Friday, 19 May 2017

உப்புமா  நூடுல்ஸ்




   முன்பொருமுறை சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் படித்துக்கொண்டிருந்த பொழுது , அந்த கல்யாண கோஷ்டிக்கு வாஷிங்டனில் காலை உணவாக ரவா உப்புமா செய்வதை , அதை அவர்கள் உண்ணும் முறையை அப்படி எழுதியிருப்பார், அந்த இலையில் பளிச்சிடும் நெய்யின் மினுமினுப்பு படிக்கும் நம் கண்னை கூசும் அளவிற்கு விவரித்திருப்பார் . வாசித்துவிட்டு இருப்பு கொள்ளவில்லை , கடைக்கு ஓடிப்போய் ரவா வாங்கி வந்து உப்புமா கிண்டி உண்ட பின் தான் ஆசுவாசமானது . உப்புமா பலருக்கு பிடிக்காத வஸ்து . காரணம் நாம் பெரும்பாலும் சாப்பிடும் உப்புமா உப்புமாவே அல்ல உப்புமா என்று நம்பப்படும் ஒன்றுமட்டுமே . எப்படி ஒரு உணவகத்தின் தரத்தை அவர்கள் தரும் சாம்பார் கொண்டு கணிக்கலாமோ அது போல ஒரு தேர்ந்த சமையல்காரரின் நிபுணத்துவத்தை அவர் கிண்டும் உப்புமாவைக்கொண்டு கணிக்கலாம் (அப்படினு யார் சொன்னா ? நாமளே சொல்லிக்க வேண்டியதுதான் ).


   தாளிச்சு வறுத்த ரவா & தண்ணி சேர்த்து கிண்டி ஒருவித பசைப்போல இறக்கினால் உப்புமா ரெடி என்றே பலரும் நம்புகின்றனர் . ரவையை வறுக்கும் பதத்தில் தொடங்கி , இறுதியில் சில நாழிகைகள் அடுப்பில் அமைதியாய் அதை இருத்தி வைப்பது வரை நாம் தரும் அடுப்பு தணலின் அளவை இசைக்கலைஞரின் லாவகத்தோடு கூட்டி குறைக்கும் கலை கைவரப்பட்டவர்கள் ஒரு சிலரே . நீரும் நெருப்பும் நெய்யும் அளவு கூடினால் குழாகி, குறைந்தால் பொறுக்காகி உண்பவரின் பொறுமையை சோதிக்க வாய்ப்பு அதிகம். இடும் உளுந்து தோலோடு இருக்கிறதா இல்லையா , இஞ்சி துகள்கள் , தேங்காய் சிதறல்கள் சில உண்டா இல்லையா என்பதும் கணக்கில் வரும் . இறுதியாக மேலே சேர்க்கப்போவது தேங்காய் எண்ணையா , நெய்யா என்பதுவரை சிறு காரணிகளும் சில சுவை மாற்றத்தை கொடுக்கும் . சமைப்பவருக்கு உப்புமா என்றவுடனே ஒருவித அலட்சியம் வந்துவிடுவதாலோ என்னவோ பெரும்பாலானோர் அதை சரியானமுறையில் சமைப்பதில் சறுக்கி விடுகின்றனர் என்றே தோன்றுகிறது . சிரத்தை இன்றி செய்வது எப்படி சிறப்பாக அமையும் . வாஷிங்டனில் திருமணம் ரவா உப்புமா போன்றே Tampopo ன் ரேமன் நூடுல்ஸும் என்னை நூடுல்ஸ் வாங்க கடையை நோக்கி துரத்தியது .

   சமையல் & உணவு பற்றி தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன , அதே அளவு திரைப்படங்களில் இருக்கிறதா என்றால் ? இல்லை என்றே தோன்றுகிறது . ஒரு சில காட்சிகளுண்டு , இருந்தும் முழுக்க முழுக்க நம்மிடமிருக்கும் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் இன்னும் வரவில்லை . Tampopo - படம் முழுக்க முழுக்க உணவு சம்பந்தப்பட்டது . முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை உணவு மற்றும் உணவு சார்ந்த விஷயங்கள் மட்டுமே .


   ஒரு சமையல் கலைஞர் சொன்னது " எந்த சமையல் செய்முறையிலும் சில படிநிலைகள் இருக்கும் . 1,2,3,4 என்று , அதில் ஒரு படிநிலையை மாற்றினாலும், உதாரணத்திற்கு 1,2,4,3 என்று மாற்றினாலும் சமையலின் சுவையில் மாறுபாடு ஏற்பட்டுவிடும்".அந்த அளவுக்கு சிறு மாறுதல்கள் கூட சுவை மாற்றத்தை ஏற்படுத்திவிடும் . அதே போல சாப்பிடுவதற்கும் சில படிநிலைகள் இருக்கின்றன . அப்படி அவர்களின் படிநிலை ஒன்றை இந்த முதியவர் அவனுக்கு சொல்லித்தருகிறார் . நம்மிடமும் இப்படி உணவு சார்ந்து பல விஷயங்கள் இருந்தும் நாம் இந்த படம் போல பதிவுகளாக்க தவறுகிறோம் .
உங்கள் இட்லியை சில்லி இட்லி போன்று எதோ ஒன்றாக உருமாற்றி ஒரு நாட்டில் அது உடல் நலத்திற்கு கெடுதல், அது குப்பை உணவு என்று சொன்னால் எப்படி இருக்குமோ! அது போலத்தான் இங்கே என்னை கொடூரமாக்கி வைத்திருக்கிறீர்கள், என்னை நூடுல்ஸ் என்றால் நானே நம்பமாட்டேன் .என்று படம் முடிந்த பிறகு சாப்பிட்ட நூடுல்ஸ் பல்லிளித்து .

Monday, 15 May 2017

LENS - 2017 - Jayaprakash Radhakrishnan 





   ஒரு நல்ல கவிதைக்கு நேர்த்தியான சொற்கட்டுமானம் மட்டுமே போதுமா அல்லது நல்ல பொருளும் வேண்டுமா ? நல்ல உணவுக்கு சுவை மட்டுமே போதுமா ? அல்லது அவை தரும் ஆரோக்யமும் அவசியமா ? இப்படி எல்லா கலைகளிலும் இரண்டு பக்கங்களை பற்றி விவாதங்கள் நடத்திக்கொண்டே இருக்கலாம் . இவையிரண்டும் சரியான விகிதத்தில் கலந்த சில படைப்புகள் உன்னதமாக பார்க்கப்படுகின்றன உதாரணத்திற்கு சங்க பாடல்களைப்போல அல்லது தேனைப்போல . சுவை , சொற்கட்டு போன்ற நகாசு எளிதாக பெருவரியானவர்களை கவர்கிறது என்பது உண்மை. . திரைப்படங்களுக்கும் இவை பொருந்தும் சுவாரஸ்யம் மட்டுமே போதுமா, அல்லது அது நம்மிடம் விட்டுச் செல்லும் அல்லது நம்முள் உருவாக்கும் கருத்தாக்கங்களும் (நரம்பு புடைக்க சத்தமாக நாயகன் பேசும் கருத்துக்கள் அல்ல இயக்குனர் நமக்கு உணர்த்த விரும்பும் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள் ) அவசியமா? .அரிதாகவே சிலப்படங்கள் இந்த இரண்டையும் செவ்வனே ஒருங்கேபெற்று வருவதுண்டு . "லென்ஸ்" அப்படிப்பட்ட படைப்பு . அவர்களுக்கு கிடைத்த பொருளாதார எல்லைகளை வைத்துக்கொண்டு நிறைவாய் படைத்திருக்கிறார்கள்.

நாம் சில மெய்நிகர் குற்றங்களில் கர்த்தாவாக இல்லாமலிருக்கலாம் . ஆனால் பார்வையாளர்களாக பங்குதாரர்களாகவே இருக்கின்றோம் . பிரக்ஞை இன்றி வந்து விழுபவற்றை வாங்கி எரியும் செங்கல் அடுக்கும் சித்தாள் போல -Forward களை பறக்க விடுகிறோம் . அது ஏற்படுத்தப்போகும் பாதிப்பின் வீரியம் உணராமல் . மெய்நிகர் உலகில் நம்மால் சிறிய விஷயமாக பார்க்கப்படும் ஒன்றின் வீரியத்தை நமக்கு உணரவைக்கிறார் .

மிகக்குறைந்த கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் அல்லது சில காத்திரமான படங்களைப்ப்பார்க்கும்போது ,நமது தமிழ்ச்சூழலில் அது போன்ற படைப்புகளுக்கான வாய்ப்புகளே இல்லை என்ற என் எண்ணத்தை பொய்யாக்கிவிட்டார் இயக்குனர் . இந்த ஆண்டு நல்ல படைப்புகள் என்று கொண்டாடப்பட்ட வந்த D16, மாநகரம் , குற்றம்- 23 , 8 -தோட்டாக்கள் வரிசையில் இந்த படத்தையும் வைக்கலாம் . அந்த பட்டியலில் முதலிடத்திற்கு தகுதியானது .