உள்ளங்கவர் கள்வர்கள் - தேவசேனா
இந்த படமே தேவசேனாவின் கதையாக எனக்கு பட்டது . அவளின் வளர்ச்சி வீழ்ச்சி பின் மீண்டு வருதல் என்று அந்த கதாபாத்திரம்தான் இந்த கதையின் முதுகெலும்பாக தோன்றியது .
அவள் இல்லையேல் பாகுபலி இல்லை .படத்தில் சில பிசிறு கண்ணில் பட்டாலும் "தேவசேனா " காதாபத்திரத்தின் நேர்த்தி எல்லாத்தையும் மறைத்துவிட்டது .
வலை கிழித்து வரும் வாளைப் போல
வெண்திரைக் கிழித்து வந்த கண்கள் .
எண்ணாயிரம் பொன் கொணர்ந்து
விண்ணோன் வரினும் மாறாத தன்நிலை .
தன்னவன் அழைத்தாலும் தளைப்பட மறுக்கும் கம்பீரம் .
தன் தடம் பதிக்க முன்னவனின் மூங்கில் தோள் கேட்கும் காதல் !
செங்கோல் வேண்டாம் இவள் செங்கை போதும்
என்றவனைப் பார்த்த பார்வை .
மேனி மேவ எண்ணிய மாற்றான் விரல்களை
மண்ணில் தூவச் செய்த வீரம்!
பெருஞ்சபை எனினும் வாதியாய் வரிந்து நிறுத்திய வாதம் .
பதியில்லா பாதி வாழ்வை விதியே என்று வாழாத தீரம் !
"ம்" என்றிருந்தால் , கட்டுடைத்திருப்பார் கட்டப்பா
கண்ணசைக்கவில்லை கல்லி.
தன் வயிற்றில் கனன்றவன் வருவான் என
யாகத்திற்காக இயற்றினாள் தபசு .
வந்தவன் மீட்க,கொய்தத்தலை கொண்டுவந்தாள் .
சும்மாட்டில் சுமந்த சூரியத்துளிகளை
சுள்ளிகளில் சூட்டி உறைத்த சூள் முடித்தாள் ..
சாளுக்கியர் கையில் சிவகாமி சிக்கிவிடுவாள் . அவளை கடத்தி சென்று சிறைப்படுத்திவிடுவர் . படைபலத்தில் பலவீனமாக இருக்கும் நரசிம்மர் மாறுவேடத்தில் பரஞ்சோதியுடன் சாளுக்கிய தேசத்தில் ஊடுருவி சிறையை அடைந்துவிடுவார் . சிவகாமியை அழைப்பார் தன்னுடன் இப்படியே வந்துவிடு , ரகசியமாக அழைத்து சென்று விடுகிறேன் என்பார் . சிவகாமி மறுத்துவிடுவாள் . எப்படி அவன் அழைத்து வந்தானோ அப்படியே நீயும் அழைத்து செல் . சாளுக்கியதேசத்தின் மேல் போர்தொடுத்து மீட்டு செல், அதுவரை நான் வரமுடியாது என்பாள் . பரஞ்சோதியும் எவ்வளவோ கெஞ்சி பார்ப்பார் . சில நேரங்களில் சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும் வந்து விடுங்கள் என்பார் . வைராக்யமாக மறுத்து விடுவாள் . வேறு வழியின்றி திரும்பிய நரசிம்மர் பல ஆண்டுகள் படை திரட்டி சாளுக்கியர்களை வெல்வார் "சிவகாமியின் சபதத்தில்" .
ஒரு வார்த்தை சொல்லுங்கள் தாயே இந்த விலங்கை உடைத்து உங்களை விடுவிக்கிறேன் என்பார் கட்டப்பா . முடியாது என்று மறுத்து விடுவார் தேவசேனா . தன் மகன் வந்து விடுவிப்பான் .நான் சேகரிக்கும் இந்த சுப்பிகள் ஒரு யாகத்திற்காக பல்வாள்தேவனை பழிதீர்க்க என்பார் . இறுதியில் நிகழ்த்துவார் .
நந்தினி குந்தவையை பழையாரை பெண்புலி என்றே அழைப்பாள் , குந்தவை வாளெடுத்து வீசக்கூடியவள் இல்லை ,இருந்தும் அரசவை விஷயங்களில் எப்போதும் ஒரு நிழலாய் நின்று தன் ஆளுமையை செலுத்தக்கூடியவள் . அநிருத்தரிலிருந்து சுந்தரச்சோழர் வரை எல்லோரும் அவள் பேச்சிற்கு மதிப்புக்கொடுக்கக்கூடியவர்கள் . அவள் சொல்லும் சொல் வெல்லும் சொல் . தேவசேனாவின் இளம் பருவம் சில இடங்களில் குந்தவையையும் பிற்பகுதி சிவகாமியையும் ஞாபகப்படுத்தியது .
