ஆட்காட்டி விரலும் பெருவிரலும் ரத்தம் கட்டி வலித்துக்கொண்டிருப்பது அப்போதுதான் உணர்வில் தெரிந்தது விஜயனுக்கு .தன் சரங்களைத்தாண்டி இடப்பக்கம் இதயத்திற்கு பக்கமாக கவசம் கொஞ்சம் சேதாரமாகயிருப்பதை தொட்டுணர்ந்த போதுதான் அந்திக்கு முன் ஆக்ரோஷமாக துரோணருடன் சமருக்கு நின்றது நினைவிற்கு வந்தது . அம்பாரத்துணியை ரதத்தில் விட்டுவிட்டு காண்டிபத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இறங்கி நடக்கத்துவங்கினான். கூடாரத்தின் வாசலில் பெருத்த சிந்தனையோடு தருமர் அமர்ந்திருக்க ,வழிபாட்டுக்கான மலர்களை நகுலன் தொகுத்துக்கொண்டிருந்தான் . தூரத்தில் முட்டியில் வழியும் ரத்ததை பொருட்படுத்தாது புன்னகையோடு கையசைக்கும் பீமன் கண்ணில் பட்டான் . நீ அந்தி வழிபாட்டுக்கு வரவில்லையா கண்ணா ? என்றவனுக்கு ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு, இரவு உணவுக்கு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு ரதத்தை குதிரை லாயம் நோக்கி செலுத்தினான் . காயமுற்ற வீரர்களைத் தூக்கிக்கொண்டு அதுரசாலை நோக்கி சிலர் சென்றுக்கொண்டிருந்தனர் . பச்சிலைகளை அரைத்துக்காய்ச்சும் நெடி காற்றில் பரவிக்கொண்டிருந்தது .
லாயத்திற்குள் புகுந்த கண்ணனின் ரதத்தைப் பார்த்து மற்ற தேரோட்டிகள் பரபரப்பாக . ஒரு இடத்தில் ரதத்தை நிறுத்தி குதிரைகளை அவிழ்த்து இலகுவாக்கினான் .பக்கத்தில் இருந்த சிறு தடாகத்தில் நீர் குடிக்க வைத்தான் .வேகமாக ஓடிவந்த சிப்பந்திகளிடம் இந்த குதிரைகளுக்கு கொஞ்சம் உணவு கொடுக்கமுடியுமா! என்றான் . அவர்கள் கொண்டுவந்த இளம் புற்களை அவை உண்ணத் துவங்கின . வெள்ளைக்குதிரைகள் ஆதலால் காயம் எளிதாக கண்ணுறமுடியும் ,அவை மேய இவண் கண்ணால் ஆய்ந்தான் . பெரிதாக எதுவும் தென்படவில்லை. மெதுவாக ஒவ்வொரு குதிரையை தடவிகொடுக்கத் தொடங்கினான் ஏதேனும் வீக்கங்கள் இருக்கிறதா என்று கண்டறிவதே நோக்கம் .ஒரே ஒரு குதிரைக்கு மட்டும் முன்னங்கால்கள் இணையுமிடத்தில் சிறு வீக்கம் தட்டுபட்டது, அங்கு நின்றுகொண்டிருந்த அதுரசாலை சிப்பந்தியிடம் குறிப்பிட்ட இலையைச் சொல்லி எண்ணையில் வாட்டி கொண்டுவர சொன்னான் . வீக்கத்தில் வெந்நீரை தெளித்து துடைத்துவிட்டு அந்த இலையை அங்கு படரவிட்டான். நுனிக் கொழும்பில் நின்றுகொண்டிருந்த குதிரைகளின் கால்கலில் வெந்நீரை ஊற்றினான் ஆசுவாதப்படுத்தினான் . ஒவ்வொரு குதிரையாக வருடிக்கொடுக்கத்துவங்கினான் . முதல் குதிரையிடம் காட்டிய முனைப்பை கடைசிக்குதிரை வரை குறையாமல் பார்த்துக்கொண்டான் . இரவு உணவுக்கு நேரமாவதை உணர்ந்து நகர முற்பட ஒரு குதிரை இவன் நெற்றியோடு நெற்றி வைத்துக்கொண்டது . புன்னகையோடு கண்முடி நின்றான் . குதிரையின் நெற்றில் திருமண் சுவடு .
அங்கே பரிவாரங்களிடையே அகில் புகை முகிலெனப் பரவ எல்லோரும் கைக்கூப்பி நிற்க , சகாதேவன் மந்திர உச்சாடனம் செய்ய மாலை வழிபாடு துவங்கியது .
( வினோபா கர்மயோகத்தைப் பற்றிய ஒரு கேள்விக்கு சொன்ன ஒரு கதையின் மீட்டுருவாக்கம் , ஓவியர் கேஷவின் இந்த ஓவியம் அந்த கதையை நினைவடுக்குகளிலிருந்து மீட்டெடுத்தது)
