Monday, 27 July 2020

பஷீரின் பரிவர்த்தனை

 

சம்பவம் - 1

கைவிலங்கிட்ட ஆஜானுபாகுவான மனிதனை காவலர்கள் இழுத்து செல்கின்றனர்.பல நாள் அகப்படாமல் இருந்த பெரிய திருடன் ஒருவழியாக சிக்கினான் என்று மக்களின்  முணு முணுப்பு காதில் விழுகிறது  . கூட்டத்தில் நின்ற பஷீர் அந்த முகத்தை பார்க்கிறார். இவரை அவன் பார்த்துவிட மாட்டானா ! ஒரு முகமன் செய்துவிடமாட்டோமா என்று நிற்க . அவன் பார்வை நேராக சாலையை நோக்கியே இருக்கிறது . முன்பொருநாள் காரிருள் அகன்று சிறு ஒளி பரவியதொரு தருணத்தில் கருணை மிகு கண்கள் கொண்ட முகத்தை  காண்டார் பஷீர்   . தன் முகத்தில் விசிறிய நீரினால் மயக்கம் தெளிய கையில் தேநீர் குவளையை இருத்தி கொஞ்சம் குடியுங்கள் என்றார் அந்த முகமறியாத  மனிதர் . உணவு வாங்கிக்  கொடுத்து உண்ணுங்கள் என்றார் .அன்று  கோரப்பசியுடைய  நாயைப்போல உண்டதாக பஷீர் குறிப்பிடுகிறார்   . இயல்புக்கு வந்ததாய் உணர கையில் ஒரு பொட்டணத்தை திணித்து விட்டு பார்த்து போங்கள் என்றவாரே  அவர்   சென்றார்   . பிரித்து பார்க்க ஒரு வாரத்துக்கு தேவையான பணம் அதில் இருந்தது . அவர் பெயரை கேட்க வில்லையே என்று எத்தனிக்க . அவ்விடத்திலிருந்து மறைந்து போயிருந்தார் . அதற்கு பின்  அந்த முகத்தை இன்றுதான் பார்க்கிறார் பஷீர் . கேலியும் கோபமும் கமழ்ந்து கிடந்த அந்த கூட்டத்தில் நன்றியும் கருணையும் ஒருசேர ஒரு முகம் அந்த திருடனை பார்த்துக்கொண்டிருந்தது ஆனால் அவன் பார்க்கவில்லை .

சம்பவம் - 2

வடஇந்தியாவின் மலைப்பகுதி அது . மாலையில்  ஒரு விடுதிக்கு உணவருந்த செல்கிறார் பஷீர். உணவருந்திய பின் முக்கால் ரூபாய் பில் வருகிறது எழுந்து ஜோப்பில் கைவிட்டவருக்கு அதிர்ச்சி , எடுத்து வந்த பர்ஸை காணும் . கடைக்காரிடம் விவரம் சொல்கிறார். அவன் இவரை இயலானமாக பார்க்கிறான்  பெரும் ஏமாற்றுக்காரனை அணுகும் தொனியில் மிரட்டுகிறான் . போட்டிருக்கும் உடுப்புகளை கழட்டி வை என்று ஆதட்டுகிறான் . கூனி குறுகி போகிறார். மேலாடையை கழட்டி மேசையில் வைக்க. டவுஸரையும் கழட்டடா எனும் குரல் இவரை நடுங்கச்  செய்கிறது. இறுதியில் வேறு வழியில்லை என்று கழற்ற முற்படுகையில். நிறுத்துங்க சார் என்று ஒரு குரல் ! வேகமாய் வந்த ஒருவன் பில் தொகையை எண்ணி வைத்துவிட்டு. உடுப்பை எடுத்து கொடுத்து போட்டுக்கங்க சார்! என்கிறான். இதுநாள் வரை செய்த நல்வினைகள் ஒன்றாய் வந்து காத்ததாக அவருக்கு தோன்றுகிறது . அவனுடன் வெளியேறுகிறார். அந்த விடுதியில் உணவருந்திக்கொண்டிருந்த அனேகர் எப்போது இவன் நிர்வாணமாவான் என்றிருந்ததாய் தோன்றியது அவருக்கு   .நன்றிப்பா என்கிறார் பஷீர். அசலூர் வந்தா கவனமா இருக்க மாட்டிங்களா  என்றவாறே அவனிடமிருந்த நான்கைந்து பர்ஸ்களை எடுத்துக்காட்டி இதுல எது உங்களோடது என்கிறான் . அவருடையதை எடுத்துக்கொள்கிறார். பார்த்து போங்க என்றவாறே செல்கிறான்  அவன் . பெயரை கேட்க மறந்துவிட்டோமே என்று எத்தனிக்கையில் அவன் இருளில் மறைந்து போயிருந்தான் .

இந்த இரண்டு சம்பவங்களில் ஒன்று அவர் வாழ்வில் நடந்தது மற்றது அதைக்கொண்டு அவர் உருவாக்கிய  புனைவு . எப்படி ஒரு நிகழ்வின் ஆன்மாவை ஒரு புனைவில் இருத்தியுள்ளார் என்பது நம்மை மிரட்சியடைய செய்கிறது .


No comments:

Post a Comment