சில கோவில் கட்டுமானங்கள் அதன்
பிரம்மாண்டத்தால் பிரமிக்கவைக்கும்
சில அதன் நுணுக்கங்களால் ரமித்து
நிற்கும் . இவை இரண்டும் ஒருங்கே
நிறைந்தது வாதவூரன் (திருவசகம்
கொடுத்த மாணிக்கவாசகர் ) கட்டிய
ஆவுடையார் கோவில் . பிரகாரங்களில் இவ்வளவு பிரம்மாண்டங்களும் நுணுக்கங்களும்
இருந்தாலும் அதன் மையம் (கற்பகிரகம்
) என்னவோ வெற்றிடம்தான் . ஆழமான பொருள் போதித்து
எழுப்பப்பட்ட கட்டுமானம் அது.
அந்த கோவிலின்
முன் மண்டப வாயிலில் நல்ல
வேலைப்பாடுகள் ஊடே இரு தூண்களும்
ஆறு அடிக்கு அப்படியே இருவர்
நிர்ப்பதுபோன்று இரு மனிதர்களின் சிலைகளும்
இருக்கும் . - அது இரண்டுமே ஒருத்தரின் சிலைதான் .ஒன்று ஆடை ஆபரணங்கள்
தரித்து அரசனுக்கு அடுத்து இவன் என்ற
ஆணவம் , ஆணவம் என்று சொல்லமுடியாது
அதிகாரம் தொணிக்க ராஜரீகத்தோடு வரகுண
பாண்டியனின் அமைச்சராய் வாதவூரன்
நிற்கும் சிலை . அணிகலன்கள்
அற்று வெறும் காலுடன் சிற்றாடை
உடுத்தி உருத்துராச்சமும்
நீரும் தரித்து கைகள் கட்டிய
நிலையில் கருணையை கண்ணுள் தேக்கி
மாணிக்கவாசகராய் மற்றொரு சிலை . சுருங்க
சொல்வதென்றால் நான்
-நிறைந்து ஒரு சிலை நான்
-அற்று மற்றொரு சிலை . சிலையில்
சில உணர்ச்சிகளை பிரதிபலிக்க செய்யமுடியும் என்பதை தாண்டி உள்ளொளியை
கூட பிரதிபலிக்க முடியும் என்பதுக்கு இந்த சிலைகள் சிறந்த
உதாரணாம்.
பத்து அடி
இடைவெளியில் இருக்கும் அந்த இரு சிலைகளுக்கு
இடையே நாம் பத்து நிமிடம்
கண்மூடி நின்றால் நம் மனக்கண்ணில் என்ன
என்ன காட்சிகள் தோன்றி மறையுமோ அத்தனையையும்
2 மணி நேரம் மேடையில் இசை நாடகமாக கொண்டுவந்தனர்
- குழுவினர் . மற்றும் ஒரு சரிதம்
சொல்லும் நாடகமாகவே இது இருக்கபோகிறது
என்று சாதரணமாக இருந்தவனை ,அவர்கள் தேர்ந்தெடுத்த கதைசொல்லல்
முறையால் அசரடைத்துவிடார்கள் .
தன் தலைவன்
இட்ட கட்டளையை தான் எடுத்த கொள்கையால்
தன்னால் நிறைவேற்ற முடியவில்லை . தான் செய்தது தவறு
என்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு மன்னிப்பு
கேட்டால் உயிர் பிழைக்கலாம் .
அவன் கொண்ட கொள்கையால் அவன்
கடைசிவரை மன்னிப்பு கேட்கமாட்டான் - இது கொரியாவின்
தலைசி்றந்த படமாக உலகே கொண்டாடும் - படத்தின்
கரு . இந்த நாடகம் பார்க்கும்
போது அந்த கதை கருவிற்கான முடிச்சு மாணிக்கவாசகர் கதையிலும் இருப்பதை கண்டு மிரண்டேன் . நம்மை
சுற்றி எல்லாம் இருக்கிறது நாம்
பார்ப்பது கிடையாது. இப்போது கூட என்னை
அந்த கோணத்தில் பார்க்க செய்தது இவர்கள்
செய்த மாறுபட்ட screenplay
மரத்தடியில் இறைவனே தீட்சை
வழங்கும் காட்சியில் சிலிர்க்க வைத்தார்கள் , கோத்தும்பி ஊட இறைவன் கனவில்
தோன்றிய காட்சியில் பிரமிக்கவைத்தார்கள் , உண்மையான ஒற்றை குதிரையும் ஓளியில்
தோன்றிய ஓர் ஆயிரம் குதிரைகளும்
மிரளவைத்தன. இருந்தாலும் தன்
வீட்டில் அமைச்சர் வாதவூரன் தன் மகளிடம் பேசும் அந்த
காட்சி என்னை அதிகம் கவர்ந்தது
. வாதவூராய் நடித்தவர் அவளவு பொருத்தம் அப்படி
ஒரு நடிப்பு. இவர் மேடையில் இருக்க
மற்ற எந்த குறைகளும் கண்ணில்
படவில்லை .
திருவாசகத்தை எழுதியது மாணிக்கவாசகர்
.திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும்
உருகார் என்ற பழமொழி . இளையராஜா
ஒரு இசை தகடு வெளியிட்டு
இருக்கிறார் , சமீபத்தில் கூட தாரைதப்பட்டையில் ஒரு
திருவாசக பாடலை பயன்படுதிருக்கிறார் . நமசிவாயா வாழ்க
நாதன் தால் வாழ்க என்ற
பாடல் திருவாசகத்தில் உள்ளது ....... திருவாசகம் பற்றி இவளவு
விவரங்கள் தவிற
வேறு எதுவும் தெரியாது . இப்படியே
இருக்ககூடாது ஒரு
பத்து திருவாசக பாடல்களையாவது பொருள் உணர வாசிக்கவேண்டும்
என்ற எண்ணத்தை உள்ளத்தில் உழல செய்துவிட்டார்கள் . உருகுவதற்கு
தயாராகிவிட்டேன்.