Friday, 18 August 2017

Comrades: Almost a Love Story - 1996 - Peter Chan



தோழர்கள் : ஏறக்குறைய ஒரு காதல் கதை .



  காதலில் நட்பு வரலாம் , நட்பில் காதல் வரக்கூடாது என்றெல்லாம் என்னதான் பேசிக்கொண்டிருந்தாலும் ,நிதர்சனத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நட்பில் ஒரு காதல் வந்தால் ! . அப்படி ஒரு வித்யாசமான உறவைப் பற்றித்தான் படம் பேசுகிறாது.
எனக்காக, நீ ஹாங்காங் வரல , உனக்காக நான் ஹாங்காங் வரல! என்று அவனை மடைத் திருப்புகையில் , அவன் காதலிக்கு வாங்கும் அதே பரிசை இவளுக்கும் வாங்குகையில் அவனைப்பார்க்கும் பார்வை ! இதே போன்ற ஒரு நட்பு உன் காதலிக்கு இருந்தால் அது உனக்கு தெரியவந்தால் என்ன செய்வ ? என்று அவனை விக்கித்து நிற்க செய்கையில் நடிப்பின் நகாசுகளை நமக்கு கோடிட்டு காட்டுகிறார் Maggie Cheung .


  சிறிது நேரம் வந்தாலும் அதிகம் கவர்ந்தது அந்த கேங்ஸ்டர் கதாபாத்திரம் . அவனையே நெனச்சிட்டு இருக்காத தூங்கு , என்று சொல்லும் நகைச்சுவையும் . அவள் விலக நினைத்து அதை சொல்ல வருகையில் ! அவள் சொல்வதற்கு முன்னே , நீ ஏன் என்னையே கட்டிட்டு அழுற , உனக்கு பிடிச்ச யாரோடையாவது வாழலாம்ல என்று செல்லுகையில் அந்த பாத்திரத்தின் மீது நமக்கும் பற்று அதிகமாகிறது . நன்றாக கவனித்தால் ஒரு கேங்ஸ்டரின் முழு வாழ்வும் பட்டும் படாமல் சில வசனங்கள் சில காட்சிகள் மூலமும் படத்தில் விரவிக்கிடக்கிறது .


  ஒரு காதல் கதையாக மட்டும் இந்தப் படத்தை நகர்த்தாமல் ஹாங்காங் நகரத்தின் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் கதையினுடே பின்னிப்பிசைந்ததில் இயக்குனரின் திறன் தெரிகிறது . 90கள் ஹாங்காங் நகர வரலாற்றில் முக்கியமான காலகட்டம் இங்கிலாந்து வசமிருந்த குத்தகைக்காலம் முடிந்து சீன வசம் திரும்பிய காலக்கட்டம் அந்த மாறுதல்கள் நம்மை உறுத்தாத வண்ணம் பின்புலத்தில் நிகழ்ந்தவண்ணமிருக்கிறது .

Monday, 14 August 2017

Cléo from 5 to 7 - 1962 - Agnès Varda



   ஒரு புலி நமக்கு பின்னே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . நமது பிரக்ஞையில் அது வராத வரை அதாவது நமக்கு அது இருப்பது தெரியாதவரை . அங்கு நிதர்சனத்தில் புலி இருந்தாலும் நமக்கு அது இல்லைதான் . அதன் இருப்பை உணர்ந்தால் ஏற்படும் பதற்றம், பயம் எதுவுமே அந்த நிலையில் நம்முள் இருக்காது .இதேபோன்று இல்லாத புலியையும் நாம் கற்பனை செய்து பீதி கொள்ளலாம் .இரண்டிலும் மனமே மையம் , இது ஒரு மாய விளையாட்டு நாமும் பல முறை நம்மையறியாமல் அந்த விளையாட்டில் பங்கு பெற்றிருப்போம். அப்படி ஒரு மனவிளையாட்டைப் பற்றிய படம் இது .


  பிரபல பாடகி அவள் , தனக்கு புற்று நோய் வந்திருப்பதாக நினைக்கிறாள் . அதற்கான சோதனை முடிவு மாலை 7 மணிக்கு கிடைக்கவிருக்கிறது . இந்த இடைப்பட்ட இரண்டுமணி நேரத்தில் அவளைச்சுற்றி நடப்பவை எல்லாமே எதிர்மறையாக தோன்றுகிறது . எல்லா சம்பவங்களும் அவளை சாவை பற்றிய எண்ணத்திற்கே இட்டு செல்கின்றன .அவளது மனக்கிலேசமும் அதிலிருந்து அவள் வெளிவர படும் பாடும் . 5 மணியிலிருந்து 7 மணிவரை இரண்டுமணிநேரம் அவள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதும்தான் படம் . 55 ஆண்டுகளுக்குபின்னும் நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறது .