இயற்றினாள் தபசு .
வந்தவன் மீட்க,கொய்தத்தலை கொண்டுவந்தாள் .
சும்மாட்டில் சுமந்த சூரியத்துளிகளை 
சுள்ளிகளில் சூட்டி உறைத்த சூள் முடித்தாள் ..



    சாளுக்கியர் கையில் சிவகாமி சிக்கிவிடுவாள் . அவளை கடத்தி சென்று சிறைப்படுத்திவிடுவர் . படைபலத்தில் பலவீனமாக இருக்கும் நரசிம்மர் மாறுவேடத்தில் பரஞ்சோதியுடன் சாளுக்கிய தேசத்தில் ஊடுருவி சிறையை அடைந்துவிடுவார் . சிவகாமியை அழைப்பார் தன்னுடன் இப்படியே வந்துவிடு , ரகசியமாக அழைத்து சென்று விடுகிறேன் என்பார் . சிவகாமி மறுத்துவிடுவாள் . எப்படி அவன் அழைத்து வந்தானோ அப்படியே நீயும் அழைத்து செல் . சாளுக்கியதேசத்தின் மேல் போர்தொடுத்து மீட்டு செல், அதுவரை நான் வரமுடியாது என்பாள் . பரஞ்சோதியும் எவ்வளவோ கெஞ்சி பார்ப்பார் . சில நேரங்களில் சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும் வந்து விடுங்கள் என்பார் . வைராக்யமாக மறுத்து விடுவாள் . வேறு வழியின்றி திரும்பிய நரசிம்மர் பல ஆண்டுகள் படை திரட்டி சாளுக்கியர்களை வெல்வார் "சிவகாமியின் சபதத்தில்" .

   ஒரு வார்த்தை சொல்லுங்கள் தாயே இந்த விலங்கை உடைத்து உங்களை விடுவிக்கிறேன் என்பார் கட்டப்பா . முடியாது என்று மறுத்து விடுவார் தேவசேனா . தன் மகன் வந்து விடுவிப்பான் .நான் சேகரிக்கும் இந்த சுப்பிகள் ஒரு யாகத்திற்காக பல்வாள்தேவனை பழிதீர்க்க என்பார் . இறுதியில் நிகழ்த்துவார் .

நந்தினி குந்தவையை பழையாரை பெண்புலி என்றே அழைப்பாள் , குந்தவை வாளெடுத்து வீசக்கூடியவள் இல்லை ,இருந்தும் அரசவை விஷயங்களில் எப்போதும் ஒரு நிழலாய் நின்று தன் ஆளுமையை செலுத்தக்கூடியவள் . அநிருத்தரிலிருந்து சுந்தரச்சோழர் வரை எல்லோரும் அவள் பேச்சிற்கு மதிப்புக்கொடுக்கக்கூடியவர்கள் . அவள் சொல்லும் சொல் வெல்லும் சொல் . தேவசேனாவின் இளம் பருவம் சில இடங்களில் குந்தவையையும் பிற்பகுதி சிவகாமியையும் ஞாபகப்படுத்தியது .

Thursday, 27 April 2017

   

Rakshadhikari Baiju Oppu - 2017 -Ranjan Pramod



   ஒரு சில மைய கதாபாத்திரங்களை மட்டும் செழுமையாக படைப்பதில் மெனக்கெடும் சில இயக்குனர்கள் அதே சிரத்தையை மற்ற கதாபாத்திரங்களுக்கு கொடுப்பதில் தவறவிட்டுவிடுவர் அவர்களுக்கு சில நிர்பந்தங்கள் இருக்கலாம் . இந்தப்படத்தில் மையப்பாத்திரத்தின் நுணுக்கமான வடிவமைப்பிற்கு இணையாக மற்ற பாத்திரங்களிளும் கவனம் செலுத்தியுள்ளார் . முக்கிய கதாபாத்திரங்கள் இன்னார் என்று எண்ணினாலே குறைந்தபட்சம் ஒரு 20 கதாபாத்திரங்களை நாம் சொல்லவேண்டி வரும் . "கும்பாலம்" கிராமத்தில் வாழும் அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தி , ஒரு மால்குடியை போல ஒரு கோபல்லபுரத்தை போல அன்பு கமழ் கிராமம் அது .

  பைஜூவின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை நுணுக்கமாக ஒவ்வொரு காட்சியிலும் காட்டுகிறார்,அன்பே வடிவான சாதாரண மனுஷன் .நமது ஊரில் பால்ய காலத்தில் நிச்சயம் ஒரு "பைஜூ" அண்ணா இருந்திருப்பார் , பிற்காலத்தில் எல்லாரும் எங்கோ ஓடிக்கொண்டிருக்க அவர் மட்டும் அப்படியே அதே அன்போடு அங்கேயே இருப்பார் ."லீலா" ,"அனுராக கரிக்கின் வெள்ளம்" இப்போது இந்தப்படம் என்று என்னையறியாமலேயே பிஜு மேனனின் ரசிகனாகிக்கொண்டிருக்கிறேன் ..நமது பால்ய நினைவுகளை கிளறிவிடுகிறது படம் , நமக்கும் "கும்பாலம் பிரதர்ஸ்" போல நிச்சயம் ஒரு டீம் இருந்திருக்கும் , கிரிக்கெட்டை அற்புதமாக பயன்படுத்திய ஒரு சில படங்களில் நிச்சயம் இதுவும் இருக்கும் .பெரிய அதிரடி திருப்பங்கள் இல்லைதான் இருந்தும் திரைக்கதை ஒரு பச்சோந்தியைப்போல் மெலிதாக நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது நம் ஊகங்களை அடித்து நொறுக்கவில்லை என்றாலும் அமைதியாய் நிராகரிக்கிறார் இயக்குனர் . நம்மை எதை நோக்கி இட்டு செல்கிறார் என்ற சுவாரஸ்யத்தை இறுதிக்காட்சி வரை காத்து கடைசியில் மிளிர்கிறார். மஹேஷிண்டே பிரதிகாரத்திற்கு பிறகு இந்த படத்தில் படம் நெடுக ஒருவித சுகந்தத்தை உணரமுடிந்தது .

Tuesday, 25 April 2017

 காத்திருக்கும்   நித்யர்கள்


மின் கம்பியில் அமர்ந்திருக்கும்
காக்கை வரிசையின் நேர்த்தி
"ஹிட்ச்காக்கை" நினைவில் நிறுத்துகிறது .
இரவு நேர ரோட்டோரக் கடையின்
 நூடுல்ஸ் நூற்பில் வழியும் ஆவி
"வாங் கர் வய்"யை கண்முன்னே காட்டுகிறது .
தண்ணீரில் தத்தித்தாவும் தவளையின்
நீர் வட்ட அலையில் "கிம் கி டுக்" விரிகிறார் .
எதிர் பாராமல் எதிர்ப்படும் கறுப்பழகியின்
கண்களின் ஒளியில் "பாலுமகேந்திரா" ஒளிர்கிறார் .
பெருந்திரையின் ஒளியுமிழ்வு ஒடுங்கிய பின்னும்,
ஒழிந்துவிடுவதில்லை காலத்தை வென்ற நித்யர்கள்.
விழித்திரையின் சல்லிவேர்கள் முடியும் மூளையின் தரவடுக்குகளில் தவழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .
அவர்களின் ஒரு காட்சி போதுமானதாக இருக்கிறது!
அவர்களை நம்முள் மீட்டெடுக்க .
அன்று காட்சிக்காக காத்துதிருந்த கர்த்தாக்கள் ,
இன்றும் காட்சிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நம் மூளையின் மூலையில்

Tuesday, 11 April 2017

தீராக்காதலி............


அவ்வளவு கடுமையாக நடந்துகொள்பவனிடம் ,தன்மானம்    நிறைந்தவளாய் தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் லீலா திரும்ப திரும்ப ஏன் செல்கிறாள்? . அப்படி அதீதமான ஒரு காதல் நமக்கு விசித்திரமாய் தோன்றலாம் . வரலாற்றில் அப்படி ஒரு காதல் இருந்திருக்கிறது . தனித்தன்மையோடு நாடக உலகில் கோலோச்சிய K.B. சுந்தராம்பாள் - S.G.கிட்டப்பா மேல் கொண்டிருந்த காதல் . பழம் நீயப்பா என்ற கணீர் குரலுக்கு சொந்தக்காரர் & நெற்றி நிறைய நீரணிந்து காவியுடையுடன் சிவன் வேடமிட்ட சிவாஜியிடம் நேருக்கு நேர் பேசும் அவ்வையாக மட்டுமே நமக்கு அவர் பரிட்சயம் . அவர் வாழ்வில் ஏறக்குறைய ஆறு ஆண்டு இருந்த காதலும் . அதை அவர் எவ்வளவு அதீதமாய் அணுகினார் என்பதையும் சாரு "தீராக்காதலியில்" நுணுக்கமாக எழுதியிருப்பார் . "எட்டு திக்கும் மதயானை" போல எப்படி இப்படி ஒரு தலைப்பை யோசித்தார்கள் என்று நம்மை யோசிக்கவைக்கும் தலைப்பு "தீராக்காதலி".அந்த புத்தகத்தில் வேறு சில ஆளுமைகளைப்பற்றி அவர் எழுதியிருந்தாலும் . புத்தகத்தை கணிசமாக இந்த தீராக்காதல் ஆக்கிரமித்திருக்கும் .


   எல்விஸ் பிரஸ்லியின் புகழைப்பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு , மைக்கேல் ஜாக்ஸனின் புகழை நாம் நேரடியாக கண்டதுண்டு . அவர்களுக்கு நிகராக அதே அளவு புகழோடு இருந்திருக்கிறார் கிட்டப்பா . அவர் நாடகத்திற்காக தனி ரயில் விடும் அளவுக்கு இருந்திருக்கிறது அவர் புகழ் . அதே காலகட்டத்தில் நாயகியாய் பெரும் புகழுடன் விளங்கிய KBS - கிட்டப்பாவை கண்டதும் காதல்கொண்டிருக்கிறார் .கிட்டப்பாவிற்கு அவர் உருகி உருகி எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் எப்படி அவரை விளித்து துவங்குகிறார் எப்படி தன்னை விளித்துக்கொண்டு முடிக்கிறார் என்பதே சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கடிதத்திலும் அவருடைய அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்து அந்த காதலின் அலைநீளம் மாறிக்கொண்டேயிருக்கும் .



  முன்னமே திருமணமாகியிருந்த கிட்டப்பா காதல்வயப்படுத்தான் இவரை இரண்டாவதாக மணமுடித்தாலும் சில பிணக்குகளை ஏற்படுத்தினார் . ஆறு ஆண்டுகளில் ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள் பிரிந்து இருந்தார் . அவர் எப்படி இருந்தாலும் KBS- க்கு காதல் குறையவேயில்லை. தொடர்ந்து கடிதத்தொடர்பில் இருந்தார் . 27- வயதில் நோய்வாய்ப்பட்டு கிட்டப்பா இறந்தபின்பு இறுதியாக அவரது தீராக்காதலை ஆன்மிகத்தில் திசைத்திருப்பினார் .

Tuesday, 28 March 2017



The Handmaiden [2016 ]- South korean - Park Chan-wook




மேதமை படைப்பாளிகளின் சில படைப்புகளை பார்த்து இதுதான் அவர்களின் மைல்கல் என்று நாம் வியந்து நிற்கும் தருணத்தில் . அவர்களின் மைல்கல்லை எளிதாக முன்னோக்கி நகர்த்துகிறார்கள் அடுத்த படைப்பில் அதைத் தாண்டி செல்கிறார்கள் . Park Chan-wook ன் The Handmaiden யை சமீபத்தில் - பார்த்த பொது தோன்றியது . Park Chan-wook யை Oldboy - யின் இயக்குனர் என்று குறிப்பிடுவதைக்காட்டிலும் Thirst-ன் இயக்குனர் என்று விளிக்கவே விரும்புகிறேன் . அவர் படைப்புகளிலேயே அது மிகவும் வசீகரித்தது ,அப்படி ஒரு அணுகுமுறையை டிராகுலா படத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை .அவரின் அனைத்து படைப்புகளிலும் கடும் வன்முறையும் காமமும் இருந்தாலும் அந்த படைப்புகள் நம்மை அறத்தை நோக்கியே இட்டுச்செல்லும் .

கதை எளிதுதான் தன் தனித்தன்மையான பாணியில்       எடுத்த விதத்தில் மிளிர்கிறது .இரண்டு சதியாளர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே பரஸ்பரம் அவர்களின் இலக்குகளாக இருக்கிறார்கள், .அவர்களின் இலக்குகள் அவர்களுக்குள் வெளிப்படுத்தும் உண்மையும் அன்பும் அவர்களை மாற்றுகிறது .இருவருக்கிடையே காமம் கசிந்துகொண்டிருந்தாலும் அந்த அன்புதான் அவர்களின் இலக்கினை மாற்றுகிறது . இலாக்காக்கியவன் இலக்காகிறான் .

ஏரோட்டிக் த்ரில்லர் என்ற வகையில் அந்த சரியான கலவை கைவரப்பெறாமல் போனால் படமே வேறுமாதிரி உருமாறுவதற்கு பெரும் வாய்ப்புகள் உண்டு , சிறு பிறழ்வில் மொத்தபடமும் சொல்லவந்ததை விட்டு விலகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் . அந்த விபத்துகளுக்கு வாய்பளிக்காமல் இறங்கி விளையாடியிருக்கிறார் .அறம் அன்பை கதையின் மையச்சரடாக வைத்துக்கொண்டு பாலியல் விஷயங்களை நகாசுக்கு மட்டும் பயன்படுத்தி முற்றாக அவரது பாணி படம்தான் என்பதை நிறுவுகிறார் .

Monday, 6 March 2017

உள்ளங்கவர் கள்வர்கள் 

எவ்வளவு ஆக்ரோஷமான கதாபாத்திரம் அது . திரையில் வரும்பொழுது சுற்றி இருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் உணர்ந்த அந்த கடுமையான அதிர்வை நம்மாளும் உணரமுடிகிறது திரைக்கு வெளியிலும் .Frank- ஏன் அப்படி ஆனான் ? அதற்கு நிச்சயம் ஒரு முன் கதை இருக்கும் என்றும் அது எப்படி இருக்கும் என்றும் நம் மனம் கற்பனையில் சஞ்சரித்தாலும் . கடைசி வரை அந்த முன்கதைக்கான தேவை என்ன ? சொல்லவேண்டிய அவசியமென்ன என்று அதுநாள் வரை உருவாக்கப்பட்டிருந்த திரைக்கதை பாணியை மீறுகிறார் இயக்குனர் Lynch .


Frank-கதாபாத்திரத்திற்கு இணையாக அவ்வளவு அமைதியும் தீர்க்கமும் நிறைந்த நாயகன் கதாபாத்திர ஆக்கமும் சிறப்பாக இருந்தது.கருத்துக்கள் எதையும் படம் சொல்லவில்லை  ;) . ஒரு கதைச்சொல்லி கதை சொல்ல சுவாரஸ்யத்தில் இயல்பாய் நாம் எழுப்பும் "ம் " கொட்டளைப்போல . ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை இரண்டுமணி நேரம் தன்னோடு நம்மை பிணைத்து வைத்துக்கொண்டது . 30- ஆண்டுகள் ஆகியும் சுவாரஸ்யம் குறையாமல் உயிர்ப்போடு இருக்கிறது . wild at heart & Mulholland drive க்கு பிறகு நான் பார்க்கும் David Lynch-ன் மூன்றாவது படைப்பு இது .பார்த்த எல்லா படைப்புகளிலும் அவரின் மேதமைத்தன்மை கசிந்துகொண்டே இருக்கிறது ( Mulholland drive புரியாமல் சுற்றும் கூட்டத்தில் நானும் ஒருவன் ) . அனைத்து படங்களிலும் பார்வையாளனாக அவரிடம் தோற்றுகொண்டே இருக்கிறேன்.

Blue velvet [1986]- David Lynch

Wednesday, 15 February 2017

தாத்ரிகுட்டியின் ஸ்மர்த்த விசாரம்


   





    தாத்ரிகுட்டியின் ஸ்மர்த்த விசாரம் பற்றிய ஒரு Face book- பதிவே . இந்த புத்தகத்தை நோக்கி தள்ளியது . புத்தகத்தை எடுத்தால் கிழே வைக்கமுடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது . புத்தகம் அந்த விசாரத்தை விரிவாக அது நடந்த விதத்தை மையமாக கொண்டிருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக இருந்தது . முதல் 10-15 பக்கங்களிலேயே அந்த நிகழ்வை ஒரு கோட்டோவியமாய் காட்டிவிடுகிறார் எழுத்தாளர் . அதற்கு பிறகான பகுதிகளில் அந்த நிகழ்விற்கான காரணங்கள் என்னவாக இருந்திருக்கும் ! கேரள சமூகத்தில் அந்த நிகழ்வு நிகழ்த்தி சென்ற, நிகழ்த்திக்கொண்டிருக்கும் அதிர்வுகளைப்பற்றி விளக்குகிறார் .


   கேரளாவில் 1900 காலகட்டத்தில் நம்பூதிரி இனத்தில் பெண்களுக்கு கடும் வரைமுறைகளை வகுத்து ஒடுக்கி வைத்திருக்கின்றனர் . தலை மகனுக்கு மட்டுமே சொத்துரிமையும் , திருமணம் செய்துகொள்ளும் உரிமையும் உண்டு . பெண்களுக்கு இளம் வயதில் திருமணம் & விதவைகளுக்கு மறுமண மறுப்பு என்று இறுதிவரை இருளும் ஈரமும் நிறைந்த வீட்டில் கழித்து இறப்பதை தவிற வேறு வழி இல்லை ,அவர்கள் அந்தர்ஜனம் என்றே விளிக்கப்படுகின்றனர் . அந்த சமூகத்தில் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே உடல் தேவைக்கான நிர்பந்தமும் அது சார்ந்த நிகழ்வுகளும் நிலவுகிறது. அதை கட்டுப்படுத்த ஒரு நம்பூதிரிகள் குழுவை நிர்மாணித்து கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றது .  


    பாலியல் புகார்களுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் சாதி விலக்கு செய்யப்பட்டு , தனி அறையில் உணவு நீரின்றி கொடுமைப்படுத்தப்படுகின்றனர் . மூடிய அறையின் கதவிற்கு வெளியே இருந்து அந்த நம்பூதிரிகள் குழு நிகழ்த்தும் விசாரணையையே ஸ்மார்த்தவிசாரம் என்று குறிப்பிடுகின்றனர் .மாதக்கணக்கில் நிகழ்ந்த ஸ்மார்த்தவிசாரங்களைக்கூட குறிப்பிடுகிறார்கள் . அந்த விசாரணையில் அந்தர்ஜனங்கள் தங்களை நிரூபித்ததாக வரலாறே இல்லை , எப்படி இருந்தாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்கப்படுகிறார்கள் .இறுதியில் அந்த பெண் இறந்ததாகக் கொண்டு அவருக்கு இறுதிக்காரியம் செய்வதோடு. அவரை வெளியே விற்று விடும் கொடும்பழக்கமும் இருந்திருக்கிறது . அந்தப்பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களுக்கு சாதிபிரதிஸ்டம் (சாதி விலக்கு )முதல் மரணதண்டனை வரை கொடுக்கப்படுகிறது . தண்டனைக்கு உட்பட்ட ஆண்கள் தங்களை சுசீந்திரம் கோவிலில் கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு நிரூபிக்க ஒரு வாய்ப்பும் வழங்கப்படுகிறது . இதுதான் அதுவரை நடந்து வந்த நடைமுறை . தன்னை கைபிடித்து இழுத்த ஒரு முதிய நம்பூதிரிமேல் பிராது கொடுத்த ஒரு சிறுமிமேல் குற்றம் சுமத்தி குற்றத்தை ஏற்கவைத்து அந்த சிறுமியை விற்ற கதையை வேறொரு புத்தகத்தில் (முன்சுவடுகள் )ஜெமோ குறிப்பிடுகிறார் . அந்த கட்டமைப்பின் கொடூரத்தை விளக்க அந்த ஒரு கதையே போதுமானதாக இருந்தது .



    அப்படி யாருமே எதிர் குரல் எழுப்பமுடியாமல் இருக்கும் அதர்மக்கட்டுமானத்தை ஒரு பெண் உடைக்கிறாள் . எந்த உடலை அவர்கள் பலவீனமாக உருவகப்படுத்தினார்களோ அதே உடலைக்கொண்டு அவர்களுக்கெதிராக கலகம் செய்கிறாள் . தாத்ரிக்குட்டி ஸ்மார்த்த விசாரத்திற்கு உட்படுத்தப்படுகிறாள் . நம்பூதிரிகள் கேட்கும் கேள்விகளுக்கு கவனமாக பதிலுரைக்கிறாள் . அவள் 63 பேர் மேல் குற்றம் சுமத்துகிறாள் , அதை நிறுவ அவள் சேகரித்து வைத்திருந்த அத்தாட்சிகள் , அது மிக சாதூர்யமாக திட்டமிட்டு நிகழ்த்தியதாக காட்டுகிறது .63 பெயரை சொன்னவள் 64 வது பெயரை சொன்னால் தண்டணைக்கொடுக்க ஆள் இருக்காது என (அது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் யாரோ ஒரு பெரிய ஆள் ) . அரண்டுப்போன நம்பூதிரிக்குழு அத்தோடு விசாரத்தை முடித்துக்கொண்டு தண்டனைகளை பிறப்பிக்கின்றனர் .
பின்னர் அவள் சாதி பிரஷ்டம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள் . அந்த 63 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் .


    இந்த புத்தகத்தின் ஆசிரியர் இந்த நிகழ்வு நிகழ்ந்த களத்திற்கு பயணிக்கிறார் . அந்த நிகழ்வைப்பற்றி கேள்விப்பட்டவர்களை சந்திக்கிறார் . அந்த நிகழ்வின் உண்மைத்தன்மைக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்ல முனைகிறார் .
எவ்வளவு முயன்றும் தாத்ரிக்குட்டியின் ஆளுமையை நம்மால் உருவகப்படுத்த முடியவில்லை . ஒரு விசித்திரமான பெண்ணாக ,பல இடங்களில் ஒரு யட்சி போன்று தோன்றுகிறாள் .நல்ல கல்விவியும் கலா ரசனையும் மிகுந்தவள் . கதகளியை மிகவும் விரும்பி இருக்கிறாள் . அந்த 63 பேரில் ஒருவரைப்பற்றிய விவரணைகள் மட்டுமே புத்தகத்தில் அதிகம் கிடைக்கிறது . அவர் கத்தக்களி வித்தகர் காவுங்கல் சங்கர பணிக்கர் . அவருடனான உறவை காதலாகவே புத்தகம் முன்னிறுத்திக்கிறது . அவளுக்கு கதக்களி மேலிருந்த பிரேமை அதில் அசைக்கமுடியாத ஆளுமையாய் இருந்த சங்கர பணிக்கர் மேல் படர்கிறது .ஓரிடத்தில் கீசகன் களி கட்டிய பணிக்கரை கீசகன் வேடத்திலேயே கூட வேண்டும் என்று பணிக்கிறாள் (என்ன ரசனை !)



    ஸ்மார்த்த விசாரத்திற்குப்பிறகு சாதி விளக்கப்பட்டதால் எங்கும் வேஷமும் கட்டமுடியாமல் போகிறது . அது மரணத்தை விட பெரிய தண்டனையாய் உணர்கிறார் பணிக்கர் . இந்த நம்பூதிரிகளின் சட்டம் செல்லாத திருவாங்கூர் சமஸ்தானத்தில் சிறு குழுவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார் . இருந்தும் தன் மண்ணில் தன் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் அடிமனதில் இருக்கிறது . ஓரு கட்டத்தில் மீண்டும் ஊர் திரும்புகிறார் , ஒரு சிறு குழுவை நிர்மாணிக்கிறார் . அறுவடை நடந்த கழனியை திருத்தி எளிய மக்களின் முன் கதகளியை காட்டுகிறார் . அதுவரை மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே பரிமாறப்பட்ட கலை இறங்கி அவர்களிடம் வர அதை அவர்கள் அரவணைத்துக்கொள்கிறார்கள் . எல்லா உதவிகளையும் செய்கிறார்கள் . தன் பார்வையாளர்கள் கதகளி பற்றிய பிரக்ஞை இல்லாதவர்கள் என்பதை உணர்ந்திருந்த பணிக்கர் , சில ஜெனரஞ்சக விஷயங்களை கலந்து நகாசு செய்கிறார் . கதகளியில் மிகுந்த ஆர்வம் மிகுந்த நம்பூதிரிகள் தலையில் முக்காடு போட்டுகொண்டு கழனி நோக்கி வருகின்றனர் . ஒரு கட்டத்தில் சில இடங்களில் நிகழ்ச்சி நிகழ்த்த அனுமதிக்கின்றனர் . முத்தாய்ப்பாக ராஜரீக விஷயமாக அந்த பகுதியை கடந்து செல்லும் கொச்சி மன்னர் முன் களி கட்ட வாய்ப்பு கிடைக்கிறது . தான் காத்திருந்தது இதற்குத்தான் என்று ஆவலுடன் தயாராகிறார் பணிக்கர் .


   கடைசி நேரத்தில் ஒரு நம்பூதிரிகள் குழு உள்ளே புகுந்து அனைத்தையும் நிறுத்துகிறது . சிலர் பணிக்கரின் அலங்காரத்தை கலைத்து விடுகின்றனர் . எதற்கும் கலங்காத பணிக்கர் அன்று உடைந்து கதறுகிறார் . நிகழ்சியை ஏற்பாடு செய்தவர் இன்று நடக்காவிடினும் நாளை நடக்கும் என்று வாக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் . வேறொரு இடத்தில அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் . கொச்சி மகாராஜா ஓணக்கொடி கொடுக்கிறார் . எந்த ஆட்சி அதிகாரம் தன்னை விலக்கியதோ அதனிடமிருந்து அந்த விலக்கிற்கு விலக்கு பெறுகிறார். அவரின் கலை மூலம் .
மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என்றிருந்த கலையை எல்லோரிடமும் எடுத்து செல்லவேண்டிய ஒரு நிர்பந்தத்தை பணிக்கருக்கு ஏற்படுத்தியது தாத்ரிகுட்டியின் ஸ்மர்த்த விசாரம் . இதுபோன்ற பல வீச்சுகளை சமூகத்தில் நிகழ்த்தியது . அந்த நிகழ்வுக்கு பின்தான் சமூகத்திற்கு அந்தர்ஜனங்களின் வாழ்க்கை பற்றிய பிரக்ஞை வந்தது . பார்வதி நென்மணி மங்களம் , ஆர்யா பள்ளம் , தேவகி நரிக்கேடி போன்றோர் அந்தர் ஜனங்களை மீட்க அவர்களுக்கான அடுத்தக்கட்ட முன்னெடுப்புகளை எடுத்தனர் .
வரிசையாய் அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளை , கர்ம சிரத்தையோடு அடுக்கி கடைசியாக ஒரு சீட்டை சுண்ட அனைத்தும் ஒத்திசைவாய் சரிவதை கண்டதுண்டா ! அதே போன்ற பிரமையை கொடுத்தது. அந்த முதல் விசை தாத்ரிக்குட்டி சுண்டியது அது சமூகத்தில் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் வீச்சு ,சரியும் சீட்டுகளை நினைவு படுத்துகிறது .தாத்ரிக்குட்டிக்கு முன் அனேக அந்தர்ஜனங்கள் அடைபட்டு கிடந்திருக்கின்றனர் , அவர்களால் முடியாதது எப்படி தாத்ரிக்குட்டியால் முடிந்தது ? . அவர்களுக்கு கிடைக்காத பெரும் ஆயுதம் ஒன்று தாத்ரிக்கு கிடைத்தது . அது அவர் பெற்ற கல்வி .


தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் 
சந்தியா பதிப்பகம் / 70 ரூ 
ஆலங்கோடு லீலா கிருஷ்ணன் 
தமிழில் : யூமா வாசுகி