Thursday, 22 December 2016

La La Land [2016] - Damien Chazelle

   






    இந்த கதையை ஒரு கால் பக்கத்தில் எழுதிவிடலாம் , 3 நிமிடத்தில் சொல்லிவிடலாம் . மாறுபட்ட விதங்களில் இதே போன்ற பல காதல் கதைகளை நிச்சயம் நாம் கடந்து வந்திருப்போம் ..இந்த கதையை ஒரு கதைச்சொல்லியாக சொல்ல முயன்றிருந்தால் , அது சோபிக்காது நிச்சயம் தோல்வியுற்றிருக்கும் என்பதை இயக்குனர் நன்றாக உணர்ந்திருக்கிறார் . அவருக்கே உரிய பாணியில் வேறுவிதமாக நுணுக்கமாக கையாள்கிறார்.


   இரண்டு கலைஞர்கள் , அவர்களின் லட்சியங்களின் மேல் அவர்களுக்கு இருக்கும் காதல் ,அவர்களுக்குளும் காதலை உருவேற்றுகிறது . அந்த அனுபவத்தை அவர்கள் எப்படி உணர்ந்தார்களோ அதே அளவு ஒரு துளி காதல் கூட குறையாமல், நாமும் அனுபவிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறார் இயக்குனர் . இசையை ,ஒளியை ,வண்ணத்தை அவரது ஆயுதங்களாக்கி அதை சாத்தியப்படுத்துகிறார் . 0 -டிகிரிக்கு கிழான சூழலை உருவாக்கினால் நீர் உறைவதைப்போல அவர்கள் உணர்ந்த காதலில் நாமும் திளைக்கிறோம்.  

   பல காட்சிகளில் காதலில் இருக்கும் அவர்கள் மாயலோகத்தில் சஞ்சரிப்பதைபோல நாமும் சஞ்சரிக்கிறோம் .அந்த இணை படத்தில் எந்தஒரு இடத்திலும் அவர்களுக்குள் காதலை சொல்லிக்கொள்ளவில்லை , இருந்தும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களுக்குள் காதல் கசிந்துக்கொண்டே இருக்கிறது . அவர்களின் எதிர்பாராத முதல் மூன்று சந்திப்புகள், திரையரங்கில் திரையின் மையத்திற்கு சென்று அவனைத்தேடுவது ,அவன் தரும் எதிர்பாராத இரவு விருந்தும் அதை தொடர்ந்த சம்பாஷணைகள் , சிறு பிரிவிற்கு பிறகு அவள் வீட்டில் கேட்கும் அவனது பழய காரின் ஹாரன் சப்தம் , Seb's - என்ற அந்த பெயர் பலகையை அவள் பார்ப்பது , பார்வையாளர் பகுதியில் அவளை பார்த்ததும் அவர்களுக்கான அந்த இசைக்கோர்வையை இசைப்பது என்று பல காட்சிகளில் பரவசப்படுத்துகிறார்கள் இயக்குனரும் இசையமைப்பாளரும் .


   சிறந்த இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்கையில் , இசைக்கோர்வையை உச்சத்திற்கு கொண்டுசென்று ,ஒன்றிரண்டு இசைத்துளிகளுடன் முடிப்பார்கள். அதுவரை கேட்ட அந்த நிகழ்விற்கு மகுடம் வைத்தாற்போல் இருக்கும் .அது போல இருந்தது இறுதியில் பரஸ்பரம் நாயகனும் நாயகியும் பரிமாறிக்கொண்ட புன்னகை மொத்த படத்திற்கும் மகுடமாய்.

பெயருக்காகவே பார்க்கலாம் : Damien Chazelle , Ryan Gosling