நேர்த்தி
தாழம்புதர்களுக்கிடையே புனையலாடும் புதுப்பாம்புகளைப்போல்.
நேர்த்தியாய் பிணைந்திருக்கும் பின்னல்,
பிதற்றுகிறது அவள் அன்னையின் விலாசத்தை .
18.10.16
இறுதிப்பயண இனிமை
ஐப்பசியின் அதிகாலைக்காற்று முகம் வருட,
கதிரின் மென்தீண்டலும் மெலிதாய்ப்படர ,
சாலையோர வாகை மரங்கள் ,தூரத்து வீடுகள்,
கழனியில் கதிரறுப்போர் - மட்டுமின்றி ,
கீழே பூமியும்கூட அதிவேகத்தில்
நகர்ந்துக் கொண்டிருப்பதாய்படும்.
டிவிஎஸ் -50 ல் சுமக்கப்படும் குறும்பாட்டிற்கு .
எல்லாம் சற்று நேரத்தில் நின்றுவிடும் - என்ற
நிதர்சனத்தை யாரும் சொல்லிவிடாதீர் !
பயணம் ருசிக்கட்டும் சில நாழிகைகள்.
27.10.16
