சுதந்திர போராட்ட காலகட்ட புகைப்படங்களில் காந்தி இருக்கும் அனேக படங்களில் ஆஜானுபாகுவான ஒரு மனிதரின் இருப்பை கவனித்திருக்கலாம் . சுதந்திரம் கொடுக்கப்பட்டபோது அது பலருக்கும் ஒரு வித ஆசுவாசத்தை கொடுத்தது, இதுநாள் வரை உழன்றது இதற்குத்தானே என்றனர் . இருந்தும் சிலர் தாங்கள் விரும்பியது இதுபோன்ற பிரிவினையுடன் கூடிய ஒன்று அல்ல என்று வெதும்பினார் அதை வெளிப்படையாக சொன்னவர்களில் முக்கியமானவர்கள் இருவர் ஒருவர் காந்தி மற்றவர் அந்த ஆஜானுபாகுவான மனிதர் எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட அப்துல் கபார் கான். முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சிலரால் தூற்றப்பட்டார். காந்தி சில மாதங்களில் கொலைசெய்யப்பட்டார் . ஆனால் கான் பின் 40 ஆண்டுகாலம் எல்லா கொடுமைகளையும் கண்ணுற வேண்டி இருந்தது.சுதந்திரத்திற்கு பின்னும் அவர் வாழ்வு மாறவில்லை .
பஃதுன் இனக்குழுக்காக ஆங்கிலேயரை எதிர்க்கத்துவங்கிய கான் பின் ஒன்றுபட்ட இந்தியாவிற்காக காந்திவழி நின்றார். சுதந்திரத்துக்கு பின் பாகிஸ்தானில் எதிர்க்கட்சியை நிறுவி ஒருமைப்பாட்டை முன்னிறுத்த முயன்றார் . இவரின் இருப்பு எப்போதும் தங்களின் முன்னெடுப்புகளுக்கு தடைதான் என்றுணர்ந்த ஜின்னாவின் அரசு அவரை வீட்டுக்காவலில் இருத்தியது .ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேச எதற்கும் அவர் மசியவில்லை கொண்ட கொள்கையில் நின்றார் . பின் வந்த எல்லா ஆட்சியாளர்களும் இவரை சிறை , வீட்டுக்காவல் என்று மாறி மாறி அலைக்கழித்தனர்.
இந்திய அரசு அவரை தங்களின் பொக்கிஷமாக கருதியது . காந்தியின் நூற்றாண்டு விழாவிற்கு தலைமையேற்க கானை அழைத்து சிறப்புற நடத்தியது (இத்தனை இன்னல்களுக்கு பிறகு பாகிஸ்தானிலிருந்து விமானத்தில் ஒரு துணிப் பொதியுடன் வந்திருக்கும் கானின் புகைப்படம் பார்க்க நெகிழ்சியாக இருக்கும் , பிரதமர் இந்திரா விமானநிலையம் சென்று வரவேற்பு கொடுப்பார் ). இறுதிக்காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது இந்தியாவிற்கு அழைத்து அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தது அரசு . அப்போதைய பிரதமர் ராஜீவ் நேரில் சென்று நலம் விசாரித்தார் . கடைசி வரை கானை இந்தியாவின் ஆளாகவே பாகிஸ்தான் பார்த்தது.தன் வாழ்நாளில் 37 வருடங்கள் சிறையில் கழித்து கடைசியாக தனது 97 வது வயதில் 1988ல் இந்த உலகை விட்டு சென்றார் கான் . இந்திய அரசு ஐந்து நாட்கள் துக்கம் அனுசரித்து மரியாதை செலுத்தியது . சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் என மொத்த வாழ்வையும் மக்களுக்காக கொடுத்து எந்தவித சலுகைகளையும் அனுபவிக்காமல் சென்றவரை இன்று நினைவுகூர்வோம்.





