Friday, 13 July 2018

இடைவெளி - சம்பத்

   







      பிரபஞ்ச உயிர்கள் அனைத்தும் பார்த்து மிரளும் ஒன்றை , அதைப்பற்றி பேச & கேட்கக்கூட பயப்படும் ஒன்றை நெருங்கி எதிர்கொண்டு . அதன் நேர்த்தி ,எதற்கும் வளையாத ஸ்திரம் , காலம் கடந்து நிற்கும் அதன் நித்யத்தன்மை போன்றவற்றை படிப் படியாய் ஆராய்ந்தது மட்டுமல்லாமல் .அந்த படிநிலைகளை அப்படியே எழுத்தாக படியெடுத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார் ஒரு மனிதர் . அவரை என்னவென்று சொல்வது. இந்த புத்தகத்தில் உள்ளதை சுருக்காக சொல்லுங்கள் என்றால் ! நம்மால் நிச்சயம் சொல்லமுடியாது , ஏனெனில் அது ஒரு ஆழ்ந்த தேடலின் அனுபவ குறிப்புகள் .சாவைப்பற்றிய அவரது தேடல் ஆன்மிகத்தை சார்ந்தோ பௌதிகத்தை சார்ந்தோ நில்லாமல் தனித்ததொரு பாதையாய் இருக்கிறது .எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பார்க்கிறார் . ஒரு ஆராய்ச்சியாளராக ஆய்வுமேசையில் சாவின் நீள அகலத்தை அறுத்து ஆய்கிறார்.வாசித்து முடிக்கையில் ஒரு ஆய்வாளன் இலக்கியம் படைத்த பிரமை தோன்றுகிறது நமக்கு .


    நூறு பக்கங்கள் கொண்ட சிறு நூல்தான் இலகுவாக வாசித்துவிடலாம் என்று எடுத்தால் , பக்கங்களை கடக்கமுடியாமல் தத்தளிக்கச் செய்கிறது . அவ்வளவு செறிவான பத்திகள் . சிலவற்றை அவர் சொல்லும் தளத்தில்தான் நாம் புரிந்துகொண்டோமா ! என்றும் தோன்றுவைக்கிறார் .புத்தகத்தில் சிலப்பகுதிகள் நம்மை மாய உலகுக்குள் இழுத்துச் செல்கிறது.
குறிப்பாக சாவு முதன்முறையாக அவரிடம் தோன்றி சமிக்கையாக "இடைவெளி " யை ஆமோதிக்கும் கனவுக் காட்சி இறுதியில் பாலைவன கனவுக் காட்சி . அந்த பக்கங்களை நாம் காட்சிகளாக யோசிக்க . David Lynch - ன் படங்களில் வரும் குறியீடுகள் நிறைந்த மாய கனவுக்காட்சிகளை பார்க்கும் அதே உணர்வு தோன்றியது ,ஆனால் Lynch - தன் திரைப்பட வாழ்வை தொடங்கும் முன்னமே இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சர்யம். 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இப்படி இவர் எழுதினர் என்ற ஆச்சர்யம் வாசிப்பினுடே நம்மோடு பயணித்துக்கொண்டே இருக்கிறது .



    யாருமே பார்க்க விரும்பாத தன்னை. சதா யோசித்துக்கொண்டிருந்த ஒருவன் என்பதால் . சாவு அவரிடம் நெருக்கம் காட்டி சம்பாஷித்ததோ ! இவ்வளவு என்னை புரிந்துகொண்ட உன்னை பிரிந்து என்னால் காத்திருக்கமுடியாது வா ! என்று முன்னமே அழைத்துக்கொண்டதோ!."இடைவெளி"யை அச்சு நிலையில் பார்த்த அவர் புத்தகம் முழுமையடைந்து வெளிவரும்போது சாவுடன் சங்கமித்திருந்தார் . இறுதிவரை அவரது புத்தகத்தை அவர் பார்க்கவில்லை . அவர் ஒரு அறிவுஜீவி என்பதில் சந்தேகம் இல்லை . இன்னும் கொஞ்சகாலம் இருந்திருந்தால் என்னவெல்லாம் எழுதியிருப்பார் என்று யோசிக்கையில் ! மலைப்பும், இல்லாமல் போன சோகமும் நம்மை கவ்வுகிறது . நிச்சயம் தமிழுக்கு பெரும் இழப்பு .



    1975 - ல் ஒரு இதழில் வெளியான "இடைவெளி" . 1984 - ல் சம்பத் அவர்களின் இறப்பிற்கு பின் புத்தகமாக வெளியாகி இருக்கிறது . அதற்கு பின் சில சிக்கல்களால் மறுபதிப்புகள் வராமலேயே இருந்திருக்கிறது . சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பழைய பதிப்பின் Pdf - பிரதி இணைய வெளியில் புழங்கிக்கொண்டிருந்தது .அப்படிப்பட்ட நிலையில் "இடைவெளி"யை 30 ஆண்டுகளுக்கு பின் புது பதிப்பாக வெளியிட்ட "பரிசல் புத்தக நிலையத்தினரின் " முயற்சிக்கு , இதை செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கும் அதை செவ்வனே செய்ததற்கும் தலைவணங்க வேண்டும் . குறைந்த எண்ணிக்கையில் பதிப்பித்துள்ள இந்த புத்தகத்தை தொடர்ந்து வாசிப்புத்தளத்தில் உயிர்ப்போடு வைத்திருக்கவேண்டியது வாசகர்களாகிய நம் கையில் இருக்கிறது .


இடைவெளி - எஸ் .சம்பத்

பரிசல் புத்தக நிலைம் வெளியீடு