Tuesday, 11 April 2017

தீராக்காதலி............


அவ்வளவு கடுமையாக நடந்துகொள்பவனிடம் ,தன்மானம்    நிறைந்தவளாய் தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் லீலா திரும்ப திரும்ப ஏன் செல்கிறாள்? . அப்படி அதீதமான ஒரு காதல் நமக்கு விசித்திரமாய் தோன்றலாம் . வரலாற்றில் அப்படி ஒரு காதல் இருந்திருக்கிறது . தனித்தன்மையோடு நாடக உலகில் கோலோச்சிய K.B. சுந்தராம்பாள் - S.G.கிட்டப்பா மேல் கொண்டிருந்த காதல் . பழம் நீயப்பா என்ற கணீர் குரலுக்கு சொந்தக்காரர் & நெற்றி நிறைய நீரணிந்து காவியுடையுடன் சிவன் வேடமிட்ட சிவாஜியிடம் நேருக்கு நேர் பேசும் அவ்வையாக மட்டுமே நமக்கு அவர் பரிட்சயம் . அவர் வாழ்வில் ஏறக்குறைய ஆறு ஆண்டு இருந்த காதலும் . அதை அவர் எவ்வளவு அதீதமாய் அணுகினார் என்பதையும் சாரு "தீராக்காதலியில்" நுணுக்கமாக எழுதியிருப்பார் . "எட்டு திக்கும் மதயானை" போல எப்படி இப்படி ஒரு தலைப்பை யோசித்தார்கள் என்று நம்மை யோசிக்கவைக்கும் தலைப்பு "தீராக்காதலி".அந்த புத்தகத்தில் வேறு சில ஆளுமைகளைப்பற்றி அவர் எழுதியிருந்தாலும் . புத்தகத்தை கணிசமாக இந்த தீராக்காதல் ஆக்கிரமித்திருக்கும் .


   எல்விஸ் பிரஸ்லியின் புகழைப்பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு , மைக்கேல் ஜாக்ஸனின் புகழை நாம் நேரடியாக கண்டதுண்டு . அவர்களுக்கு நிகராக அதே அளவு புகழோடு இருந்திருக்கிறார் கிட்டப்பா . அவர் நாடகத்திற்காக தனி ரயில் விடும் அளவுக்கு இருந்திருக்கிறது அவர் புகழ் . அதே காலகட்டத்தில் நாயகியாய் பெரும் புகழுடன் விளங்கிய KBS - கிட்டப்பாவை கண்டதும் காதல்கொண்டிருக்கிறார் .கிட்டப்பாவிற்கு அவர் உருகி உருகி எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் எப்படி அவரை விளித்து துவங்குகிறார் எப்படி தன்னை விளித்துக்கொண்டு முடிக்கிறார் என்பதே சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கடிதத்திலும் அவருடைய அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்து அந்த காதலின் அலைநீளம் மாறிக்கொண்டேயிருக்கும் .



  முன்னமே திருமணமாகியிருந்த கிட்டப்பா காதல்வயப்படுத்தான் இவரை இரண்டாவதாக மணமுடித்தாலும் சில பிணக்குகளை ஏற்படுத்தினார் . ஆறு ஆண்டுகளில் ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள் பிரிந்து இருந்தார் . அவர் எப்படி இருந்தாலும் KBS- க்கு காதல் குறையவேயில்லை. தொடர்ந்து கடிதத்தொடர்பில் இருந்தார் . 27- வயதில் நோய்வாய்ப்பட்டு கிட்டப்பா இறந்தபின்பு இறுதியாக அவரது தீராக்காதலை ஆன்மிகத்தில் திசைத்திருப்பினார் .