சுதந்திர இந்தியாவின் புதிய திட்டமிட்ட நகரை உலகின் முன்னணி கட்டடவியாளரை வைத்து நிர்மாணிக்க வேண்டுமென நேரு விரும்பினார் . அதன்படி செய்தார் அந்த முன்னணி படைப்பாளி ஆகச்சிறந்த திட்டமிட்ட நகரமைப்பை உருவாக்கினார் . இருந்தும் அது பயன்பாட்டுக்கு வந்த போது மக்களால் அதனுடன் ஒன்ற முடியவில்லை . காரணம் அந்த அமைப்பே முற்றாக மேற்குலக கலாச்சாரத்துடன் இருந்தது . குடியிருப்புகள் ஒரு பகுதி தனியே , வணிக , அலுவலக பகுதிகள் தனி தனியே என . ஒரு தலைவலி மாத்திரை வாங்க 4 கிமி தூரம் சென்று திரும்ப வேண்டிய நிலை . அழகியல் அமைப்பு என்று எல்லாம் இருந்தும் உபயோகிக்கப்போகும் மக்களுக்கு அந்நியமாக நின்றது அது . இப்படி சில அடிப்படைகளை நாம் கவனிக்கத்தவறுவோம் என்றார் கல்லூரி இரண்டாமாண்டில் பாடமெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் . அப்படி மனித மனத்தை கவனித்து நிர்மாணிக்கப்பட்ட ஒரு படைப்பை எடுத்துக்காட்டி அதை நிர்மாணித்த பி.வி.தோஷி பற்றி பேசினார். முதன் முதலில் அவர் பெயரை கேள்விப்பட்டது அப்போதுதான்.அன்று அவரைப்பற்றி கேட்ட விஷயங்கள் அந்த மாணவ மனதில் அவரை ஆதர்சனமாக்கியது .
ஆரண்யா என்ற அந்த குடியிருப்பை எளிய மக்களுக்காக வடிவமைத்தவர் , அதன் தெருக்களின் முனைகளில் பெட்டி கடைகளுக்கும் டீ கடைகளுக்கும் தனி இடங்களை ஒதுக்கி வைத்தார் . வீடுகளின் புழக்கடைகளை முற்றம் போன்று அமைத்தார் மக்கள் அமர்ந்து கதைக்க . அங்கு குடியேறிய மக்களுக்கு அவர்களின் வாழ்வியலில் சிறு கீறல் கொடுக்காத ஒரு வசிப்பிடம் கிடைத்தது .அவரது படைப்புகளில் இன்றும் பேர் சொல்லும் படைப்பு அது.
"எப்படி சமைக்க வேண்டுமென நான் கத்து கொடுத்துட்டேன் எதற்காக சமைக்க வேண்டுமென நீ கத்து கொடு " என்று உஸ்தாத் ஓட்டல் கரீம் க்கா ஒரு சீட்டை கொடுப்பார் . அதுபோல மேற்குலக ஜாம்பாவான்களிடம் சிஷ்யராய் நின்று வித்தை கற்றுக்கொண்டார் பின் அதை பிரயோகிக்கும்போது இந்திய மனித மனதை மனதில் கொண்டே படைப்புகளை நிகழ்த்தினார். இந்தியாவில் கட்டடக்கலை ஜாம்பவான்களில் இன்றும் இவரை முன்னணியில் வைப்பது வாழ்விலும் படைப்பிலும் அவர் காட்டும் அந்த எளிமைதான்.
அகமதாபாத்தில் அவர் துவங்கி வைத்த ஒரு கட்டிடக்கலையியல் கல்லுரி பல்கலைக்கழகமாகி உன்னதமான படைப்பாளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது . இன்றும் அங்கு சென்று மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் . Pritzker prize- என்பது ஒருவிதத்தில் நோபல் பரிசுக்கு இணைதான் ஆண்டுக்கு ஒருவருக்கு மட்டுமே என கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது அதை வாங்கும் முதல் இந்தியர் என்ற பெருமையுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றார்