பி எஸ் ராமையா - இந்த பெயர் சி சு செல்லப்பா குறிப்பிட்டு எழுதியதன் மூலமே பரிச்சயம் . அவர் யார் என்று தேடுகையில் மணிக்கோடி அணியினர் பற்றியும் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய அரும்பணி மற்றும் அதன் முக்கிய தளபதியாய் அவர் செயல்பட்டதும் தெரிந்தது ,சிறுகதைகளின் சக்கரவர்த்தி , வியாசர் என்று பலவாறு புகழப்பட்டிருக்கிறார். உண்மையாகவே அவர் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை வியப்பை அளிக்கிறது. சி சு செல்லப்பாவே இவரின் தேர்ந்தெடுத்த 300 சிறுகதைகளுக்கு திறனாய்வு செய்திருக்கிறார். பி எஸ் ராமையா .சினிமாத்துறையிலும் தன் முத்திரையை பதித்துள்ளார் . JP.சந்திர பாபுவிற்கு முதல் திரைப்பட வாய்ப்பை வழங்கியவரும் இவரே என்பது ஆச்சரியமளிக்கிறது .அவர் எழுதிய பல புத்தகங்கள் தற்போது பதிப்பில் இல்லை . "மணிக்கொடி காலம்" என்ற ஒன்றும் இந்த "முத்துக்கள் பத்தும்" கிடைக்கின்றன. இந்த முத்துக்கள் பத்து அவரின் தேர்ந்தெடுத்த 10 சிறுகதைகளை கொண்டது . (உண்மையில் 8 கதைகள் தான் புத்தகத்தை தைத்ததில் தவறு நிகழ்ந்து 2 கு.அழகிரிசாமியின் கதைகள் கலந்துவிட்டன. எதோ முன் பின்னாக துண்டாடி கதை சொல்லும் ஒரு யூக்தியில் அப்போதே கதை சொல்லிருக்காருப்பா என்று நினைத்துக்கொண்டு வாசிக்க, பாதி கதை படித்த பின் தச்சவன் செஞ்ச தப்பு அது என்பது உறைத்தது .)
கதை பேசும் கருத்து , இலக்கியத்தரம் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்காமல் ஒரு கதை காலம் கடந்து இன்னும் ஒரு வாசகனை ஸ்வாரஸ்யப்படுதுகிறதா என்பதே நமக்கு முக்கியம் . அப்படி மொத்த புத்தகத்தில் பணம் பிழைத்தது , வளையல் துண்டு , ஆனாதாஸ்ரமம் ,தரிசனம் , வெண்கலக்குத்துவிளக்கு ஆகிய ஐந்தும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது .
பணம் பிழைத்தது :
கடினமாக உழைத்து பெரிய பணக்காரனானவர் , தன் அந்திம காலத்தில் சொந்த கிராமத்தில் முடிக்க வருகிறார் .அவர் எப்படி இறப்பை எதிர்கொள்கிறார் என்ற கரு . பிரச்சனைகள் வந்தால் மட்டும் இறைவனை நாடி ஓடும் நாம்தான் அந்த செல்வந்தரோ என்ற எண்ணத்தை எழுப்பிவிடுகிறார் . இறப்பு பற்றிய நல்ல தத்துவவிசாரணை நிறைந்த கதை .
வளையல் துண்டு :
பிறன்மனை நோக்கும் ஒருவனின் கதைதான் , இதுபோன்ற கரு உள்ள கதைள் சொல்லும் விதத்திலும் என்ன விஷயத்தை கதையின் ஆன்மாவாக மையப்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தே அவை வெறும் கதைகளா அல்லது க்ளாஸிக்கா என்பது முடிவாகிறது . இந்த கதையின் மைய சரடு The Lunchbox மற்றும் In the Mood for Love படங்களின் கதையின் ஆன்மாவை நினைவூட்டியது . தலைப்பே கவிதை என்பது கதை முடிந்த பிறகு தெரிந்தது
தரிசனம் :
இந்திய பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் ஏற்பட்ட கலவரத்தை களமாக வைத்து எழுதப்பட்ட கதை . கலவரம் நிகழும் காலகட்டத்தில் கலவரத்தில் கணவனை இழந்துவிட்டு மகனுடன் தப்பிப்பிழைக்கப்போராடும் ஒரு தாய் பற்றிய கதை . மத துவேஷம் எல்லா மனதிலும் இல்லை மனிதம் உயிர்ப்போடு இருக்கிறது என்பதையும், அவை இதுபோன்ற நிலைகளில் வெளிப்படும்போது அவை ஒரு மேல்நிலையை அடைகிறது என்பதை கோடிட்டு
காட்டும் கதை .
அனாதாஸ்ரமம் :
இந்த புத்தகத்தில் மிகவும் என்னை பாதித்த கதை இது . தவறான ஒரு முடிவை மிக இக்கட்டான நிலையில் எடுத்த ஒரு அபலைப்பெண்ணின் கதை . அந்த பெண் அந்த கைக்குழந்தையை ஆஸ்ரமத்தில் விட்டுவிட்டு எங்கு சென்றிருப்பாள் ? என்பது இன்னும் நம் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது . அதிகம் நேர்மறை முடிவுகளை மட்டுமே விரும்பிய வாசகர்கள் நிறைந்த அந்த காலத்தில் இப்படி ஒரு முடிவு கொடுத்தது வியக்கவைக்கிறது .
வெங்கலக்குத்துவிளக்கு :
இறுதிக்கதையாக இதை வைத்ததிலிருந்து தொகுப்பாளரின் திறன் தெரிகிறது . ஒரு ரகளையான கதை , இப்படி ஒரு திரில்லர் அனுபவத்தை அவரிடமிருந்து நிச்சயம் எதிர்பார்க்கவில்லை சுவாரஸ்யமான கதை . 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கதையில் உள்ள த்ரில்லர் முடிச்சுகளை நம்மால் முன்கூட்டியே கணிக்கமுடிகிறது . அந்தக்காலத்தில் வாசகர்களுக்கு சிறந்த ஒரு அனுபவத்தை நிச்சயம் கொடுத்திருக்கும் .சில மாற்றங்களுடன் இன்றுகூட சிறந்த த்ரில்லராக இதை எடுக்கமுடியும்.
முத்துக்கள் பத்து - பி எஸ் ராமையா
தொகுப்பு : திலகவதி
பதிப்பகம் : அமிர்தா
விலை : 50
