Sunday, 17 April 2016

காத்திருந்த கதை

தூரத்தில் வரும் தீப்பந்தங்களும்  சலசலப்பும் மழித்த தலையுடன் இருந்த சிஷ்யர்களின் கவனத்தை ஈர்த்தது . பந்தங்களின் ஒளி நெருங்க .நில்லுங்கள்! நில்லுங்கள் ! என்ற ஒலி இவர்களின் நடையையும் நிறுத்தியது . இருள் சூழ்ந்த இடம் ஒளிர வந்தவர்கள் அய்யா நீங்கள் இந்த வழியாக செல்லாதீர்கள் . இடப்புறம் சென்றால் மாற்றுப்பாதை இருக்கிறது அதுவழி சென்றால் அடுத்த கிராமத்தை அடையலாம் என்றனர் . அப்போது ஒளிப்போருந்திய அந்த மனிதர் முன்வந்தார் . அனைவரும் வணங்கினர் " அனால் அந்தப்பாதை 10 மைல் தூரம் அல்லவா இந்த வழி 3 மைல் கூட இறாதே” ஏன் சுற்றிச்செல்ல  சொல்கிறீர்  என்றார் .

     நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். இந்த 3 மைல் தூரம் முழுதும் காடுதான் அங்கு அங்குலிமாலா என்ற கொடூர ராட்சசன் இருக்கிறான் அவன் அங்கு வரும் மனிதர்களை கொன்று அவர்களின் எலும்புகளை மாலையாக்கிக்கொள்வான் . தயவு கூர்ந்து அவ்வழி செல்லாதிர்கள் என்றனர்.  . ஆசையை அறுக்க சொல்பவனிடம் உயிரின் மேல் ஆசைக்கொள்ள சொல்வது என்ன முரண் . புத்தர் சிரித்தார்.

     அனந்தாவைப்பார்த்து நீங்கள் எல்லோரும் மாற்றுவழியாக வந்து சேருங்கள் . நான் இவ்வழியாக வருகிறேன் என்றார் . சிஷ்யர்கள் மற்றும்  மக்கள் கண்ணீர் மல்க புத்தா நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எங்களுக்கு கொடுக்கக்கூடாது,உங்களின் இருப்பு இந்த உலக முன்னேற்றத்திற்க்கு மிக முக்கியம் .தயவுசெய்து முடிவை மாற்றுங்கள் என்று மன்றாடினார்  . எதையோ சொல்ல விழைந்த அனந்தா அவரின் பார்வையைப்பார்த்து புரிந்தவனாய் அனைவரையும் சமாதானப்படுத்தினான் . சில பந்தங்களை வாங்கிக்கொண்டு ,அவர் 3 மைல் கடப்பதற்குள் நாம் 10 மைல் தூரத்தை கடக்கவேண்டும் என்றபடி ஓட்டமும் நடையுமாக கிளம்பினர் .

மாற்று வழியாக கடந்து காட்டின் மறுஎல்லையை அடைந்துவிட்டார்கள். இருளில்  எந்த சப்தமும் இல்லை. ஓடிவந்ததால் இவர்களின் மூச்சு  தாறுமாறாக இறைப்பது மட்டும் கேட்டது . அனந்தாவிற்கு தாம் தவறு செய்து விட்டோமோ ,எப்படியாவது குருவை தடுத்திருக்கவேண்டும்  என்று எண்ணம் மேலிட்டது . கொஞ்ச நேரம் கழித்து சருகுகலின் சப்தம் கேட்டது . வழியில் விழி வைத்தனர் . புத்தர் எப்படி போனாரோ அப்படியே வந்துக்கொண்டிருந்தார் பின் அங்குலிமாலா தொங்கிய முகத்தோடு பணிவாய் நடந்து வந்துக்கொண்டிருந்தான் . புத்தரைத்தவிற அங்கு இருந்த அனைவரின் விழிகளிலும் நீர் வழிந்துக்கொண்டிருந்தது . அதன் பின் அந்தக்காட்டினுள் என்ன நடந்தது என்று புத்தரும் சொல்லவில்லை அங்குலிமாலவும் சொல்லவில்லை . சிஷ்யர்களும் கேட்கவில்லை .

    பின்னாட்களில் வந்த பல புத்த துறவிகள் அங்கு என்ன நடந்திருக்கும் என்று யூகத்தில் பல கதைகள் எழுதினர் . 200 க்கும் மேற்ப்பட்ட கதைகள் உள்ளன , அனால் இன்றுவரை அங்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது இனியும் தெரியப்போவதில்லை

 ப்யூர் சினிமா  -பேருரையில் மிஷிக்கின் சொன்னக்கதை


Memories of Murder ன் முடிவு போல இந்தக்கதையின் முடிவு மிரளச்செய்தது .நிச்சயமாக இது உலகின் ஆகச்சிறந்த கதை .இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இக்கதையின் சுவாரஸ்யம் குறையவே குறையாது . நாம்கூட அங்கு என்ன நடந்திருக்கும்  என்று ஒரு கதை உருவாக்கலாம்  . நாம் புத்தரைப்பற்றி எவ்வளவு புரிந்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப்பொருத்து அந்த கதையின் தன்மை நபருக்கு நபர் மாறுபடும்..அங்குலிமாலா பற்றி இணையத்தில் தேட தகவல்கள் கொட்டுகின்றன, இரண்டு படங்கள் கூட வந்துள்ளது. எப்படி இவ்வளவு நாள் இந்தக்கதையை தெரிந்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறேன் என்ற வருத்தம் ஏற்பட்டது . பின் யோசிக்க உலகின் ஆகச்சிறந்தக்கதை உலகின் ஆகச்சிறந்த கதைச்சொல்லியின் வழியாக என்னை வந்தடைய காத்திருந்திருக்கிறது  என்பது புரிந்தது . அதுவும் வருடத்தின் முதல்நாள் .