Wednesday, 18 May 2016

Walk on Water / 2004 / Israel / Germany


    ஒரு கதையுண்டு அந்த ஞானி தினமும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் பெரும் பறவைக்கூட்டம் அவரை சூழ்ந்துக்கொள்ளும் அவர் மேலே ஏறி விளையாடும் . தினமும் இதை கவனித்த ஒரு சிறுவன் எனக்கு ஒரே ஒரு பறவையை மட்டும் பிடித்துக்கொடுங்கள் நான் வளர்க்க வேண்டும் என்று மன்றாடினான் . சிறுவனின் பேச்சை தட்டமுடியாமல் நாளை ஒரு பறவையை பிடித்து தருகிறேன் என்று வாக்கு கொடுத்து சென்றார் . அடுத்த நாள் ஆச்சர்யமாக ஒரு பறவைக்கூட அவர் பக்கத்தில் வரவில்லை. மனதில் கள்ளம் வந்தவுடன் அவர் இப்போது சராசரி மனிதனாகிவிட்டார் என்பதை பறவைகள் உணர்ந்து விட்டன என்று அந்த கதை முடியும் .

   அந்த கதைக்கும் இந்த படத்துக்கும் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் ,அந்த கதை சொல்ல வரும் மையக்கருத்தைதான் இந்த படமுன் விவாதிக்கிறது . இஸ்ரேலின் மொசட் உளவுத்துறையில் உள்ள ஒரு அதிகாரிஅதுநாள் வரை அவன் வாழ்ந்த வாழ்வை பற்றிய அவனது சுயவிசாரணைதான் படம் . அவனுக்கு கொடுக்கப்படும் எல்லா assignment -களையும் வெற்றியுடன் முடிப்பவன் . பெரும்பாலும் கொலைகளாக இருக்கும். அதுபோல அவனுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறு assignment - எப்படி அவனை முற்றாக மாற்றுகிறது என்பதே கதை . ஹிட்லர் காலத்தில் அவனது இனத்தவரை அழிப்பதற்கு துணைபோன ஒரு அதிகாரியை கண்டுபிடிக்கவேண்டும் . இப்போது அவருக்கு 95-100 வயது இருக்கலாம் அவர் உயிருடன் இருக்கிராரா இல்லையா என்று கண்டுபிடித்து , உயிருடன் இருந்தால் கொல்லவெண்டும் .இதுதான் அவனுக்கு இட்ட வேலை

   ஹிட்லர் காலத்தில் நடந்த இன அழிப்பும் நாடு கடத்தல்களின் சுவடுகளும் இன்னும் பல இடங்களில் நீருபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதையும். யூதர்களுக்குள் - ஜெர்மனியர்களுக்குள் இன்னும் புகைந்துக்கொண்டிருக்கும் அந்த பழைய கருப்பு வரலாற்றின் இன பேதத்தையும் பல இடங்களில் காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர்.அந்த கிழவரை கொல்ல சொல்லும் assignment - கொடுக்கும் கட்சியில் நாயகன் சொல்வான் இன்நேரம் அந்த கிழவன் செத்திருப்பான் , இல்லையென்றலும் இன்னும் ஒன்றிரண்டு வருடத்தில் சாகப்போறான் எதுக்கு அந்த சாகப்போற கிழத்த நாம கொல்லனும் ? அதற்கு அந்த மொசட் அதிகரி அவன் உயிருடன் இருந்தால் அவன் உயிரை கடவுளுக்கு முன் நாம எடுக்கனும் என்று பதில் சொல்வார் . எவ்வளவு ஆறாத வன்மன் அவர்களுக்குள் இருக்கிறது என்பதை இந்த காட்சி நமக்கு உணர்த்தும்.

  இன அழிப்பு அல்லது போரினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி நேரடியாக படமெடுக்காமல் அதன் வீரியத்தை மட்டும் ஆழமாய் பார்வையாளனிடம் பதியவைக்கும் சில படங்கள் முக்கியமான படங்களாகின்றன அந்த பட்டியலின் இந்த படத்திற்கு நிச்சயம் இடமுண்டு.

பெயருக்காகவே பார்க்கலாம் : Lior Ashkenazi


The Man Who Knew Infinity /2016 / English


    அந்த நபரின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நாம் அறிந்திருப்போம் . எப்போது நடந்தது ,என்ன நடந்தது என்பது நமக்கு நன்றாக தெரியும் . அதை எப்படி நடத்தப்போகிறார் இயக்குனர் என்பதில்தான் தனிமனித சரிதங்களை படமாக்கும் சவால் இருக்கிறது.

   எளிமையாய் தொடங்கியப்படத்தில் முழுக்க முழுக்க அவரின் அருமை பெருமைகளை மட்டும் சொல்லி நம்மை தொந்தரவு செய்யாமல் . ஹார்டி - ராமனுஜத்திற்கான உறவின் குறுக்குவெட்டை சொல்லி ,அதைச்சுற்றி அவரின் கதையை கொண்டு சென்றது சிறப்பு .

    கணிதப்புதிர்களுக்கு விடைகளை கொண்டுவந்துவிடும் ராமனுஜத்தால் அது எப்படி வந்தது என்ற வழிமுறைகளை கொண்டுவரமுடியவில்லை. அது இல்லாமல் இவர்கள் எதையும் நம்பமாட்டார்கள் அதை கொண்டுவரும் வழியைப்பார் எனும் ஹார்டியிடம் எனக்கு விடைகள் மட்டுமே தெரிகின்றன என்ன செய்ய? என்று அப்பாவியாய் கேட்கும் ராமனுஜத்தை . வா என்னோடு என்று லண்டன் மியூசியத்திற்கு அழைத்து செல்பவர் திறந்த ஏடு இருக்கும் ஒரு கண்ணடிப்பேழைக்கு முன் நின்று, இது நியுட்டனின் கைப்பிரதி, இன்று இதில் சில விஷயங்களை யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு நிச்சயம் தெரியும் இதற்கு பாக்கத்தில் வைப்பதற்கு நிகரானது உன் பிரதி . தயவு செய்து பின்வரும் பலருக்கு இதே போன்ற சிரமத்தைக்கொடுத்துவிடதே என்று சொல்லிவிட்டு . பதிலை எதிர்ப்பார்க்காமல் செல்வார் .(பின் அந்த இரண்டுமே நடந்தது ) இந்த நிகழ்வுக்கு பிறகு கொஞ்சமேனும் படிநிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு முயற்சிக்கிறார் ராமனுஜன்.

   அந்தக்காலத்தில் அடிமைப்பட்டிருந்த இந்தியாவிலிருந்து வந்த ஒருவனின் திறமையையை கண்டுக்கொண்டு அதை எப்படியாவது உலகிற்கு நிருபிக்க வேண்டும்மேன்று ஹார்டி எடுக்கும் சிரத்தைகள் நெகிழச்செய்கிறது.
ஆங்கிலேயர்கள் எல்லோரும் நமக்கு வைரிகள் என்று ஆரம்பப்பள்ளியில் படித்தவை யாவும் உண்மையில்லை என்பது பின் நாட்களில் பலவாறு புரிந்தது . குறிப்பாக முல்லை பெரியார் ஆணை கொடுத்த John Pennycuick , தமிழ் மொழியின் மேன்மையை வெளியே காட்டிய - Robert Caldwell , தமிழின் வனப்பை உலகிற்கு எடுத்துச்சொன்ன G.U. Pope போன்றோர் . செய்திருக்கும் சேவை மிகப்பெரியது , இவர்கள் இருந்த திசைநோக்கி நமஸ்கரிக்கலாம். இன்று அந்த பட்டியலில் G. H. Hardy-ம் சேர்ந்துகொண்டார் . இன்னும் கொஞ்ச காலம் ராமனுஜன் இருந்திருந்தால் இந்த கூட்டணி எவ்வளவு அவிழ்க்க முடியாத கணித முடிச்சுகளை அவிழ்த்திருப்பார்கள் ! என்ற ஏக்கத்தை நம்மிடம் விட்டு செல்கிறது படம் .