Friday, 28 December 2018

முதல் சுகிப்பு

எழுத்தாளருக்கும் வாசகனுக்குமிடையே நிகழும் முதல் சுகிப்பு அதிமுக்கியமானது. அவர் எத்தனையோ படைப்புகளை படைத்திருந்தாலும் அவரின் முதல் படைப்பு எதுவாகவே இருந்தாலும் கூட, வாசகனை வந்தடையும் முதல் படைப்பு கொடுக்கப்போகும் அனுபவம்தான் அவன் தொடரப்போகிறானா? இல்லை விலகப்போகிறானா? என்பதை முடிவு செய்கிறது. இந்த நிகழ்வே ஒரு வித விதிப்புக்குட்பட்டது என்று தோன்றுவதுண்டு. ஏனென்றால் மிகச்சிறந்த படைப்பாளிகளின் ஆகச்சிறந்த படைப்புகள் கூட தவறான காலகட்டத்தில் நம்மை வந்தடையும் போது சுகிப்பதற்கு மாறாக அசூகையாக எஞ்சிநிற்பதுண்டு . தெனாலிராமன் கதையில் வரும் சூடான பாலில் வாய்வைத்து சூடு பட்டு பின் பால் என்ற வஸ்துவை பார்த்தாலே தெறித்து ஓடும் பூனை கணக்கா அனுபவம் எனக்கு சில படைப்பாளிகளிடம் நிகழ்ந்துள்ளது.

"சார்வாகன் " என்ற பெயரை சாருதான் அவர் தளத்தில் அறிமுகப்படுத்தினார், பெரிதாக அவரைப்பற்றி தெரியாது . கடந்தவாரம் அவரின் மருத்துவ & இலக்கிய மேதமைப் பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தபின் அவரின் எழுத்தை வாசிக்கவேண்டும் என்று ஆவல் தொற்றிக்கொண்டது . கைவசமிருந்த ஒரு கட்டுரைத் தொகுப்பிலிருந்து துவங்கலாமென்று தொடங்கினால் . முதல் கட்டுரையே அதிர்ச்சியளித்தது . காரணம் சில மாதங்களுக்கு முன் வாசித்த சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழ் தொகுப்பாக வெளியிட்ட " எதற்காக எழுதுகிறேன் " என்ற புத்தகத்தின் பெயரை போன்றே இருந்த கட்டுரையின் தலைப்பு " எதற்காக எழுதுகிறார்கள்? " என்றிருந்தது . (எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை அப்போது தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த லா.ச.ரா , க. ந. சு போன்ற படைப்பாளிகளிடம் கொடுத்து அவர்களை ஒரு நிகழ்வில் அவர்களின் கட்டுரைகளை வாசிக்க வைத்திருக்கிறார் , அந்த கட்டுரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் ) .

அன்று நடந்த அந்த கட்டுரை வாசிப்பு நிகழ்வுக்கு பார்வையாளராக சார்வாகன் சென்றதை குறிப்பிட்டு கட்டுரையைத் தொடங்குகிறார் . பின் இவரது பார்வையில் ஏன் எழுதுகிறார்கள் என்று மிக ஆழமாக அலசுகிறார் .நான்கு காரணங்கள் இருக்கிறது என்று இன்னும் விளக்குகிறார் . அன்று கட்டுரை வாசித்தவர்களில் ஒரு சிலரைத்தவிர அனைவரும் அவைக்காக வாசித்தார்கள் என்று உடைக்கிறார் .அந்த அரிதாரங்களில்லாமல் இவர் வேறொரு கோணத்தில் நோக்குகிறார் .இவர் எழுத்தாளர் எழுத்து என்ற அளவில் சொல்லும் பல விஷயங்கள் படைப்பாளி படைப்பு என்ற தளத்தில் எந்த துறைக்கும் பொருந்தும் விதமாக விரிகிறது . பூடகங்கள் அற்று நகைச்சுவை இழையோட நம்முள் சரிகிறது அந்த எழுத்து .மொத்தமாக இவர் எழுத்தின் வன்மையை அந்த ஒரு கட்டுரையே பறைசாற்றுகிறது .நாம் செய்துக்கொண்டிருப்பது என்ன என்று நம் முன்னே ஒரு கண்ணாடியை எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறது அந்த கட்டுரை.

எழுத்தாளருக்கும் வாசகனுக்குமிடையே நிகழும் முதல் சுகிப்பு அதிமுக்கியமானது

Monday, 17 December 2018

நாமளா சொல்லிகிட்டாதான் உண்டு

கனன்றுதிர்ந்துக் கொண்டிருந்த
கரித்துகள்களுக் கிணையாக
கண்ணீர்த்துளிகள்.
சுடுகாடு .

....................................


சுட்டுச் சுழன்றுக் கொண்டிருப்பது உணவு மட்டுமல்ல ,
உயிரும்கூட என்று எப்படி உணர்த்துவேன்.
சிக்கன் ! சிக்கன் ! என்று குதூகலிக்கும் குழந்தையிடம் .

...................................

உம்மிடம் சமர் நிற்க எம்மிடம் ஆயுதமில்லை !
நீ சுமந்து நிற்கும் ஆயுதத்தை ஆயாசத்தோடு பார்த்து நிற்போம் .
ஊடே வாய்ப்பு வாய்க்கையில் நாளு சொற்களை சொடுக்கி
உன் மேல் உமிழ்ந்தெறிவோம் . அது நிகழ்த்தபோவது ஏதுமில்லை
விலையில்லா விட்டில் இதயங்களைத்தவிர என்றுணர்ந்தும்
ஏகுவோம் ! உம்மிடம் சமர் நிற்க எம்மிடம் ஆயுதமில்லை !

Thursday, 6 December 2018

கர்மயோகி



ஆட்காட்டி விரலும் பெருவிரலும் ரத்தம் கட்டி வலித்துக்கொண்டிருப்பது அப்போதுதான் உணர்வில் தெரிந்தது விஜயனுக்கு .தன் சரங்களைத்தாண்டி இடப்பக்கம் இதயத்திற்கு பக்கமாக கவசம் கொஞ்சம் சேதாரமாகயிருப்பதை தொட்டுணர்ந்த போதுதான் அந்திக்கு முன் ஆக்ரோஷமாக துரோணருடன் சமருக்கு நின்றது நினைவிற்கு வந்தது . அம்பாரத்துணியை ரதத்தில் விட்டுவிட்டு காண்டிபத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இறங்கி நடக்கத்துவங்கினான். கூடாரத்தின் வாசலில் பெருத்த சிந்தனையோடு தருமர் அமர்ந்திருக்க ,வழிபாட்டுக்கான மலர்களை நகுலன் தொகுத்துக்கொண்டிருந்தான் . தூரத்தில் முட்டியில் வழியும் ரத்ததை பொருட்படுத்தாது புன்னகையோடு கையசைக்கும் பீமன் கண்ணில் பட்டான் . நீ அந்தி வழிபாட்டுக்கு வரவில்லையா கண்ணா ? என்றவனுக்கு ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு, இரவு உணவுக்கு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு ரதத்தை குதிரை லாயம் நோக்கி செலுத்தினான் . காயமுற்ற வீரர்களைத் தூக்கிக்கொண்டு அதுரசாலை நோக்கி சிலர் சென்றுக்கொண்டிருந்தனர் . பச்சிலைகளை அரைத்துக்காய்ச்சும் நெடி காற்றில் பரவிக்கொண்டிருந்தது .

லாயத்திற்குள் புகுந்த கண்ணனின் ரதத்தைப் பார்த்து மற்ற தேரோட்டிகள் பரபரப்பாக . ஒரு இடத்தில் ரதத்தை நிறுத்தி குதிரைகளை அவிழ்த்து இலகுவாக்கினான் .பக்கத்தில் இருந்த சிறு தடாகத்தில் நீர் குடிக்க வைத்தான் .வேகமாக ஓடிவந்த சிப்பந்திகளிடம் இந்த குதிரைகளுக்கு கொஞ்சம் உணவு கொடுக்கமுடியுமா! என்றான் . அவர்கள் கொண்டுவந்த இளம் புற்களை அவை உண்ணத் துவங்கின . வெள்ளைக்குதிரைகள் ஆதலால் காயம் எளிதாக கண்ணுறமுடியும் ,அவை மேய இவண் கண்ணால் ஆய்ந்தான் . பெரிதாக எதுவும் தென்படவில்லை. மெதுவாக ஒவ்வொரு குதிரையை தடவிகொடுக்கத் தொடங்கினான் ஏதேனும் வீக்கங்கள் இருக்கிறதா என்று கண்டறிவதே நோக்கம் .ஒரே ஒரு குதிரைக்கு மட்டும் முன்னங்கால்கள் இணையுமிடத்தில் சிறு வீக்கம் தட்டுபட்டது, அங்கு நின்றுகொண்டிருந்த அதுரசாலை சிப்பந்தியிடம் குறிப்பிட்ட இலையைச் சொல்லி எண்ணையில் வாட்டி கொண்டுவர சொன்னான் . வீக்கத்தில் வெந்நீரை தெளித்து துடைத்துவிட்டு அந்த இலையை அங்கு படரவிட்டான். நுனிக் கொழும்பில் நின்றுகொண்டிருந்த குதிரைகளின் கால்கலில் வெந்நீரை ஊற்றினான் ஆசுவாதப்படுத்தினான் . ஒவ்வொரு குதிரையாக வருடிக்கொடுக்கத்துவங்கினான் . முதல் குதிரையிடம் காட்டிய முனைப்பை கடைசிக்குதிரை வரை குறையாமல் பார்த்துக்கொண்டான் . இரவு உணவுக்கு நேரமாவதை உணர்ந்து நகர முற்பட ஒரு குதிரை இவன் நெற்றியோடு நெற்றி வைத்துக்கொண்டது . புன்னகையோடு கண்முடி நின்றான் . குதிரையின் நெற்றில் திருமண் சுவடு .

அங்கே பரிவாரங்களிடையே அகில் புகை முகிலெனப் பரவ எல்லோரும் கைக்கூப்பி நிற்க , சகாதேவன் மந்திர உச்சாடனம் செய்ய மாலை வழிபாடு துவங்கியது .

( வினோபா கர்மயோகத்தைப் பற்றிய ஒரு கேள்விக்கு சொன்ன ஒரு கதையின் மீட்டுருவாக்கம் , ஓவியர் கேஷவின் இந்த ஓவியம் அந்த கதையை நினைவடுக்குகளிலிருந்து மீட்டெடுத்தது)

Saturday, 1 December 2018

முடிவிலி நீள்வட்டங்கள்

தகர்ந்துக் கொண்டிருப்பதின்
தாத்பரியத்தை விளக்கிக் கொண்டிருக்கிறார் இவர்.
பத்து திக்கும் நீலம் சூழ்ந்து நிற்க
நீச்சல் தெரியுமா உங்களுக்கு ?
என்று பாய்கிறான் அவன்.
முடிவிலி நீள்வட்டங்கள் .

Monday, 12 November 2018

பஷீரின் சுலைமானி



வீட்டினுள் நுழைந்த நண்பருக்கு அதிர்ச்சி , முற்றத்தில் நின்றுகொண்டு பஷீர் அக்ரோஷமாக மகளை பார்த்து கத்திக்கொண்டிருந்தார் . அப்படியொரு ரூபத்தில் பஷீரை அதுவரை அவர் கண்டதில்லை. இவர் உள்ளே சென்றும் சப்தம் குறைந்தபாடில்லை . ஏதோ பெரிய பிரச்னை நடந்திருக்கிறது தவறான நேரத்தில் நாம் வந்து சிக்கிக்கொண்டோம் என்றெண்ணியவரே . மகளிடம் மெதுவாக விசாரித்தார் .சிரித்துக்கொண்டே ! அது ஒண்ணுமில்லை, இந்த ரோஜா செடியிலிருந்த புழுவை வெளியே எடுத்துப் போட்டுவிட்டேனாம் , அதற்கு அரைமணிநேரமாக கத்திக்கொண்டிருக்கிறார் .

ரோஜாச்செடி உனக்கு காண்பதற்கு, அது போல புழுவுக்கு உண்பதற்கு . அதை தட்டி வெளியே போட உரிமையை யார் உனக்கு தந்தது ? என்கிறார் டாட்டா என்றாள் .இந்த விஷயத்தில் பஷிரைப் பற்றித் தெரியுமென்பதால் நண்பர் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை . முன்பொருமுறை சுலைமானி குடித்த குவளையை குடித்த பின் அடிக்கடி கவிழ்த்து வைப்பதை கவனித்து , ஏன் என்று கேட்டதற்கு " கொஞ்சமாவது அறிவு இருக்கா ? பொன்னு சாரே, இந்த குவளையில் கொஞ்சம் மிச்சமிருக்கும் சாயாவில் எறும்புகள் வந்து விழுந்து செத்துபோகும் . அதை தவிர்க்கத்தான் கவிழ்த்தி வைக்கிறன் என்றவரல்லவா .


அடிப்படையில் காந்தியத்தின் காதலராக அறியப்பட்ட பஷீர் ,இளம் வயதில் ஒருவரை கொலை செய்யவேண்டுமென்று தீவிரமாக அலைந்து கொண்டிருந்திருந்தார் என்பது விசித்திரமானச் செய்தி . தன்னை சிறையில் வன்மத்தோடு அடித்த அதிகாரியை கொன்றே தீருவதென்று முயற்சித்தவரை சக சிறைவாசி பேசி பேசி கரைத்திருக்கிறார் . 1931-32 காலகட்டங்களில் பகத்சிக்கின் தீவிரவாதம் பக்கம் ஈர்ப்பு ஏற்பட்டு அங்கு சென்ற நேரம் அது .பின் குறுகிய காலத்தில் காந்தியத்திற்கு திரும்பினார் . சக மனிதனை கொல்லவேன்றுமென்றிருந்த பஷீருக்கும் புழுவின் உணவிற்காக எறும்பின் வாழ்விற்காக யோசிக்கும் மனிதரான பஷீருக்கும் இடையேயான பயணம்தான் அவரின் வாழ்வு .

Tuesday, 9 October 2018

பாத்துமாவின் ஆடு -வைக்கம் முகமது பஷீர்

"இடுக்கண் வருங்கால் நகுக" என்பதை நடைமுறைப் படுத்துவதில் பல சிரமங்கள் இருக்கின்றனதான் . அப்படி ஒரு சூழலில் நகுவதற்கு ஒருவித பக்குவம் வேண்டுமென்றால் . அந்த சூழலை பகடிஎழுத்தாக்கி எண்ணற்றவர்களின் முகத்தில் முறுவலை முகிழ்த்தெடுக்க எப்படிப்பட்டதொரு பக்குவநிலை வேண்டும் ! அப்படியொரு நிலையில் பஷீர் எழுதியதுதான் "பாத்துமாவின் ஆடு " .எழுதி ஐந்து ஆண்டுகள் கழித்து, பிரசுரிக்கும் முன் அதன் கையெழுத்துப் பிரதியை வாசிக்கையில் அதில் எந்த திருத்தமும் தேவைப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்தில் எந்தவித திருத்தங்களும் செய்யாமல் எழுதியது எழுதியபடி வாசகர்களை சென்றடைந்தது பாத்துமாவின் ஆடுமட்டுமே என்கிறார் .நெருக்கடியானதொரு நிலையில் பிரவாகமாக எழுதி அப்போதைய வாழ்வின் அழுத்தத்தை கடந்திருக்கிறார்.

காட்டாறுகளின் கரையில் படகு கட்டி ஆறுவழியே கொண்டுவந்து கோச்சியில் படகு வியாபாரம் செய்த குடும்பம் இப்போது சாம்ப காய் விற்றுக்கொண்டிருக்கும் நிலை . அதுநாள் வரை தனித்திருந்தவர் . சூழலால் அந்த குடும்பதோடு வாசம் செய்யவேண்டிய நிலை . அங்கு நிலவும் விசித்திர சூழல் & உறவுகள் அவரை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது . பாரதிதாசனின் இருண்டவீடு போன்றிருக்கும் அந்த வீட்டை எழுத்துச் சாளரம் விரித்து நமக்கு காட்டுகிறார் சிரித்துக்கொண்டே . சாதாரண குடும்ப புராணமாக இதை கடந்துவிட முடியவில்லை. அவ்வளவு உண்மையாக அனைவரையும் விமர்சிக்கிறார் அவரையும் சேர்த்து . நம்மையறியாமல் பல பக்கங்களில் வாய்விட்டு சிரிக்கிறோம் அப்படி ஒரு பகடி. குடும்ப உறவுகள் சிலரை தவறாக சித்தரித்திரித்திருக்கிறார் என்றுச் சொல்லி ஒரு படைப்பையே பல வருடம் அழுத்தி வைத்திருந்ததெல்லாம் தமிழில் நடந்துள்ளது . எப்படி பஷீரின் உறவுகள் இயல்பாய் இந்த புத்தகத்தை அணுகினார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது.

படைப்பு நிகழ்ந்த பிறகு எழுத்தாளன் மறைந்து விடுகிறான் பின் படைப்புதான் என்று சொல்வதுண்டு . ஆனால் நிதர்சனத்தில் படைப்புகள் ஊடே நாம் படைப்பாளியை கண்டடைய முயல்கிறோம். நாம் அடைவது உண்மையான பிம்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற உண்மை புரிந்திருந்தும் நம் வாசக மனதில் அது ஒரு அனிச்சைச் செயலாய் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது .அந்த மனதிற்கு தீனியாக சில படைப்பாளிகள் தம் படைப்புகளில் சில கண்ணிகளை விட்டுச்செல்வர் . இவர் இந்த புத்தகம் முழுதும் கண்ணி வெடிகளை விட்டுச்சென்றிருக்கிறார் .

பாத்துமாவின் ஆடு
வைக்கம் முகமது பஷீர்
தமிழில் - குளச்சல் மு .யூசப்
காலச்சுவடு பதிப்பகம்.

Saturday, 6 October 2018

குறும்பா

பறந்துக் கொண்டிருக்கும் குதிரைகள்,
ஏற அடம்பிடிக்கும் குழந்தை.
திருவிழா ராட்டினம் .

Friday, 28 September 2018

ஊழ்வினை

நெடுஞ்சாலையில் நெளிந்துக் கொண்டிருக்கும் ,
நெற்றியுடைந்த பூனை,
தாரின் தாகம் தீர்க்க
வழிந்தோடிக் கொண்டிருக்கும்
உயிரின் கடைசித் துளியில்
கால்படாமல் பறந்து செல்கிறது,
அந்த நொடி ஜனித்த ஊழ்வினை .
வீட்டை விட்டு விரட்டியவனனின் வீடடைய.

Wednesday, 5 September 2018

முக வரியற்ற முதல் குரு

இரண்டாம் வகுப்புக்கு புதிதாக வந்த டீச்சர் . மூன்றாம் வாய்ப்பாடை வாய்விட்டு படிக்கச் சொல்லிவிட்டு வேப்பமர நிழலை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் அனேக ஆசிரியர்களிடமிருந்து மாறுபட்டு புதிதாகத்தான் இருந்தார்.அந்த கிராமத்து தொடக்கப்பள்ளியிலிருந்த எங்களுக்கு வீட்டு காய்கறிகளில் கலர் கலராக அச்சு. காகிதத்தில் பொம்பைகள் . வாரப்பத்திரிகையில் வீடு போன்ற அவர் செய்து காட்டி எங்களையும் செய்யவைத்த விஷயங்கள் ஒருவித மாயாஜாலம் போல இருந்தது . அப்போதெல்லாம் பள்ளிக்கு செல்வதே அவர் வகுப்புக்காகத்தான் . பழைய பல்ப்பின் அடி பாகத்தை மட்டும் உடைத்துவிட்டு மேலே உள்ள கண்ணாடி குமிழுள் காய்ந்த குதிரை வால் புல்லை வைத்து அவர் உருவாக்கிய டேபிள் வெய்ட் மறக்கவே முடியாது . நாலைந்து பழைய பல்ப்பை உடைத்தும் உருப்படியாக தேறாமல் எதோ ஒருமாதிரி ஒன்னை நான் உருவாக்கியது இன்றும் நினைவில் இருக்கிறது .

ஆறேழு மாசம் இருக்கும் நிழல் ஆராச்சியாளர்களின் கண்ணு பட்டதோ என்னவோ திடீரென்று அவர் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார் . தூக்கி கொடுத்த நாய்க்குட்டி இருந்த இடத்தை அடிக்கடி போய் பார்க்கும் நாய் கணக்கா சில நாள் Staff room பக்கம் போய் பார்த்துட்டு பார்த்துட்டு வந்தது நினைவிருக்கு . எல்லாம் நினைவிருந்தும் அவரது பெயரும் முகமும் எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வர மறுக்கிறது . என் வாழ்வில் பின் நிகழ்ந்த கலாப்பூர்வமான விஷயங்களுக்கெல்லாம் முதல் விதையை விதைத்தவர் "முக"வரியற்ற அந்த முதல் குரு .

Thursday, 30 August 2018

மேற்குதொடர்ச்சிமலை

உலகமயமாக்களை படம் பேசுகிறது என்று சொன்னாலும் அது லோகுகள் & ரங்குகளின் முரண் கதையையும் பேசுகிறது . இருவரும் உழைப்பாளிகள் ஒரே ஊரில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இருந்தும் "தன்னறம்" என்ற ஒரு புள்ளியில் இருவரும் வேறுபடுகிறார்கள். லோகுவின் கதாபாத்திரத்தை பல கதைகளில் நாம் பார்த்திருப்போம். அவை சிறிதாய் தொடங்கி விஸ்வருபம் எடுக்கும் அந்த கதைகளில் லோகுக்கள் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டு ரங்கு கதாபாத்திரம் நிழலாய் தொடர்ந்திருக்கும் அந்த கதைகளில் வெளிச்சம்படாத ரங்குகள் நமக்கு ஒரு பொருட்டே அல்ல . அந்த வெளிச்சத்தை மாற்றி ரங்கு கதாபாத்திரதின் மேல் பாய்ச்சியதில் இருக்கிறது இயக்குனரின் மேதமை .

இதுபோன்ற படங்கள் பேசும் கனமான விஷயமும் இயல்புக்கு நெருக்கமான மண்சார்ந்த கதைக்களமும் பல நேரங்களில் பார்வையாளனுக்கு அயற்சியையே கொடுத்துச் செல்லும் . அப்படியிருக்கையில் அயர்ச்சியை கொடுக்காத காட்சிகளின் நகர்வே படத்தின் முதுகெலும்பெனத் தோன்றுகிறது. இதுதான் மற்றைய விருது விழாப்படங்களிலிருந்து இந்த படத்தை தனித்து காட்டுகிறது (பயப்படாமல் தியேட்டரில் போய் பார்க்கலாம் ) .சில காட்சிகளில் உணர்ச்சிகரமான விஷயங்களை கொஞ்சம் அதிகப்படுத்தி நம்மை கதற விட்டிருக்கலாம் ஆனால் எந்தஒரு தருணத்திலும் பார்வையாளனுக்கு அசூகையை ஏற்படுத்த இயக்குனர் விரும்பவில்லை . அவரது நோக்கம் அதுவே அல்ல என்பதை பல இடங்களில் நிறுவுகிறார்

Monday, 27 August 2018

ஆண்களுக்கானதடி

ஆண்களுக்கானதடி என்கிறேன்.
ஊருக்கு என் வாசம் எதுவாக இருந்தால் என்ன!
உன் வாசம் என்னோடு இருக்கட்டும்
என்றபடி என் வாசனை திரவியத்தை
வலதிடதாய் தூவிக்கொள்கிறாள்.
வாசம் பரவுகிறது என்னுள்

Wednesday, 22 August 2018

கல்வியே ஆயுதம் - Abdul Ghaffār Khān

சுய சரிதங்களை வாசிப்பது எப்போதும் சுவாரஸ்யமானது , ஏட்டினை திறந்தவுடன் எங்கிருந்தோ வந்து அருகில் அமர்ந்துவிடுகிறார்கள் . அவர்களின் வார்த்தைகள் நம் மீது பட்டுத்தெறிப்பதை உணரமுடிகிறது . உண்மைக்கு மிக அருகில் நின்றுகொண்டு அவர்கள் கதைப்பதால் அதை காது கொடுத்து கேட்பதற்காகவாவது அந்த சில தருணங்கள் நாமமும் உண்மைக்கு அருகில் செல்லவேண்டி இருக்கிறது .

(Abdul Ghaffār Khān "எனது வாழ்வும் போராட்டமும்" வழியாக கதைத்துக்கொண்டிருக்கிறார் )



1890- சிந்து பகுதி பஷ்ட்டு பழங்குடி இன மக்கள் நிறைந்த நிலப்பரப்பு . மதவாதிகளால் அந்த மக்களின் கல்வி கற்பது தடுக்கப்படுகிறது . அதை மீறுபவர்கள் கடவுளுக்கு எதிரானவர்களாவார்கள் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது . அந்த நிலையில் அங்கு ஜமீனை போல வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி தன் மகன்களை பள்ளிக்கு அனுப்புகிறார் . அதில் இளையவர் கபர் கான் . தன்னோடு துணைக்கு இருந்த தாத்தா சொன்ன ராணுவ கதைகள் அவரை கவர்கிறது . வருங்காலத்தில் ராணுவத்தில் சேர்வதே லட்சியமாக கொள்கிறார் . ஓரளவு கல்வியும் தாட்டியமான உடல்வாகும் கொண்டவர் என்பதால் எளிதாக அந்த கனவு நிறைவேறுகிறது . ஆனால் அங்கும் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை பாகுபாடுடன் நடத்துவதைக்கண்டு மனம் வாடுகிறார் . ராணுவத்திலிருந்து விலகுகிறார். தனக்கு இப்படி பகுக்கும் அறிவை கொடுத்த கல்வியை தன் மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று
எண்ணுகிறார் .

கடவுளின் பெயரால் அச்சுறுத்தப்படும் மக்களிடம் பேசி புரிய வைப்பது அவருக்கு பெரும் சவாலாக இருக்கிறது . கிராமம் கிராமமாக அலைகிறார் கூட்டங்கள் நடத்துகிறார் . சில பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார் .ஆசிரியர்கள் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது . கிடைத்தாலும் அவர்களை அச்சுறுத்தி துரத்துக்கிறது ஆங்கிலேய அரசு . எதையும் பொருட்படுத்தாது பள்ளிகளை திறக்கிறார் .

அரசின் ஆட்கள் அவருடைய தந்தையை அணுகி மென்மையாக மிரட்டுகின்றனர் .உங்களிடம் உள்ள சொத்துகளே எவ்வளவு! அதை பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கவேண்டியதுதானே . ஊரில் உள்ள எல்லோரும் அமைதியாய் வீட்டில் இருக்க உங்கள் மகன் மட்டும் ஏன் இப்படி பொது விவகாரங்களில் ஈடுபடுகிறான் . இனி கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வது , கூட்டங்கள் நடத்துவதெல்லாம் நிறுத்திக்கொள்ள சொல்லுங்கள் .உங்கள் மகன் என்பதால் உங்களிடம் வந்து பேசிக்கொண்டிருக்கிறோமென்று சொல்லிவிட்டு செல்கின்றனர் .

மகனிடம் பெரிதாக எதையும் அதுவரை கேட்டிராத தந்தை, அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தானே. இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளேன் என்கிறார் . நாம் இறைவனுக்காக தினம் படிக்கும் குரானை நாளை முதல் படிக்காதீர்கள் என்று யாரவது சொன்னால் ! நீங்கள் என்ன செய்வீர்கள் ? கேட்கமாட்டேன் அது இறைவனுக்கும் எனக்குமானத் தொடர்பு அதை துண்டிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்கிறார் தந்தை . அதே போன்றதொரு பணியைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன் . நான் அதை நிறுத்த வேண்டுமா ? .அடுத்த நாள் பரிவாக மகனிடம் பேசும் தந்தை நீ இறைவனுக்கு அஞ்சுபவன் என்பது எனக்கு தெரியும் . உன் இஷ்டப்படி செய் என்கிறார் .

கான் தன் நிலையிலிருந்து மாறமாட்டார் என்பதை புரிந்துகொண்ட அரசு . கைது செய்து சில காலம் சிறையில் வைக்கிறது . கடுமையாக நடத்துகிறது எதற்கும் மசியமாட்டார் என்பதை உணர்ந்துகொண்டவர்கள் 3 ஆண்டுகளாக தண்டனையை உயர்த்துகின்றனர் .வெளிச்சமே வராத சிறைச்சாலை தரும் குளிர் அவரை வாட்டுகிறது . சிறையில் கொடுக்கப்படும் மாவு அரைக்கும் வேலையை செவ்வனே செய்கிறார் . கொடுமையான தண்டனைகள் இருந்தாலும் அதை பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து அவரை விடுவிக்க வேண்டிய நேரம் வருகிறது . தங்களுக்காக தன்னையே ஒப்புக்கொடுத்துவிட்ட அவரை சிறையிலிருந்து சிறப்பான முறையில் வரவேற்று சென்று , ஒரு விழா எடுக்க மக்கள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைக்கிறது.

அவர் ஒரு தலைவராக உருவெடுப்பதை அரசு விரும்பவில்லை எனவே இரண்டு நாட்கள் முன்கூட்டியே அவரிடம் எதுவும் சொல்லாமல் அழைத்துச் சென்று அவரது பகுதியில் ஒரு இடத்தில இறக்கிவிட்டுவிட்டுவிட்டு செல்கின்றனர் .அந்தி நேரம் மெதுவாக நடக்கத்துவங்குகிறார் அவர் துவங்கிய ஒரு பள்ளியிலிருந்து பிள்ளைகள் வெளியேறுகின்றனர் . சிலர் இவரை அடையாளம் கண்டுகொண்டு வேகமாக ஓடி வருகின்றனர் "பாஷா" "பாஷா" என்று கானை சூழ்ந்து கொள்கின்றனர் . அவர் கண்கள் பனிக்க சிரிக்கிறார். தான் எந்த லட்சியத்தை நோக்கி பயணிக்கிறோமோ அதன் விளைச்சல்கள் தன்னை அரவணைத்து நிற்பதை கண்டு குதூகலிக்கிறார் . இணையற்ற அப்படியான சிறந்ததொரு வரவேற்பு தானாக நிகழ்கிறது . தலைவராக அவர் உருவெடுத்து வெகுகாலமாகிறது என்பது அரசுக்கு விளங்க சில காலம் பிடித்தது . கானின் ஆரம்பகால போராட்டங்கள் மக்களுக்கான கல்வியை முன்னெடுப்பதற்காகவே இருந்திருக்கின்றன . கல்வியே சுதந்திரத்திற்கான பெரும் ஆயுதம் என்பதை ஆரம்பத்திலேயே அவர் உணர்ந்துவிட்டார் .

(பிற்பாடு மக்களுக்காக கான் வெவ்வேறு காலகட்டங்களில் தன் வாழ்நாளில் 37 ஆண்டுகாலத்தை சிறையில் கழித்தார் )

#எல்லை_காந்தி
#The_Frontier_Gandhi
#Badshah_Khan
#Bacha_Khan
#Abdul_Ghaffār_Khān

Thursday, 16 August 2018

மக்சிமஸும் சீவகனும்



தன் வாழ்நாள் எதிரியாக கருதியவன் மாண்டான் என்று நம்பிக்கொண்டிருக்கும் அரசன் . சில ஆண்டுகள் கழித்து மக்கள் குழுமியிருக்க நடைபெறும் ஒரு போட்டியில் அவனை எதிர்கொள்கிறான் . ஒரு போட்டியாளனாக களத்தில் நிற்பவனை பார்க்கமுடியவில்லை தன் கோபத்தையும் ஆற்றாமையையும் கட்டுப்படுத்திக்கொண்டு விம்மிக் கொண்டு நிற்கிறான் .


Maximus யை Commodus அப்படி எதிர்கொண்டதை Gladiator - ல் பார்த்திருப்போம்.சீவகனை கட்டியங்காரனும் அப்படித்தான் எதிர்கொண்டிருக்கிறான் . பொன்னால் வெய்த கவசம் தரித்ததொரு பன்றியை களத்தில் தறிகெட்டு ஓடச்செய்து அதை குறி பார்த்து எய்த வேண்டுமென்பதே போட்டி . எய்தவேண்டிய இலக்கே கண்கூச, வந்த அரசர்கள் அனைவரும் தோற்று விலக வில்லோடு களத்திற்குள் நுழையும் சீவகனை அரசன் கட்டியங்காரன் எதிர்கொள்கிறான். ஒரே காட்சிதான் பாத்திரங்களும் களமும் வேறு வேறாக .

குறிப்பு : சீவக சிந்தாமணி திருத்தக்கத்தேவரால் 9 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது .

#சீவக_சிந்தாமணி
#Gladiator #Maximus

Friday, 13 July 2018

இடைவெளி - சம்பத்

   







      பிரபஞ்ச உயிர்கள் அனைத்தும் பார்த்து மிரளும் ஒன்றை , அதைப்பற்றி பேச & கேட்கக்கூட பயப்படும் ஒன்றை நெருங்கி எதிர்கொண்டு . அதன் நேர்த்தி ,எதற்கும் வளையாத ஸ்திரம் , காலம் கடந்து நிற்கும் அதன் நித்யத்தன்மை போன்றவற்றை படிப் படியாய் ஆராய்ந்தது மட்டுமல்லாமல் .அந்த படிநிலைகளை அப்படியே எழுத்தாக படியெடுத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார் ஒரு மனிதர் . அவரை என்னவென்று சொல்வது. இந்த புத்தகத்தில் உள்ளதை சுருக்காக சொல்லுங்கள் என்றால் ! நம்மால் நிச்சயம் சொல்லமுடியாது , ஏனெனில் அது ஒரு ஆழ்ந்த தேடலின் அனுபவ குறிப்புகள் .சாவைப்பற்றிய அவரது தேடல் ஆன்மிகத்தை சார்ந்தோ பௌதிகத்தை சார்ந்தோ நில்லாமல் தனித்ததொரு பாதையாய் இருக்கிறது .எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பார்க்கிறார் . ஒரு ஆராய்ச்சியாளராக ஆய்வுமேசையில் சாவின் நீள அகலத்தை அறுத்து ஆய்கிறார்.வாசித்து முடிக்கையில் ஒரு ஆய்வாளன் இலக்கியம் படைத்த பிரமை தோன்றுகிறது நமக்கு .


    நூறு பக்கங்கள் கொண்ட சிறு நூல்தான் இலகுவாக வாசித்துவிடலாம் என்று எடுத்தால் , பக்கங்களை கடக்கமுடியாமல் தத்தளிக்கச் செய்கிறது . அவ்வளவு செறிவான பத்திகள் . சிலவற்றை அவர் சொல்லும் தளத்தில்தான் நாம் புரிந்துகொண்டோமா ! என்றும் தோன்றுவைக்கிறார் .புத்தகத்தில் சிலப்பகுதிகள் நம்மை மாய உலகுக்குள் இழுத்துச் செல்கிறது.
குறிப்பாக சாவு முதன்முறையாக அவரிடம் தோன்றி சமிக்கையாக "இடைவெளி " யை ஆமோதிக்கும் கனவுக் காட்சி இறுதியில் பாலைவன கனவுக் காட்சி . அந்த பக்கங்களை நாம் காட்சிகளாக யோசிக்க . David Lynch - ன் படங்களில் வரும் குறியீடுகள் நிறைந்த மாய கனவுக்காட்சிகளை பார்க்கும் அதே உணர்வு தோன்றியது ,ஆனால் Lynch - தன் திரைப்பட வாழ்வை தொடங்கும் முன்னமே இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சர்யம். 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இப்படி இவர் எழுதினர் என்ற ஆச்சர்யம் வாசிப்பினுடே நம்மோடு பயணித்துக்கொண்டே இருக்கிறது .



    யாருமே பார்க்க விரும்பாத தன்னை. சதா யோசித்துக்கொண்டிருந்த ஒருவன் என்பதால் . சாவு அவரிடம் நெருக்கம் காட்டி சம்பாஷித்ததோ ! இவ்வளவு என்னை புரிந்துகொண்ட உன்னை பிரிந்து என்னால் காத்திருக்கமுடியாது வா ! என்று முன்னமே அழைத்துக்கொண்டதோ!."இடைவெளி"யை அச்சு நிலையில் பார்த்த அவர் புத்தகம் முழுமையடைந்து வெளிவரும்போது சாவுடன் சங்கமித்திருந்தார் . இறுதிவரை அவரது புத்தகத்தை அவர் பார்க்கவில்லை . அவர் ஒரு அறிவுஜீவி என்பதில் சந்தேகம் இல்லை . இன்னும் கொஞ்சகாலம் இருந்திருந்தால் என்னவெல்லாம் எழுதியிருப்பார் என்று யோசிக்கையில் ! மலைப்பும், இல்லாமல் போன சோகமும் நம்மை கவ்வுகிறது . நிச்சயம் தமிழுக்கு பெரும் இழப்பு .



    1975 - ல் ஒரு இதழில் வெளியான "இடைவெளி" . 1984 - ல் சம்பத் அவர்களின் இறப்பிற்கு பின் புத்தகமாக வெளியாகி இருக்கிறது . அதற்கு பின் சில சிக்கல்களால் மறுபதிப்புகள் வராமலேயே இருந்திருக்கிறது . சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பழைய பதிப்பின் Pdf - பிரதி இணைய வெளியில் புழங்கிக்கொண்டிருந்தது .அப்படிப்பட்ட நிலையில் "இடைவெளி"யை 30 ஆண்டுகளுக்கு பின் புது பதிப்பாக வெளியிட்ட "பரிசல் புத்தக நிலையத்தினரின் " முயற்சிக்கு , இதை செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கும் அதை செவ்வனே செய்ததற்கும் தலைவணங்க வேண்டும் . குறைந்த எண்ணிக்கையில் பதிப்பித்துள்ள இந்த புத்தகத்தை தொடர்ந்து வாசிப்புத்தளத்தில் உயிர்ப்போடு வைத்திருக்கவேண்டியது வாசகர்களாகிய நம் கையில் இருக்கிறது .


இடைவெளி - எஸ் .சம்பத்

பரிசல் புத்தக நிலைம் வெளியீடு


Thursday, 5 July 2018

பஷீரின் " எடியே "

 







     திருமணத்திற்கான வாய்ப்பில்லை என்று சரஸ்வதி தேவியை சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு திரும்புகையில் எண்புறமும் சூழ்ந்த இருளும் மௌனமும் , பலா இலைகளை மென்றுகொண்டு பார்க்கும் பாத்துமாவினுடைய ஆட்டின் தீர்க்க பார்வை , ஃபாபி சம்மதம் தெரிவித்த போது அருகினில் சென்று தேவாவிற்காக சிலையாய் நின்றது , மாங்கோஸ்டின் மரத்தடியில் கிராமஃபோன் கஸல் இசையினுடே சுலைமானியின் சூடான சில மிடறுகள் , பாய்பூர் வீட்டு வெளிக்கதவை தாழிட்டு விலகுகையில் ஷாஹினாவின் "டாடா" என்ற விளிப்புடனான மழலை குதிப்பு , இன்றைக்கு காசு இருக்குப்பா வாங்கிக்க என்கையில் மீன்கார சங்கரனின் சிரிப்பு . கல்லுக்குப்பிகளுக்கு இடையே மங்கலாய் வந்து வந்து மறையும் எதிரே அமர்ந்திருக்கும் ஜான் ஆப்ரஹாமின் உருவம் . சங்கரேட்டா கடை பெஞ்சில் மகனுடன் அமர்ந்திருக்க முகத்தில் அறையும் புட்டின் ஆவியும் மிளகு காபியும் , கட்டாரியால் குத்தி குதறிய மெத்தையிலிருந்து மேலே விழும் பனியாய் பஞ்சுத்துளிகளும் வெறித்த பார்வையும் .ஷாஹினாவிற்கு கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே எங்கிருந்தோ வந்து முன் நிற்கும் சாத்தான். எம் .டி யின் உயிருக்காக இறைவனிடம் இரந்து நிற்கையில் கண்களை மறைத்த கண்ணீர்.


    என்று அவரின் சுவாரஸ்யமான பல தருணங்களை நம் கண் முன்னே கொணர்கிறார் அவரின் சகபயணி ஃபாபி பஷீர் . யோசித்தால் நாற்பது ஆண்டுகளுக்கு பிந்தைய வாழ்வைப்பற்றிய சித்திரமாகவே அது இருக்கிறது . நாற்பது வயதிற்குள் பெரும் எழுத்து ஆளுமையாகிவிட்டவர் . அப்போதே ஏறக்குறைய 20 ஆண்டுகள் எழுதியிருப்பார் எனில், அவரின் எழுத்திற்கு இடுபொருளாய் இருந்த அனுபவங்கள் அதற்கும் முன்னமே இளம் வயதிலேயே வாய்த்திருக்க்கவேண்டும் . அந்த அனுபவச் செறிவை எழுத்துகளாக்கி கரைத்துவிடவே அவர் தொடர்ந்து முயன்றதாய் தோன்றுகிறது . இருந்தும் அந்த அனுபவங்களின் தின்மை அவரை சில முறை வென்றுள்ளது . இருமுறை மனப்பிறழ்வுக்கு ஆளாகி மீண்டுள்ளார். அந்த அனுபவ செறிவை அறிந்து கொள்ள இன்னும் அவரின் ஆரம்பகால வாழ்வைப்பற்றி படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிடுகிறது ஃபாபி பஷீரின் " எடியே " புத்தகம் .
இன்று பஷீர் நினைவுதினம்

Tuesday, 12 June 2018

நாமளா சொல்லிகிட்டாதான் உண்டு



     உலக அளவில் கலைகளை அளவிட ஒரே அலகுகள் அளவுகோல் சரியா ? பிராந்தியம் , கலாச்சாரம் சார்ந்து மாறுபடுவதை ஏற்றுக்கொள்ள வேண்டாமா ! என்று விவாதங்கள் ஒருபுறம் இருக்க . இனம் சார்ந்து அந்த அளவுகோலை இலகுவாக்கிக்கொள்ளுதளை எப்படி அணுகுவது . அது அந்த கலைஞனையும் அவன் கொணர்ந்த கலையையும் சிறுமைப்படுத்தும் செயல் அன்றோ !

............................................................................................................................................
 





    தகர டப்பாவை உரசி உருண்டுக் கொண்டிருக்கையிலேயே விழப்போகும் லங்கரின் எண்ணை லாவகமாக சொல்லிவிடலாம் ! புரண்டு விழுமுன்னே நான்கா , தாயமா என்பதை நயமாய் நவிழ்ந்திடலாம் ! எதிராளியின் அடுத்த நகர்வு ராணியா ? சிப்பாயா ? கணப்பொழுதில் கணித்திடலாம் . ஆனால் அடுத்து என் செய்வான் என்பதை கணிக்கமுடிவதில்லை. பிராயம் இரண்டே ஆனாதொரு குழந்தையிடம் . நாம் கணிக்காத எதோ ஒன்றை செய்கிறது .

Tuesday, 5 June 2018

பலிபீட ஆடு





 கழுத்து மாலையில் காட்டாமணி இலைகள் 
 கவ்வ முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது, 
 நீர் சொட்ட நிற்கும் பலிபீட ஆடு .

Monday, 21 May 2018

Fatal Attraction - 1987 - Adrian Lyne



 


          ஒரு சிறு பிறழ்வு எப்படிப்பட்ட இக்கட்டிற்கு இழுத்துச்செல்கிறது ! .அந்த குடும்பத்தலைவன் என்ன பாடுபடுகிறான், அவன் மனம் எப்படியொரு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதைத்தான் படத்தில் முன்னிலைப்படுத்துகிறார். அதே நெருக்கடியின் அழுத்தத்தை நமக்கும் பரவ விடுகிறார் காட்சிகளின் ஊடே .மற்றொரு பக்கம் அன்புக்கு ஏங்கி நிற்கும் ஒருத்தி தனக்கு கிடைத்ததொரு வாய்ப்பை எப்படி இறுக பற்றிக்கொள்கிறாள் , அந்த அன்பு கைநழுவுகிறது என்று தெரிந்து, எப்படி ஆக்ரோஷமாக மாறுகிறாள் என்பதையும் தெளிவுபடுத்துகிறார் . படம் முடிந்து சில மணிநேரம் அவளை சுற்றியே மனம் சுழன்றுகொண்டிருந்தது . அவளின் பால்யம், குடும்பம் பற்றி ஏதும் படத்தில் சொல்லப்படவில்லை , இருந்தும் நம் மனம் அவளது இதுவரையிலான வாழ்க்கை எவ்வளவு கசப்புடன் இருந்திருக்கும் என்று கற்பனையில் உழல்கிறது . இறுதியில் அவள் மேல் வெறுப்பிற்கு மாறாக ஒருவித கழிவிறக்கமே மிஞ்சுகிறது .



    Erotic thriller -வகை படங்களையே தன் பாணியாக வரிந்துகொண்டவர் . மனப் பிறழ்வு & மனக்கிலேச உளவியல் விஷயங்களை எடுத்துக்கொண்டு அதிநுட்பமாக கையாண்ட விதத்தில் Adrian Lyne- னின் மற்றைய படங்களிலிருந்து நிச்சயம் இது தனித்து நிற்கிறது.

Monday, 23 April 2018

ஆதி பருக்கையின் அதிருசி

   





    சிறுவயதில் புழுதியில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் வேகமாக நுழைகையில் , முன்கட்டு திண்ணையிலிருந்து ஒரு குரல் எப்போதும் அந்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தும் . வலதுபுறம் மரத்தாலான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தாத்தாவினுடையது அது . சுருட்டு மணம் கமழும் அந்த எல்லைக்குள் சென்றால் (இன்றும் எங்கேனும் அரிதாக நாசிக்குள் புகும் சுருட்டின் கார மணம் தாத்தாவை நினைவடுக்குகளில் மீட்டெடுக்கும்) .ஏதேனும் ஒரு பத்திரிக்கை காகிதத்தை கொடுத்து படிக்க சொல்லுவார் . கடையில் சுருட்டு மடித்து கொடுத்ததோ , கடைக்கு வந்தவர்கள் நகை மடித்து கொண்டுவந்த காகிதமாகவோ அது இருக்கும் ,பெரும்பாலும் தினத்தந்தி அல்லது மாலைமுரசு . ஆரம்பகாலத்தில் எழுத்துக்கூட்டி வாசிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் . இருந்தும் இறுதிவரை முடித்துவிட்டே உள்ளே செல்வேன் . எதுவும் சொல்லாமல் அந்த காகிதத்தை வாங்கி வைத்துக்கொள்வார் . கொஞ்சம் வளர்ந்த பிறகு , வாசித்தபின் என்ன புரிஞ்சது என்று கேட்பார் . நமக்கு தெரிந்ததை சொல்ல அப்போதும் பதில் சொல்லாமல் காகிதத்தை வாங்கிக்கொள்வார்.


    பிற்பாடு வீதிகளில் கிடக்கும் காகித துண்டுகளை எடுத்துவந்து அவரிடம் கொடுப்பேன், நானே வாசித்து காட்டுவேன் . அது ஒருவிதமான விளையாட்டாக அந்த வயதில் எனக்கு பட்டது . தெரிந்து செய்தாரா ! என்று தெரியாது ,யோசித்துப் பார்க்கையில் வாசிப்பின் ருசியை எனக்கு பழக்கப்படுத்த முயன்றிருக்கிறார் .
அவருக்கு இரண்டாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கு வசதியும் இல்லை & வாய்ப்பும் இல்லை (தாய் தவறியதால் கை குழந்தையாக இருந்த தங்கையை கவனித்துக்கொள்ள வேண்டும் ) முற்றாக படிப்பு கிடைக்காமல் போக . சிறுவயதிலிருந்தே வேலைகளுக்கு செல்லத்துவங்கினார் .இயல்பாக மனித மனதிற்கு, மறுக்கப்படும் ஒன்றை நுகர வேண்டும் என்ற ஒரு வெறி ஏற்படுமல்லவா ! அப்படி, ஒரு வெறி அவருக்கு வாசிப்பின் மேல் . பின்னாட்களில் எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்டவர், பின் படித்துக்கொண்டே இருந்தார் . இப்போதும் தாத்தாவின் பிம்பத்தை மனதுக்குள் கொண்டுவர முயன்றால் அவர் கையில் தினமணியோ ஏதேனும் ஒரு புத்தகமோ இருப்பதை தவிர்க்க முடியவில்லை , காரணம் எப்போதும் அவர் கையில் ஒன்று இருந்துகொண்டே இருக்கும் வாசிப்பதற்கு .


   உலக புத்தக தினமான இன்று சில புத்தகங்களின் அல்லது எழுத்தாளர்களின் நினைவுகளைக் காட்டிலும் , இவையனைத்தையும் கை காட்டிவிட்டு சென்ற . வாசிப்பின் ஆதி பருக்கை அதிருசியை ஊட்டிவிட்ட தாத்தாவின் நினைவுகளே மேலெழுந்து நிற்கின்றன.


#உலக_புத்தக_தினம்

Thursday, 12 April 2018

Sudani From Nigeria- Zakariya -2018




    வாழ்வு தனக்கு நல்கியிருக்கும் கசடுகளை மட்டுமே திரும்பத்திரும்ப அசைப் போட்டுக்கொண்டு யாருமறியா மனக்கிலேசத்தில் உழன்றுக்கொண்டிருக்கும் நாயகனுக்கு , உனக்கு வாய்த்திருக்கும் வாழ்வெல்லாம் எங்களுக்கு கிடைப்பதற்கரிய கனவுயா என்று , நாயகனின் மனதிலிருக்கும் துயர மயாகோட்டிற்கு இணையாக ஒரு பெரிய கோ(ரோ)டை வரைந்துவிட்டு செல்கிறான் அந்த நைஜீரிய சூடானி. நம் மனதில் நாம் வரைந்து வைத்திருக்கும் மாயக்கோடையும் கொஞ்சம் ஒப்பிட்டுக்கொள்கிறோம் படம் முடிந்து வெளியேறுகையில் .


#JUZSAW
#Sudani_from_Nigeria

Sunday, 4 March 2018

நெகிழ்வுகள்





     சுவைத்து உண்டவற்றை திரியுமிடத்திலெல்லாம் எச்சமிடும் பறவைப்போல . வாசித்தவைகளின் மிச்சத்தை கிறுக்கிக்கொண்டு, எழுத்து பாவனை செய்துகொண்டிருப்பவனை . வலைப்பூ துவங்கு என்று முன்பு தூண்டியவர் அண்ணன் மேகநாதன்  . இந்த  வலைப்பூ எழுதியவற்றை முறைப்படுத்தி வைத்துக்கொள்ள சிறப்பாக உதவுகிறது .அவரும் குடும்பமும் சேர்ந்து திருமணத்தன்று ஒரு வலைதளத்தை  veerabagu.com அன்பளித்தது திக்கின்பதில் ஆழ்த்தியது . புகைப்படத்தில் விரிந்திருக்கும் என் மோவாயின் நீளம் அப்போது பளிச்சிட்ட அவ்வின்பத்தின் அளவை சிந்தாமல் சிதறாமல் அப்படியே அழகாய் நிலைநிறுத்தியிருக்கிறது . வலைதளம் ஆரம்ப நிலையில் இருக்கிறது கூடிய விரைவில் முழுமை பெரும்.


    மற்றொரு அதிர்ச்சியாக (அப்படித்தான் இருந்தது எனக்கு) முகநூலில் கிறுக்கியவற்றை தொகுத்து (அதில் இருந்த எழுத்துப் பிழைகளை திருத்தி முறைப்படுத்திய கவிதாயினி கோப்பெருந்தேவி  அக்காக்கு  இங்கே கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொண்டு ) சிறு நூலாக வெளியிட்டார்கள் . முன்னுரை அப்பா எழுதியிருந்தார் , என்னிடம் இதுவரை சொல்லாத சிலவற்றை எழுத்தாக்கி நெகிழ்த்தி இருந்தார் .அந்த நூலை கிராமசேவகருக்கு சமர்பித்தது மட்டுமல்லாமல் , அவர் கையாலேயே அதை வெளியிட்டு அப்பாவை பெறச் செய்தது எனக்கு பெருமகிழ்சியை கொடுத்தது . நானும் அண்ணனும் கிராமசேவகருக்கு சரியானதொரு பாராட்டுவிழா நிகழ்த்த வேண்டும் என்று பேசிக்கொண்டதுண்டு .( பாராட்டு & பிரதிபலன் பற்றியெல்லாம் சிந்திக்காத மகாத்மா அவர்) இருந்தும் அதற்கான களம் கிடைக்காமலேயே இருந்தது எங்களுக்கு . அன்றைய திருமணமேடையை அந்த களமாக்கியதில் பெரும் மனநிறைவு . சார் மேடையில் இருந்ததும் அவர் பேசியதும் அரங்கிலிருந்த அனைவரையும் நெகிழ்த்தியது . ஏனென்றால் எல்லோரும் அந்த துரோணரிடம் வித்தை கற்றவர்கள் .
இவை எதையும் எனக்கு தெரியாமல் மறைத்து என்னுள் அந்த திகின்பத்தித்தை முகிழ்த்தெடுக்க பின்புலத்தில் இறங்கி வேலை பார்த்த Meganathan Jeevanantham , Kopperundevi Senthilnathan , Arun Prakash , Venkatesh Kumar , Vicky Pugazh , Barani Dharan , Srini Vasan அக்கா , தம்பிகள் & மச்சான்களை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

Saturday, 13 January 2018

எதிர் வினை



சாம்பல் நிறக்  கடிகாரம் முகிழ்ந்து
இரட்டைச்சரி குறியாகி பின்
நீலம் உருவேரியும் நீண்ட நேரம்
ஆற்றப்படா எதிர்வினையை
எதிர் வினை எனக்கொள்க !


#அகக்கிறுக்கள்
#நாமளாசொல்லிகிட்டாதான்உண்டு

Friday, 12 January 2018

Mayaanadhi - മായാനദി - 2017 - Aashiq Abu




   அந்த கதாபாத்திரம் அவ்வளவு வன்மையானது திண்மையானது என்றெல்லாம் பிரகடனப்படுத்திக்கொள்ளாமல் .போகிற போக்கில் சில காட்சிகளில் அந்த கதாபாத்திரத்தின் வனப்பை நுணுக்கத்தை நமக்குள் விரிக்கிறார் இயக்குனர். மஞ்சள் ஒளி கமழ் இருளில் புடவையுடன் அனாயசமாக அவள் நடந்து நிற்கும் காட்சி ஒன்றே போதும் . சமீபத்தில் பார்த்த முக்கியமான கதாபாத்திரம் அப்புவினுடையது .


   நீண்ட நெடிய அந்த நாளின் இறுதியில் எதிர்பாராமல் அவன் அவளை சூழ்வதும் , அதைத்தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் நம்முள் புன்னகையை முகிழ்த்தெடுத்துக்கொண்டே இருக்கிறது . அந்த சூடான பானத்தின் முதல் மிடர் அன்றைக்கு அவளுக்கான அனைத்தையும் கொடுத்துவிடுகிறது . அதைக்கொடுக்க எங்கிருந்தோ வருகிறான் அவன் . மாந்தனை அப்பு புரிந்துகொண்டதைக்காட்டிலும் மாந்தன் அப்புவை அதிகம் புரிந்துகொண்டிருக்கிறான் என்பது இறுதிக்காட்சியில் நமக்கு புரிகிறது . அந்த துப்பாக்கி சப்தம் அவனுக்கு அந்த ரகசியம் தெரிவதற்கு முன் கேட்கும் என்று எதிர்பார்த்திருக்க. கொஞ்சம் காலம்தாழ்த்தி கேட்கச்செய்து அப்போது அங்கு சூழ்ந்திருக்கும் கதாத்திரங்கள் உருவாக்கும் காட்சியில் மாயநதியை காட்டுகிறார் இயக்குனர் .