Rakshadhikari Baiju Oppu - 2017 -Ranjan Pramod
ஒரு சில மைய கதாபாத்திரங்களை மட்டும் செழுமையாக படைப்பதில் மெனக்கெடும் சில இயக்குனர்கள் அதே சிரத்தையை மற்ற கதாபாத்திரங்களுக்கு கொடுப்பதில் தவறவிட்டுவிடுவர் அவர்களுக்கு சில நிர்பந்தங்கள் இருக்கலாம் . இந்தப்படத்தில் மையப்பாத்திரத்தின் நுணுக்கமான வடிவமைப்பிற்கு இணையாக மற்ற பாத்திரங்களிளும் கவனம் செலுத்தியுள்ளார் . முக்கிய கதாபாத்திரங்கள் இன்னார் என்று எண்ணினாலே குறைந்தபட்சம் ஒரு 20 கதாபாத்திரங்களை நாம் சொல்லவேண்டி வரும் . "கும்பாலம்" கிராமத்தில் வாழும் அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தி , ஒரு மால்குடியை போல ஒரு கோபல்லபுரத்தை போல அன்பு கமழ் கிராமம் அது .
பைஜூவின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை நுணுக்கமாக ஒவ்வொரு காட்சியிலும் காட்டுகிறார்,அன்பே வடிவான சாதாரண மனுஷன் .நமது ஊரில் பால்ய காலத்தில் நிச்சயம் ஒரு "பைஜூ" அண்ணா இருந்திருப்பார் , பிற்காலத்தில் எல்லாரும் எங்கோ ஓடிக்கொண்டிருக்க அவர் மட்டும் அப்படியே அதே அன்போடு அங்கேயே இருப்பார் ."லீலா" ,"அனுராக கரிக்கின் வெள்ளம்" இப்போது இந்தப்படம் என்று என்னையறியாமலேயே பிஜு மேனனின் ரசிகனாகிக்கொண்டிருக்கிறேன் ..நமது பால்ய நினைவுகளை கிளறிவிடுகிறது படம் , நமக்கும் "கும்பாலம் பிரதர்ஸ்" போல நிச்சயம் ஒரு டீம் இருந்திருக்கும் , கிரிக்கெட்டை அற்புதமாக பயன்படுத்திய ஒரு சில படங்களில் நிச்சயம் இதுவும் இருக்கும் .பெரிய அதிரடி திருப்பங்கள் இல்லைதான் இருந்தும் திரைக்கதை ஒரு பச்சோந்தியைப்போல் மெலிதாக நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது நம் ஊகங்களை அடித்து நொறுக்கவில்லை என்றாலும் அமைதியாய் நிராகரிக்கிறார் இயக்குனர் . நம்மை எதை நோக்கி இட்டு செல்கிறார் என்ற சுவாரஸ்யத்தை இறுதிக்காட்சி வரை காத்து கடைசியில் மிளிர்கிறார். மஹேஷிண்டே பிரதிகாரத்திற்கு பிறகு இந்த படத்தில் படம் நெடுக ஒருவித சுகந்தத்தை உணரமுடிந்தது .
