Monday, 23 April 2018

ஆதி பருக்கையின் அதிருசி

   





    சிறுவயதில் புழுதியில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் வேகமாக நுழைகையில் , முன்கட்டு திண்ணையிலிருந்து ஒரு குரல் எப்போதும் அந்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தும் . வலதுபுறம் மரத்தாலான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தாத்தாவினுடையது அது . சுருட்டு மணம் கமழும் அந்த எல்லைக்குள் சென்றால் (இன்றும் எங்கேனும் அரிதாக நாசிக்குள் புகும் சுருட்டின் கார மணம் தாத்தாவை நினைவடுக்குகளில் மீட்டெடுக்கும்) .ஏதேனும் ஒரு பத்திரிக்கை காகிதத்தை கொடுத்து படிக்க சொல்லுவார் . கடையில் சுருட்டு மடித்து கொடுத்ததோ , கடைக்கு வந்தவர்கள் நகை மடித்து கொண்டுவந்த காகிதமாகவோ அது இருக்கும் ,பெரும்பாலும் தினத்தந்தி அல்லது மாலைமுரசு . ஆரம்பகாலத்தில் எழுத்துக்கூட்டி வாசிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் . இருந்தும் இறுதிவரை முடித்துவிட்டே உள்ளே செல்வேன் . எதுவும் சொல்லாமல் அந்த காகிதத்தை வாங்கி வைத்துக்கொள்வார் . கொஞ்சம் வளர்ந்த பிறகு , வாசித்தபின் என்ன புரிஞ்சது என்று கேட்பார் . நமக்கு தெரிந்ததை சொல்ல அப்போதும் பதில் சொல்லாமல் காகிதத்தை வாங்கிக்கொள்வார்.


    பிற்பாடு வீதிகளில் கிடக்கும் காகித துண்டுகளை எடுத்துவந்து அவரிடம் கொடுப்பேன், நானே வாசித்து காட்டுவேன் . அது ஒருவிதமான விளையாட்டாக அந்த வயதில் எனக்கு பட்டது . தெரிந்து செய்தாரா ! என்று தெரியாது ,யோசித்துப் பார்க்கையில் வாசிப்பின் ருசியை எனக்கு பழக்கப்படுத்த முயன்றிருக்கிறார் .
அவருக்கு இரண்டாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கு வசதியும் இல்லை & வாய்ப்பும் இல்லை (தாய் தவறியதால் கை குழந்தையாக இருந்த தங்கையை கவனித்துக்கொள்ள வேண்டும் ) முற்றாக படிப்பு கிடைக்காமல் போக . சிறுவயதிலிருந்தே வேலைகளுக்கு செல்லத்துவங்கினார் .இயல்பாக மனித மனதிற்கு, மறுக்கப்படும் ஒன்றை நுகர வேண்டும் என்ற ஒரு வெறி ஏற்படுமல்லவா ! அப்படி, ஒரு வெறி அவருக்கு வாசிப்பின் மேல் . பின்னாட்களில் எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்டவர், பின் படித்துக்கொண்டே இருந்தார் . இப்போதும் தாத்தாவின் பிம்பத்தை மனதுக்குள் கொண்டுவர முயன்றால் அவர் கையில் தினமணியோ ஏதேனும் ஒரு புத்தகமோ இருப்பதை தவிர்க்க முடியவில்லை , காரணம் எப்போதும் அவர் கையில் ஒன்று இருந்துகொண்டே இருக்கும் வாசிப்பதற்கு .


   உலக புத்தக தினமான இன்று சில புத்தகங்களின் அல்லது எழுத்தாளர்களின் நினைவுகளைக் காட்டிலும் , இவையனைத்தையும் கை காட்டிவிட்டு சென்ற . வாசிப்பின் ஆதி பருக்கை அதிருசியை ஊட்டிவிட்ட தாத்தாவின் நினைவுகளே மேலெழுந்து நிற்கின்றன.


#உலக_புத்தக_தினம்

No comments:

Post a Comment