Saturday, 20 February 2016

வாத்சல்யம் எனும் மாயக்கயிறு

படங்களில் பாடப்படும் தாலாட்டுகளுக்கு இசையும் கவித்துவமான வரிகளும் தேவைப்படுகின்றன. நிதர்சனத்தில் அப்படி எங்கும் பாடப்படுவதில்லை. ரே ரே என்றோ லா லா என்றோ ஏதேனும் ஒரு எழுத்தையோ வார்த்தையையோ ஒத்திசைவு ராகத்தில் திரும்ப திரும்ப இழைத்துக்கொண்டிருப்பர். வார்த்தைகள் புரியாத அந்த குழந்தைக்கு வரிகளும் இசையும் தேவைப்படுவதில்லை. அதனுடன் அணுக்கமாய் அன்னை இருக்கிறாள் என்பதை கட்டியம் கூறிக்கொண்டிருக்கும் அந்த சப்தம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது .

அந்த சப்தம், ஒரு அரூபமான மாயக்கயிற்றால் அவர்களை பிணைக்கிறது . அந்த கயிறு, கையில் இருக்கும் நம்பிக்கையில்தான் குழந்தை தூங்கிப்பொகிறது , விழிக்கும்போது கையில் கயிறு இல்லையேல் கதறி அழத்துவங்குகிறது .காணப்பொழுதில் கயிற்றை கையில் திணிக்க சமாதானமாகிறது. நமக்கு பாடப்பட்ட தாலாட்டு நிச்சயம் நமக்கு நினைவிருக்காது . இருந்தும் அம்மாவிற்கும் நமக்குமிடையேயான அந்த மாயக்கயிறு இன்னும் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது .கால ஓட்டத்தால் அதன் நீளத்தில் தடிமனில் அளவு வேறுபட்டிருக்கலாம் அனால் அடியோடு அற்றுப்போவதில்லை.

  உலகிற்கே தாயாய் அப்படி ஒரு மாயக்கயிற்றை நம் மீது வீசுகிறார் பாம்பே ஜெயஸ்ரீ "வாத்சல்யம்" மூலம் .இந்திய மொழிகளின் தேர்ந்த தாலட்டுகளின் தொகுப்புடன். "விலை மதிப்பற்ற" என்ற வார்த்தை மலிவாய் பயன்படுத்தப்படும் இந்த காலக்கட்டத்தில் உண்ணமையாகவே விலை மதிப்பற்ற ஒரு இசைக்கோர்வை.

 தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் இரவுநேரத்தில் இசைக்கவிட்டால் "மண்ணு புகழ் " பாடலின் முடிவில் அல்லது "ஜசோதா ஹரி "பாடலின் சரணத்தில் சாய்த்துவிடுவார் . மற்றவர்கள் போதை வஸ்துக்கள் இன்றி உடலுக்கு உபத்திரவம் இல்லாமல் எப்படி செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பதை சோதித்துப்பார்க்கலாம். பத்து நிமிடத்தில் செவ்வாய் செல்லத்தவறினாலும் சந்திரனில் சத்தியமாக இறங்கிவிடலாம் . எதற்கும் அசையமாட்டோம் என்று சிரிப்பவரா நீங்கள் உங்களுக்காகவே பிரம்மாஸ்த்திரமாக கடைசி பாட்டாய் "ஜோ ஜோ ராமா " வை வைத்திருக்கிறார்.


http://gaana.com/album/vatsalyam

Sunday, 14 February 2016

Maheshinte Prathikaaram / 2016 / Malayalam



புகைப்படக்கலை கற்றுக்கொடுக்கக்கூடியதல்ல, அனால் கற்றுக்கொள்ளக்கூடியது    ..... மகேஷின் தந்தை 


    ஒரு நல்ல புகைப்படம் நிகழ காத்திருக்கணும் , நிகழ்த்த முயற்சிக்கக்கூடாது நிகழும் அந்த ஷனத்தை மௌன சாட்சியாய் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே ஒரு நல்ல புகைப்படக்காரனின் வேலை . காத்திருக்கணும் டா - என்று தன் மகனிடம் சொல்லும் அந்த முதிர்ந்த புகைப்படக்காரர். தன் கலையை அவனிடம் திணிக்க முயற்சிக்கவே இல்லை அவனிடம் அந்த மன மாற்றம் நிகழும் வரைக்காத்திருப்பார்.அது போல இந்த படம் நிகழ்த்தப்படவில்லை நிகழ்ந்ததாகவே படுகிறது
துக்க வீட்டில் டீ குடிப்பதில் வரும் சிறு சல சலப்பு போன் வழி அமேரிக்கா சென்று அங்கு ஒரு தம்பதிகளிடம் தகராறு ஏற்ப்படுத்திவிட்டு மீண்டும் இங்கு வந்து அந்த இரண்டு உறவுக்காரர்களிடம் பரவி சமதனத்திற்க்கு சென்றவனிடம் வந்து அவன் அதே வேகத்தில் செல்ல வழியில் வரும் அப்பாவியின் சைக்களை சறுக்கி விட்டு நெல்லிக்காய் வியாபாரியை விழச்செய்து விரக்தியுடன் வீடு திரும்பி வீட்டில் மனைவியிடம் பாரவி அந்த தகவல் போன் மூலம் அண்ணனுக்கு பரவி யாரென்றே தெரியாத கடைக்கு வந்தவனிடம் பரவி உக்கிரமான பந்து போல் வரும் அந்த கோபத்தின் முற்றாய் மகேஷ் நிற்கும் காட்சியில் இயக்குனர் எவ்வளவு முதிர்ச்சியானவர் என்பதைக்காட்டிவிட்டார்.

     என்றும் வரும் அவள் வரவில்லையே என்று கண்களால் துழாவி , கண்டுக்கொண்டப்பின் கண்ணில் வெட்கமும் காதலும் புன்முறுவலுடன் தலையை சாய்த்துக்கொண்டு ஒருகையில் வேட்டியை பிடித்துக்கொண்டு வேகமாக மாடிப்படி ஏறும் அந்தக்கட்சியில் நான் மீண்டுவிட்டேன் என்பதை மிடுக்காய் காட்டுகிறார் பஹத். பழிவாங்கல்தான் கரு என்று படத்தின் பெயரே சொன்னாலும் படம் முழுதும் காதலும் பரவிக்கிடக்கிறது.கலை மேல் காதல், அவள் மேல் காதல் , இடுக்கியின் இயற்கை மேல் காதல் என்று கட்சிகள் முழுதும் காதல் கசிந்து கொண்டே இருக்கிறது. பஹத்தின் நடிப்பை இடுக்கியின் இயற்கையை இமியளவு சிந்தாமல் சிதறாமல் பருகிட நிச்சயம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம் .

செம : பஹத்தின் நடிப்பு , அந்த துக்கவீட்டு பாடல் & இடுக்கி பாடல் ,இயல்பான அழகின் இலக்கணமாய் வரும் இரண்டாவது நாயகி ,இறுதி சண்டைக்காட்சி

பெயருக்காகவே பார்க்கலாம் : Fahadh Faasil , Anusree

Trailer : https://www.youtube.com/watch?v=_KY8Du4WWew