Thursday, 22 December 2016

La La Land [2016] - Damien Chazelle

   






    இந்த கதையை ஒரு கால் பக்கத்தில் எழுதிவிடலாம் , 3 நிமிடத்தில் சொல்லிவிடலாம் . மாறுபட்ட விதங்களில் இதே போன்ற பல காதல் கதைகளை நிச்சயம் நாம் கடந்து வந்திருப்போம் ..இந்த கதையை ஒரு கதைச்சொல்லியாக சொல்ல முயன்றிருந்தால் , அது சோபிக்காது நிச்சயம் தோல்வியுற்றிருக்கும் என்பதை இயக்குனர் நன்றாக உணர்ந்திருக்கிறார் . அவருக்கே உரிய பாணியில் வேறுவிதமாக நுணுக்கமாக கையாள்கிறார்.


   இரண்டு கலைஞர்கள் , அவர்களின் லட்சியங்களின் மேல் அவர்களுக்கு இருக்கும் காதல் ,அவர்களுக்குளும் காதலை உருவேற்றுகிறது . அந்த அனுபவத்தை அவர்கள் எப்படி உணர்ந்தார்களோ அதே அளவு ஒரு துளி காதல் கூட குறையாமல், நாமும் அனுபவிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறார் இயக்குனர் . இசையை ,ஒளியை ,வண்ணத்தை அவரது ஆயுதங்களாக்கி அதை சாத்தியப்படுத்துகிறார் . 0 -டிகிரிக்கு கிழான சூழலை உருவாக்கினால் நீர் உறைவதைப்போல அவர்கள் உணர்ந்த காதலில் நாமும் திளைக்கிறோம்.  

   பல காட்சிகளில் காதலில் இருக்கும் அவர்கள் மாயலோகத்தில் சஞ்சரிப்பதைபோல நாமும் சஞ்சரிக்கிறோம் .அந்த இணை படத்தில் எந்தஒரு இடத்திலும் அவர்களுக்குள் காதலை சொல்லிக்கொள்ளவில்லை , இருந்தும் ஒவ்வொரு காட்சியிலும் அவர்களுக்குள் காதல் கசிந்துக்கொண்டே இருக்கிறது . அவர்களின் எதிர்பாராத முதல் மூன்று சந்திப்புகள், திரையரங்கில் திரையின் மையத்திற்கு சென்று அவனைத்தேடுவது ,அவன் தரும் எதிர்பாராத இரவு விருந்தும் அதை தொடர்ந்த சம்பாஷணைகள் , சிறு பிரிவிற்கு பிறகு அவள் வீட்டில் கேட்கும் அவனது பழய காரின் ஹாரன் சப்தம் , Seb's - என்ற அந்த பெயர் பலகையை அவள் பார்ப்பது , பார்வையாளர் பகுதியில் அவளை பார்த்ததும் அவர்களுக்கான அந்த இசைக்கோர்வையை இசைப்பது என்று பல காட்சிகளில் பரவசப்படுத்துகிறார்கள் இயக்குனரும் இசையமைப்பாளரும் .


   சிறந்த இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்கையில் , இசைக்கோர்வையை உச்சத்திற்கு கொண்டுசென்று ,ஒன்றிரண்டு இசைத்துளிகளுடன் முடிப்பார்கள். அதுவரை கேட்ட அந்த நிகழ்விற்கு மகுடம் வைத்தாற்போல் இருக்கும் .அது போல இருந்தது இறுதியில் பரஸ்பரம் நாயகனும் நாயகியும் பரிமாறிக்கொண்ட புன்னகை மொத்த படத்திற்கும் மகுடமாய்.

பெயருக்காகவே பார்க்கலாம் : Damien Chazelle , Ryan Gosling

Tuesday, 15 November 2016

பொய்மையும் வாய்மையிடத்து




சேமித்த போது பார்த்த அந்த பெயரை
இரண்டாம் முறை பார்க்கிறது தொடுதிரை !
உறவுக்காரியின் தொலைப்பேசி அழைப்பது.
அதிகாலை அலாரத்தை முந்திக்கொண்டு எழுப்பியது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னாள்.
இன்னைக்குதானே? என்று உறுதிப்படுத்திக்கொண்டாள்.
முதல் வாழ்த்து உன்னுடையதுதான் என்றேன்.
காலண்டர் கிழிக்கையில் தோன்றியது ,என்றாள்!
பேச ஏதுமில்லா இருமுனை மௌனத்தை !
அப்புறம் பேசுகிறேன் ! என்று அணைத்தேன் .
நேற்றைய நாள் அவளுக்கு அழகாய் இருந்திருக்கும்.
நேற்றைக்கு என் பிறந்தநாள் இல்லை என்பதை
அறிவுறுத்தியிருந்தால் என்ன கிடைத்திருக்கும்?


15.11.2016

Sunday, 30 October 2016

பெருந்திரு

     

பெருந்திரு தந்த பெரும் "திரு" - லா .ச .ரா (30.10.1916 – 30.10.2007)





    ஒரு வனாந்திரமான பகுதி “கற்பாந்திரமான” காடு என்கிறார் , மனித நடமாட்டமே நிகழாத ஒரு பகுதி . பின் சில மனித நடமாட்டம் ஏற்படுகிறது ஒரு சாலை உருவாகிறது அழிகிறது ஒரு ரயில் பாதை உருவாகி உருகுலைகிறது .அப்பகுதி மீண்டும் அரவமற்ற மேடாகிறது ,பின் ஒரு குட்டை உருவாகிறது. கால ஓட்டத்தில் அதுவும் காணாமல் போகிறது . அங்கு விசித்திரமாய் ஒரு கல் மட்டும் பார்த்தவுடன் பட் என கண்ணில் படுகிறது . ஒரு சுனை உருவாகி குறு ஓடையாய் ஓடுகிறது . மீண்டும் சில மனித நடமாட்டம் நிகழ தொடங்குகிறது .யார் யாரோ வருகிறார்கள் அந்த கல் சாட்சியாய் அவர்கள் வாழ்வின் சில பகுதிகளை பேசிச் செல்கிறார்கள் . நம்மால் அந்த மனிதர்களின் வாழ்வின் முழுப்பகுதியை யூகிக்க முடிகிறது . கல்லாய் நாம் இருக்கிறோம் . அதாவது அசைவுறாத ஒரு கேமரா. பாத்திரங்கள் வந்து சில விஷயங்களை பேசி செல்கின்றன . இதை ஒரு சிறு கதை என்று சொன்னாலும் அதில் பல குறுங்கதைகள் விரிகின்றன அக்கதைகள் நம் கற்பனை சிறகை எங்கோ விரித்து செல்கிறது. இப்படி ஒரு சிறுகதையை படமாக எடுக்க எவ்வளவு செலவு பிடிக்கும் ! ஒரு 500 ஆண்டு நிகழ்வுகளை காட்சிப்படிமமாக உருவகப்படுத்த நிச்சயம் ஒரு பிரம்மாண்ட செலவு தேவைப்படும் . அந்த மனிதன் வெறும் காகித பக்கங்களும் சில துளி மையையும் வைத்து . அந்த காட்சி ஊடகம் என்ன உணர்வை நமக்கு உண்டாக்குமோ அதே உணர்வை ஏற்படுத்திவிட்டார் . “யோகம் “என்ற அந்த சிறுகதை என்னைப்பொறுத்தவரை அவரின் மாஸ்டர் பீஸ் .


   அனேக வாசகர்களைப்போல் அபிதாதான் எனக்கும் அவருக்குமான வாசிப்பு தொடர்பை ஏற்படுத்தினாள். அந்த மொழிநடையே இவர் சற்று வேறுமாதிரி என்று ஆரம்பத்திலேயே கட்டியம் சொன்னது. சில பத்திகளை ஒன்றுக்கு இரண்டுமுறை வாசிக்க நேர்ந்தது . ஒரு மாய மனிதனின் எழுத்து வலையில் சிக்குண்ட சிலந்தியாய் என்னையே உருவாக்கப்படுத்திக்கொள்ள தோன்றியது . அந்த நாவலின் முடிவுக்கு முந்தய 30 பக்கங்கள் நம்மால் ஆஸ்வாதமாக இருக்கமுடியாது . இப்படி ஒரு விஷயத்தை தொட்டு விட்டாரே , இவ்வளவு சிக்கலான முடிச்சுகளை பின்னிவிட்டாரே ! எப்படி அவிழ்க்கப்போகிறார் என்ற பதட்டம் தீயென பரவிக்கொண்டிருந்தது. இறுதியில் சொடக்கிடும் நேரத்தில் மந்திரவாதி அனைத்து முடிச்சுகளையும் உடைப்பதுபோல் உடைத்து அவர் வென்றார் . ஒரு இயக்குனரிடமோ & எழுத்தாளரிடமோ பார்வையாளனாக வாசகனாக நாம் தோற்கும் இடங்கள் சுவாரஸ்யமானவை. இவரிடம் பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன் வாசகனாக.


   எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் அந்த வித்யாகர்வம் அற்ற ஒரு எழுத்தாளர் . "எங்கிருந்தோ எவருக்கோ சேரவேண்டிய எழுத்துக்கள் என் மூலம் தன்னை எழுதிக்கொண்டுள்ளன , எப்படி அதற்கு நான் பாத்யதை ஆகமுடியும்" என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது .நமக்கு பெரும் கோவில் கட்டுமானத்தை பார்த்து வரும் அதே ப்ரமிப்பு , சிறு யாளியின் பிடரி வளைவின் நுணுக்கத்தை பார்த்தும் வருமல்லவா அதுபோல இந்த மனிதரின் எழுத்தில் ஒரு பத்தி அல்ல ஒரு வார்த்தையே போதும் நம்மை ப்ரமிப்பில் ஆழ்த்த. ஒரே வார்த்தையில் இரண்டு மூன்று நாட்கள் நம்மை உழல விட்டுவிடுவார் . இவர் எழுத்தின் வீரியத்தை பற்றி யோசிக்கும் பொது அந்த ரசவாதம் அவருக்கு எப்படி சாத்தியமாகியது என்பதை ஆராய, அவர் பணத்துக்காக புகழுக்காக எழுதவில்லை என்பதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது . எந்தவித வரைவிற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் அவருக்கு தோன்றும் பொழுது தோன்றியவற்றை எழுதியிருக்கிறார் . உதாரணத்துக்கு ஒரு சம்பவம் ஐம்பூதங்களை பற்றி ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையென ஐந்து கதைகளை எழுத துவங்கியிருக்கிறார் , நான்கு வந்துவிட்டது ஒரு கதை வரவில்லை அதற்காக 7 ஆண்டுகள் காத்திருந்து பின் ஒரு நாள் அது முகிழ்ந்ததும் எழுதியிருக்கிறார் . இது சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகப்படலாம் , என்னைப்பொறுத்தவரை இதுதான் அவரின் எழுத்தின் வன்மைக்கு காரணம் .


நூறு ஆண்டுகளுக்கு முன் இதே தினம் அந்த ரஸவாதி பிறந்தியிருக்கிறார். இந்த நூற்றாண்டு தினத்தில் லால்குடியின் திசை பார்த்து வாசகனாக வணங்குகிறேன் . என்னுடைய அனுமானத்தில் அவர் அந்த அம்மன் பலகையில் அல்லது பெருந்திருவின் அபயமுத்திரையில் ஐக்கியமாகியிருப்பார். இந்த நூற்றாண்டு தினத்தில் அவரின் எதாவது ஒரு புத்தகத்தை வாசிக்க தொடங்குவோம் . அவரை வாசிப்பில் கொண்டாடுவோம் .

Thursday, 27 October 2016

இறுதிப்பயண இனிமை



நேர்த்தி

தாழம்புதர்களுக்கிடையே  புனையலாடும் புதுப்பாம்புகளைப்போல்.
நேர்த்தியாய் பிணைந்திருக்கும் பின்னல்,
பிதற்றுகிறது அவள் அன்னையின் விலாசத்தை .

                                                                                                                 18.10.16


இறுதிப்பயண இனிமை 

ஐப்பசியின் அதிகாலைக்காற்று முகம் வருட,
கதிரின் மென்தீண்டலும் மெலிதாய்ப்படர ,
சாலையோர வாகை மரங்கள் ,தூரத்து வீடுகள்,
கழனியில் கதிரறுப்போர் - மட்டுமின்றி ,
கீழே பூமியும்கூட அதிவேகத்தில்
நகர்ந்துக் கொண்டிருப்பதாய்படும்.
டிவிஎஸ் -50 ல் சுமக்கப்படும் குறும்பாட்டிற்கு .
எல்லாம் சற்று நேரத்தில் நின்றுவிடும் - என்ற
நிதர்சனத்தை யாரும் சொல்லிவிடாதீர் !
பயணம் ருசிக்கட்டும் சில நாழிகைகள்.
                                                                                                                     27.10.16


Sunday, 23 October 2016

Thoovanathumbikal [1987] Malayalam - Padmarajan



படைப்புகள் ஊடே சமூகம் அல்லது தனிமனிதனுக்கான கருத்துக்களை சொல்லும்பொழுது, குறிப்பாக சத்தமாக சொல்லும்போது நம்மால் அவர்கள் சொல்ல முனையும் கருத்தை புரிந்துகொள்ளமுடிகிற அளவுக்கு உணர்ந்துகொள்ள முடிவதில்லை , அந்த சப்தம் உணர்ந்துகொள்வதற்கு தடையாகவே இருக்கிறது . அப்படி சப்தமாக கருத்துக்கள் சொல்லும் படைப்புகள் சரியான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் மீண்டும் மீண்டும் அதுபோன்ற படைப்புகளுக்கு தேவையே இருந்திருக்காது .சில படைப்புகள் இந்த உணரவைக்கும் நுணுக்கத்தை சரியானமுறையில் கையாளுகின்றன . அப்படி கையாளப்பட்ட படைப்புகள் படைப்பிற்கு பின் நம்முள் ஏதோ ஒரு விவாதத்தை துவக்கிவிடுகின்றன . அது நம்முள் ஒரு தெளிவிற்கான வெளிச்சத்தை பாய்ச்சி விடுகிறது. சமீபத்தில் அப்படி காணக்கிடைத்த ஒரு படைப்பு "தூவானத்தும்பிகள்". 

மேலோட்டமாக பார்த்தால் ஒரு காதல் கதை என்று தோன்றினாலும் . கற்பு , காதல் , தனிமனித அறம் சார்ந்து சில விவாதங்களை நம்முள் ஏற்படுத்திவிட்டு செல்கிறது இந்த படம் . கிளாரா ,ராதை மற்றும் ஜெயகிருஷ்ணன் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் படைப்பும் அவ்வளவு நேர்த்தி , குறிப்பாக மோகன்லாலின் கதாபாத்திரம் அவ்வளவு செழுமை.. . ஜெயகிருஷ்ணன் கதாபாத்திரம் அந்த நகரத்தில் எதையும் செய்வதற்கான திறன் நிறைந்த மனிதன் அதை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. . பல பெண்களுடன் பழகியிருந்தாலும் புழங்கியதில்லை .காமம் என்பது அவனுக்கு மலிவாகக்கிடைக்ககூடியதே என்றாலும் அதிலிருந்து விலகியே நிற்கிறான் . அப்படிபட்ட ஒரு மனிதன் உறவு என்று வரும்பொழுது அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் சிலிர்க்கவைக்கிறது . கிளாரா பற்றி ராதையிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவதும் . எதிர்பாராமல் நிகழும் இரண்டாம் சந்திப்பையும் அவளிடம் மறைக்காததும் . சரி இனி ஒரு முறைக்கூட அவளை சந்திக்கக்கூடாது என்று கசியும் ராதையை தேற்றும் அவன் . மூன்றாவது சந்திப்பிற்க்கான தந்தி கிடைத்த அடுத்த காட்சியிலேயே ராதையிடம் செல்வதிலிருந்து அவன் அந்த உறவில் எவ்வளவு நேர்மையை காக்கிறான் என்பதை உணர்த்துகிறான் . அதே வேளையில் அதிலிருந்து பிறழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதே நிதர்சனம் என்பதையும் புரிந்தவனாகவே இருக்கிறான் .அந்த புரிதல் கிளாராவிடமும் இருந்திருக்கிறது என்பதை அவன் மட்டுமல்ல நாமும் எதிர்பாராதது .

செம : ஒரு கிளாசிக் படத்தில் மாஸ் சீன் காணக்கிடைப்பது அரிது இந்தப்படத்தில் வரும் "நாரங்கா வெள்ளம் " குடிக்க செல்லும் காட்சி அப்படிப்பட்டது. அந்த காட்சிக்கு முன் நாம் ஜெயகிரிஷ்ணனை பார்த்த விதமும் அதற்கு பின் பார்க்கும் விதமும் நேர் எதிரானது.

பெயருக்காகவே பார்க்கலாம் : Padmarajan , Mohanlal

Thursday, 6 October 2016



நாவை சுவைக்கும் சிறுதுளி

சாலையில் சட சடவென
சன்னமாய் அதிகரிக்கும் சந்தம்,
கட்டியம் காட்டுது கனமழையின் வரவை !
அதற்குள் சிக்காமல் அலுவலகம் அடைந்திட,
ஆவலுற்று வலக்கை மிகைப்படுத்துது வேகத்தை .
நிலத்தரகு நிறுவனத்திடம் தப்பியதொரு தடாகத்திலிருந்து ,
வேற்றுலோகம் உய்ய உருமாறி ,
பாதையில் தோல்வியுற்றுபஞ்சு வேஷம் கட்டி ,
மனம் குளிர்ந்து மறுபிறப்பெடுத்து! -பறக்கும் பட்சிகள்,
திசைமாற்றும் காற்றிடம் லாவகமாய் தப்பித்து .
என் நாவை சுவைக்கும் சிறுதுளியின்,
பட்டும் படாத சுவை சுருக்குகிறது வேகத்தை !
முத்தம் ஒன்றோடு முடிந்துவிடுவதில்லையே .

2016 OCTOBER 6

Monday, 26 September 2016

முத்துக்கள் பத்து - பி எஸ் ராமையா






பி எஸ் ராமையா - இந்த பெயர் சி சு செல்லப்பா குறிப்பிட்டு எழுதியதன் மூலமே பரிச்சயம் . அவர் யார் என்று தேடுகையில் மணிக்கோடி அணியினர் பற்றியும் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய அரும்பணி மற்றும் அதன் முக்கிய தளபதியாய் அவர் செயல்பட்டதும் தெரிந்தது ,சிறுகதைகளின் சக்கரவர்த்தி , வியாசர் என்று பலவாறு புகழப்பட்டிருக்கிறார். உண்மையாகவே அவர் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை வியப்பை அளிக்கிறது. சி சு செல்லப்பாவே இவரின் தேர்ந்தெடுத்த 300 சிறுகதைகளுக்கு திறனாய்வு செய்திருக்கிறார். பி எஸ் ராமையா .சினிமாத்துறையிலும் தன் முத்திரையை பதித்துள்ளார் . JP.சந்திர பாபுவிற்கு முதல் திரைப்பட வாய்ப்பை வழங்கியவரும் இவரே என்பது ஆச்சரியமளிக்கிறது .அவர் எழுதிய பல புத்தகங்கள் தற்போது பதிப்பில் இல்லை . "மணிக்கொடி காலம்" என்ற ஒன்றும் இந்த "முத்துக்கள் பத்தும்" கிடைக்கின்றன. இந்த முத்துக்கள் பத்து அவரின் தேர்ந்தெடுத்த 10 சிறுகதைகளை கொண்டது . (உண்மையில் 8 கதைகள் தான் புத்தகத்தை தைத்ததில் தவறு நிகழ்ந்து 2 கு.அழகிரிசாமியின் கதைகள் கலந்துவிட்டன. எதோ முன் பின்னாக துண்டாடி கதை சொல்லும் ஒரு யூக்தியில் அப்போதே கதை சொல்லிருக்காருப்பா என்று நினைத்துக்கொண்டு வாசிக்க, பாதி கதை படித்த பின் தச்சவன் செஞ்ச தப்பு அது என்பது உறைத்தது .)


கதை பேசும் கருத்து , இலக்கியத்தரம் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்காமல் ஒரு கதை காலம் கடந்து இன்னும் ஒரு வாசகனை ஸ்வாரஸ்யப்படுதுகிறதா என்பதே நமக்கு முக்கியம் . அப்படி மொத்த புத்தகத்தில் பணம் பிழைத்தது , வளையல் துண்டு , ஆனாதாஸ்ரமம் ,தரிசனம் , வெண்கலக்குத்துவிளக்கு ஆகிய ஐந்தும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது .

பணம் பிழைத்தது :

கடினமாக உழைத்து பெரிய பணக்காரனானவர் , தன் அந்திம காலத்தில் சொந்த கிராமத்தில் முடிக்க வருகிறார் .அவர் எப்படி இறப்பை எதிர்கொள்கிறார் என்ற கரு . பிரச்சனைகள் வந்தால் மட்டும் இறைவனை நாடி ஓடும் நாம்தான் அந்த செல்வந்தரோ என்ற எண்ணத்தை எழுப்பிவிடுகிறார் . இறப்பு பற்றிய நல்ல தத்துவவிசாரணை நிறைந்த கதை .

வளையல் துண்டு :

பிறன்மனை நோக்கும் ஒருவனின் கதைதான் , இதுபோன்ற கரு உள்ள கதைள் சொல்லும் விதத்திலும் என்ன விஷயத்தை கதையின் ஆன்மாவாக மையப்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தே அவை வெறும் கதைகளா அல்லது க்ளாஸிக்கா என்பது முடிவாகிறது . இந்த கதையின் மைய சரடு The Lunchbox மற்றும் In the Mood for Love படங்களின் கதையின் ஆன்மாவை நினைவூட்டியது . தலைப்பே கவிதை என்பது கதை முடிந்த பிறகு தெரிந்தது

தரிசனம் :

இந்திய பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் ஏற்பட்ட கலவரத்தை களமாக வைத்து எழுதப்பட்ட கதை . கலவரம் நிகழும் காலகட்டத்தில் கலவரத்தில் கணவனை இழந்துவிட்டு மகனுடன் தப்பிப்பிழைக்கப்போராடும் ஒரு தாய் பற்றிய கதை . மத துவேஷம் எல்லா மனதிலும் இல்லை மனிதம் உயிர்ப்போடு இருக்கிறது என்பதையும், அவை இதுபோன்ற நிலைகளில் வெளிப்படும்போது அவை ஒரு மேல்நிலையை அடைகிறது என்பதை கோடிட்டு
காட்டும் கதை .

அனாதாஸ்ரமம் :

இந்த புத்தகத்தில் மிகவும் என்னை பாதித்த கதை இது . தவறான ஒரு முடிவை மிக இக்கட்டான நிலையில் எடுத்த ஒரு அபலைப்பெண்ணின் கதை . அந்த பெண் அந்த கைக்குழந்தையை ஆஸ்ரமத்தில் விட்டுவிட்டு எங்கு சென்றிருப்பாள் ? என்பது இன்னும் நம் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது . அதிகம் நேர்மறை முடிவுகளை மட்டுமே விரும்பிய வாசகர்கள் நிறைந்த அந்த காலத்தில் இப்படி ஒரு முடிவு கொடுத்தது வியக்கவைக்கிறது .

வெங்கலக்குத்துவிளக்கு :

இறுதிக்கதையாக இதை வைத்ததிலிருந்து தொகுப்பாளரின் திறன் தெரிகிறது . ஒரு ரகளையான கதை , இப்படி ஒரு திரில்லர் அனுபவத்தை அவரிடமிருந்து நிச்சயம் எதிர்பார்க்கவில்லை சுவாரஸ்யமான கதை . 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கதையில் உள்ள த்ரில்லர் முடிச்சுகளை நம்மால் முன்கூட்டியே கணிக்கமுடிகிறது . அந்தக்காலத்தில் வாசகர்களுக்கு சிறந்த ஒரு அனுபவத்தை நிச்சயம் கொடுத்திருக்கும் .சில மாற்றங்களுடன் இன்றுகூட சிறந்த த்ரில்லராக இதை எடுக்கமுடியும்.

முத்துக்கள் பத்து - பி எஸ் ராமையா 
தொகுப்பு : திலகவதி 
பதிப்பகம் : அமிர்தா 
விலை : 50

Wednesday, 7 September 2016


அலங்கார  மலர்கள்

வந்த வேலை முடித்து -வழியற்று
வாழ்வின் கடைசி நிமிடங்களை
எண்ணிக்கொண்டு வாட முற்படும்,
நிகழ்ந்த திருமணத்தின் அலங்கார மலர்கள்.
அனிச்சையாய் ஆர்ப்பரிக்கின்றன- ஆரும்
அறியாது அதிலொன்றை அவிழ்க்கும்
மரணத்தை ஸ்நூஸ் செய்த
சிறுமியின் சிறு முகம் பார்த்து .

2016 SEPTEMBER 07

Friday, 2 September 2016

Locke [2013] - Steven Knight



குறைந்த கதாப்பாத்திரங்கள் நிறைந்த படங்களை தேடிப்பார்த்துக்கொண்டிருந்த பொழுது சிக்கிய படம் இது .கட்டுமான நிறுவனமொன்றில்  பணிபுரியும் நாயகன் .அடுத்தநாள் நாட்டிலேயே பெரிய கட்டுமான நிகழ்வு ஒன்றை முன்னின்று நிகழ்த்தவேண்டும் . ஆயத்தப்பணியில் இருப்பவனுக்கு மருத்துவமனையியிலிருந்து அவசர அழைப்பு .பிரசவத்தை எதிர்கொள்ளும் தோழிக்கு உறுதுணையாய் இருக்க வேண்டுமென்று . அவன் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான ஒரு அத்யாயம் அது என்பதால் . நாளைய வேலை நாளைக்கு என்று காரில் அந்த நகருக்கு பயணப்படுகிறான் .

போகும் வழியில் அவன் தொழிற்சாலையின் தலைவர் , இவனுக்கு கீழ் பணிபுரியும் ஊழியன் , அந்த நகர நிர்வாக தலைவர் , மனைவி ,குழந்தைகள் , தோழி , மருத்துவர் என்று ஒரு பத்துக்கும் மேற்பட்டோரோடு தொலைப்பேசியில் பேசுகிறான். அந்த 70 நிமிடங்கள் அவன் பேசும் பேச்சின் ஊடே அவன் யார் என்பதும் அவன் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது நமக்கு  .

90 நிமிடங்களும் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் நாயகன் மட்டுமே திரையில் தோன்றுகிறார் . பார்வையாளருக்கு சோர்வை ஏற்படுத்த அனேக வாய்ப்புள்ள இப்படி ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அசத்தியிருக்கிறார் இயக்குனர் . Tom Hardy என்ற நடிப்பு ராட்சசன் இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது . அதிகமாக ஸ்பேஸ் பாரை தட்டி தட்டி பார்த்தப்படங்களில் இதுவும் ஒன்று , வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஆழமானவை.

Monday, 29 August 2016



பாசாங்கு

மயில்கொன்றை நகங்கள் சூடி ,
மாறுகண் மாற்றி, நா துருத்தி,
மறைந்திருந்து எதிர்ப்பட்டு பயம் காட்டுகையில்.
மயிர்க்கூச்செரிய பயந்ததாய் பாசாங்கு செய்கிறேன் .
பின் நீ வெடித்து சிதறவிடப்போகும் சிரிப்பிற்காக.

2016 AUGEST 8 


 " சுள் "தான் .சுளீரில்லை

அதிரம்சாயா, சமோசா, லேசூ .......
நாசி நகர்த்தும் நறுமணத்துடன் கனைப்பு,
படுக்கையை படரவிடும் பாட்டியின் பெருமூச்சு ,
எக்மோர் எப்போ போயி சேரும் ?
மின்விசிறியை விசைப்படுத்துங்கள் ,மேலவனின் குரல்,
ஒரிஜினல் இல்லாட்டி உங்கள் கையிலிருப்பது குப்பை!
பரிவற்ற பரிசோதகரின் பரிகாசம்.,
எதுவும் பிரஞையிலில்லை !
கண்ணாடி கிழித்துவரும் கதிர்கூட கனிவு,
சுளீரில்லை " சுள்"தான் .
சைடு லோவரில் சரிநிகராய் நாமிருக்க!

2016 AUGEST 29 


Sunday, 28 August 2016

சரசம் - என்ற கவிதைத்தொகுப்பு



"சரசம்" என்ற வார்த்தையின் முழு அர்த்தம் பிடிபடவேண்டுமா கி.ரா எழுதிய "கனிவு" என்ற ஒரு சிறுகதையை மட்டும் படியுங்கள் போதும் என்று நேற்றைய சிறப்புரையில் எஸ்.ரா குறிப்பிட்டார். மேலும் பல சிறுகதைகளை அவர் தொட்டு பேசினாலும் இந்த கனிவின் களம் மிகக்கவர்ந்தது (அவ்வளவு ரொமான்டிக்கான கதை).

வீடு அடைந்தவுடன் கனிவை தேடி வாசித்தேன். கனிவு என்ற பெயருக்கு தகுந்தமாதிரி காதலும் காமமும் கசிந்துக்கொண்டே இருந்தது கதை நெடுக.

கதைக்களம் இதுதான் புதிதாய் திருமணமானவர்களின் முதல் கூடலை அந்த சமுதாய மக்கள் நாள் நட்சத்திரம் பார்த்து நடத்துவதில்லை. இணைகளுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது நடக்கட்டும் என்று விட்டுவிடுவார்கள் . இந்த கதையில் வரும் இணைகள் அவ்வளவு இயல்பாக இணங்கிவிடுவதில்லை என்ற முடிவோடு இருக்க . அவர்களுக்குள்ளிருக்கும் அகங்காரம் அவர்களை முரண்டுபிடிக்க வைக்கிறது. இருந்தும் சிறு சிறு சீண்டல்கள் ஊடல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது . அவர்களுக்குள் கடைசியில் அந்த முதல் கூடல் நிகழ்ந்ததா என்பதுதான் கதை .

புடனி காதுமடல் பரவ முதுகு தேய்க்க இருவரும் சிலிர்ப்பது , மோர் சிலுப்பும் மனைவியை பின்னிருந்து ரசிப்பது , வெண்ணை கேட்ட கையை கிள்ளிவைப்பது, காயத்தில் நெய்யிடுவது , பார்க்க பார்க்க அழகு கூடுவது, செத்துவிடுவோமோ என்று தூக்கி போகும் அவனைப்பார்ப்பது , நீண்ட நாட்களுக்கு பின் அணைத்து உடனே விலகுவது ,எதிர்பாராமல் அவன் வர எதிர்பார்த்து அவள் நிற்பது , அந்த உப்பு முத்தமும் நெய்யிட்ட பப்பு சாதமும் என்று கதை நெடுக கவிதைகள் . ஒரு கவிதை தொகுப்பை சிறுகதை என்று சொல்லி நம்மை ஏமாற்றி இருக்கிறார் .

கதை படித்தபின் ஒரே ஒரு விஷயம்தான் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது . வாழ்வின் அரிய தருணங்கள் நிகழ வேண்டும் நிகழ்த்த முற்படக்கூடாது . அப்படிப்பட்ட விஷயங்கள் நிகழும்போதுதான் அழகு . அப்படி நிகழட்டும் என்றிருந்த அந்த மக்கள் எவ்வளவு பண்பட்டவர்கள் . நாம் இன்னும் நாள் நட்சத்திரம் பார்த்து நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறோம் .

குறிப்பு : இந்த கதையை 1970 ல் எழுதியிருக்கிறார் குமுதத்தில்(?) வெளிவந்துள்ளது . கட்டாயம் வாசிக்கவேண்டிய சிறுகதை

கனிவு சிறு கதையை படிக்க

Wednesday, 27 July 2016

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை.

மார்கழி மாலையில் ,முதல் சந்திப்பில்
காபி குவளைதனை நாற்பத்தைந்து பாகை
நளினமாக கவிழ்த்து பருக .
கருவிழிகள் மட்டும் நிமிர்ந்து பார்த்த தருணத்தில்,
"முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் " என
மயக்கும் மாயக்குரல் மனதோடு கேட்க!
எனதான பாடலும் அதன் சூழலும் சூல் கொள்கிறது என்னை.
"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை " என்பதை
எப்படி சிந்தித்திருப்பார் ! என சிந்திக்கும் வேளையில்- இக்கணம்
நானும் சிந்திக்கவே இல்லை என்பதை சிலிர்ப்பாய் உணர்த்தியது !
நான் சிந்திய சில காபித்துளிகள் .

27.07.16

Friday, 22 July 2016

ஆறிப்போகாத கிறுக்குத்தனங்கள்...

தேனீர் ஏன் தேனாய் இனிக்கிறது !
சவரப்பெட்டி எங்கே போச்சு!
சவுக்காரம் வைக்கவில்லையா குளிக்க !
சலவைசெய்த சட்டையை சட்டகத்தில் மாட்டிவிடு .
இட்லிக்கு மல்லி சட்டினி அரைச்சிருக்கலாமே !
சர்க்கரை வந்தவள் சாப்பிடாமல் ஏன் காத்துக்கிடக்க !
மீன் குழம்பில் மீண்டும் புளி மிகுந்துவிட்டது .
மாத்திரை கொண்டுவர இவ்வளவு நேரமா!
மின் விசிறியை மிகைப்படுத்திவிட்டு போ .
சாய்வு நாற்காலியில் கண்மூடுகையில் தோன்றுகிறது .
அறுபதை தாண்டியும் ஆறாமல் ,
அப்படியே இருக்கிறது எனதான கிறுக்குத்தனங்கள்.
சுயநலமாக அவளுக்கு முன் போய்விட வேண்டுமென்பதும் அதிலொன்று .

22.07.16

Wednesday, 6 July 2016

பின்கழுத்து முத்தம்

பின்னலிடும்போது பிடிபட மறுக்கின்றன சில கற்றைகள்,
கதியற்று விடப்பட்ட பின்கழுத்து பூனைமுடிகளுக்கு
நேற்று கிடைத்த முத்தத்தை மனதில் கொண்டு.
06.07.16

Saturday, 2 July 2016

பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷுர்

   



மீண்டும் அதே சிறுவயது ஈர்ப்பா! ஒண்ணா கண்ணாமூச்சி விளையாடினார்களா ! எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம் என்ற எண்ணம் மேலிடும்பொழுது , இந்த நாவல் 1944 ல் எழுதியது என்ற பிரஞை பின் வர , அனேகமாக அனைத்து பால்யகால காதல் கதைகளுக்கெல்லாம் இந்தக்கதைதான் ஆதியோ ? என்று எண்ணத்தோன்றுகிறது .


    சிறு புத்தகம் 80 பக்கங்கள் அன்று காலையில் பாதி முடித்துவிட்டு முழுதாய் இயங்க முடியவில்லை . மஜீது & சுகறா காதல் என்ன ஆனது என்ற ஆர்வம் அன்றே மீதி புத்தகத்தை வாசிக்க முடுக்கிவிட்டது .
பலர் படங்களை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று படத்தின் முக்கிய முடிச்சுகளை மூச்சுவிடாமல் சொல்லி நம் சுவாரஸ்யத்தை சுக்குநூறாக்கிவிடுவார்கள் . இந்த புத்தகத்திலும் முன்னுரை எழுதுகிறேன் என்று அதே வேலையை பார்த்திருக்கிறார் ஒருவர்.அதனால் கொஞ்சம் ஸ்வாரஸ்யம் குறைந்தது . இனி எந்த புத்தகத்திலும் முன்னுரையை படிக்கக்கூடாது என்ற முடிவெடுக்க வைத்துவிட்டார்.


ரயில் நிலையத்தில் நீர் பூத்த கண்ணோடு வழியனுப்ப நிற்கின்ற சுகறா ,அவள் கேட்க எத்தனிக்கும் கேள்வி . இந்த காட்சியின் வீரியத்தை அல்லது ஆழத்தை வாசிப்பவனிடத்தில் உருவாக்கத்தான் அந்த 80 பக்கங்களுமோ என்று தோன்றுகிறது . இந்த கதை 70 ஆண்டுகள் ஆகியும் அப்படியே இருக்கிறது , இனி வரும் காலங்களிலும் அதே classic- தன்மையோடு இருக்கப்போகிறது . ஏன்என்றால் இனி வரப்போகும் தலைமுறைகளுக்கும் பால்ய கால சகிகள் வாய்க்கப்பெறுவார்கள் .அவர்களால் அவர்களின் வாழ்க்கையோடு எளிதாக இந்த படைப்பை பொருத்தி பார்த்துக்கொள்ள முடியும் . மற்றது சுகறா கேட்க எத்தனித்த கேள்வி ! விடை தெரியாத அந்த கேள்வியிதான் , அழியா சுவாரஸ்ய படைப்பாக இதை நிலைநிறுத்திக்கொண்டிருக்கப்போகிறது.


புத்தகம்: பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷுர்
தமிழில் - குளைச்சல் மு.யூசப் 
பதிப்பகம் : காலச்சுவடு .

Wednesday, 29 June 2016

மீயொலி மீட்டல்




அவ்வளவு முறை சொல்லியும் – கேட்காமல்,
காதோரம் மென்காற்றை உமிழ்கிறாய் !
மீயொலிக்கு சற்று அதிகமாக எப்படி
உன்னால் மட்டும் மீட்டமுடிகிறது? - இந்த கிசுகிசுப்பை.
முடிவுகள் மாறப்போவதில்லை என்று தெரிந்தும்
பாவ்லாவின் நாய்-மணி சோதனையை
நாழிக்கொருமுறை சோதித்துப்பார்ப்பதேன்?
சோதனைக்கு பிறந்தவளே!
29.06.16



Monday, 6 June 2016

வாசகனுக்கு வழிகாட்டியவர்

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் விகடனை புரட்டிகொண்டிருக்கும் போது சில கவிதைகள் நிறைந்த பக்கம் கண்ணில்பட்டது. அனைத்து கவிதைகளிலும் காதலும் காமமும் கலந்து கசிந்துக்கொண்டிருந்தது . முதல் வாசிப்பிலேயே வசீகரித்தது. அடுத்த வாரத்திலிருந்து முதலில் அந்த பகுதி எங்கே என்று தேடி வாசிக்கத்தொடங்கினேன் . அப்பகுதி நிறைவுற்றப்பின் அது புத்தகமாய் வந்த செய்தி விகடனில் வந்தது. அந்த கத்தரிப்பை எடுத்துக்கொண்டு  குறிப்பிட்டிருந்த முகவரியை நோக்கி புறப்பட்டேன்.தி. நகரில் அந்த குறிப்பிட்ட சாலை சுமார் 2 - கி மி நீளமுடையது என்பதும் , அது இரண்டு பகுதிகளாய் இருக்கிறது என்பதும் நான் தேடிவந்த இடத்துக்கு முற்றாக எதிர் திசையில் இருக்கிறேன் என்பதும் அங்கு அரைமணி நேரம் அலைந்த பின் ஒரு ஆட்டோ காரர் சொல்லித்தான் புரிந்தது. ஒரு வழியாய் தேடிவந்த இடத்தை அடைந்தால் ஒரு பழைய வீடு இருந்தது. உள்ளிருந்து ஒருவர் வேகமாய் வெளிவந்தார் . பார்த்தமாத்திரத்தில் திகைத்தேன் காரணம் ருசித்து வாசித்த அத்தனை கவிதைகளையும் எழுதியவர்.

புத்தகம் வாங்கவந்ததை கூறினேன். தவறுதலாக இந்த முகவரியை இட்டுவிட்டனர் . கொஞ்ச தூரத்தில் "நியு புக் லேண்ட்" என்ற புத்தக கடை இருக்கிறது அங்கு கிடைக்கும் என்றார். நான் விழிப்பதை பார்த்து புரிந்தவராய் எப்படி அங்கு செல்வது என்று வழியை விளக்கினர். பின் என்னைப்பற்றி விசாரித்தார் , திருமணம் ஆகிவிட்டதா ? என்றார் . இல்லை என்றவுடன் பின் எதற்கு "மழைப்பேச்சு "? என்று புன்முறுவல் பூத்தார்! நான் சிரித்தேன் . கொஞ்ச நேரம் பேசிய பின் . வாங்க சென்ற புத்தகத்தை எங்கு வாங்க வேண்டும் என்று அந்த புத்தகத்தை எழுதியவரே வழி சொல்லும் பேறு கிடைத்த மயக்கத்தில் நன்றி தெறிவித்து திரும்பினேன்.மீண்டும் அழைத்தார் என் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் . என்னால் நம்பவே முடியவில்லை எழுத்து ஆளுமைகள் தங்களை சுற்றி கொஞ்சமும் நெருங்க முடியா பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்வர் என்றே நம்பிக்கொண்டிருந்த எனக்கு அதிசயமாய் இருந்தது . எண்ணை பெற்றுக்கொண்டு "அறிவுமதி அண்ணன் " என்று சேமித்துக்கொண்டேன் . கடைசி வரை அந்த எண்ணை பயன்படுத்தவே இல்லை . சில ஆண்டுகளில் PHONE- மாற்றும்போது காற்றில் தொலைந்துப்போனது அந்த எண்


                                           ………………………………………….



        சில வாரங்களுக்கு முன் மீண்டும் அந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது .மீள் வாசிப்பில் புதிதாய் இருந்தது அப்பொழுது புரியாததாய் தெரிந்த சில கவிதைகள் இப்பொழுது புரிந்தது போல தோன்றியது. நேற்று புத்தகக்காட்சிக்கு சென்ற பொழுது ஒரு அரங்கில்(அரங்கு எண் - 133& 134 அன்னம்) கி. ராஜநாராயனின் படங்கள் நிறைந்திருந்தது ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தால் அரங்கு முழுதும் அவரது படைப்புகள் . அங்கே குவியலாய் “மழைப்பேச்சு” அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நண்பன் ஒருவனுக்கு திருமணம் வருவதால் அவனுக்கு பரிசளிக்கலாம் என்று (திருமணதிற்கு பரிசளிக்க அவ்வளவு சிறந்த புத்தகம் , இணைகள் இருவர்கும் கவிதைகள் ருசிக்க தெரிந்தால் இன்னும் சிறப்பு )ஒரு புத்தகத்தை எடுத்து பில் போட கொடுத்தால் 50 ரூ என்று போட்டார்கள். அவர் தவறாய் எழுதிவிட்டாரோ என்று விசாரிக்க . இந்த புத்தகம் 50 ரூ தான் என்று உறுதிப்படுத்தினார். வியப்போடு இன்னொரு புத்தகத்தை எடுத்து வந்து அதையும் சேர்த்து பில் போட சொன்னேன் , இதே புத்தகத்தை 5 அண்டுகளுக்கு முன் வாங்கும்பொழுது 200ரூ . இப்பொழுதும் அந்தப்புத்தகத்தின் தரமான வண்ண பக்கங்களுடன் கூடிய வடிவமைபிற்கு & கட்டுமானதிற்க்கு மட்டுமே 150ரூ தரலாம் (உள்ளடக்கத்தை இதில் சேர்க்கவில்லை ). இவ்வளவு மலிவாய் தருகிறார்களே என்பது ஒரு வாடிக்கையாளனாய் மகிழ்ச்சியாய் இருந்தாலும் வாசகனாய் வருத்தமளித்தது .இந்த வாரக்கடைசியில் மீண்டும் ஒருமுறை சென்று 5&6 பிரதிகள் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்று திட்டம் . அப்படி செல்லும் பொழுது எல்லாம் விற்றுத்தீர்ந்திருந்தால் வாசகனாய் மகிழ்ச்சிக்கொள்வேன் .


இந்த புத்தகத்தில் ஒரு கவிதை மிகவும் பிடித்தமானது . மனதில் படிந்து போன அந்த கவிதை

அந்த அழகான மாலையில் இசை கேட்டுக்கொண்டிருந்த என்னையும் 
படித்துக்கொண்டிருந்த உன்னையும் 
இந்த சூழலுக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன 
முகர்ந்து கொண்டிருந்த இரண்டு எறும்புகள்
                                                                                                     ……………..அறிவுமதி

Sunday, 5 June 2016

ஆதர்சனத்தின் ஆதர்சனம்









    நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் என்ற வசனத்தைப்போல . நம் ஆதர்சனத்தின் ஆதர்சனம் நமக்கும் ஆதர்சனம்தானே . அப்படித்தான் P.S.ராமையா பற்றிய அறிமுகம் கிடைத்தது . சி சு செல்லப்பா பற்றிய விஷயங்களை படித்த பொழுது இவரது பெயர் பல இடங்களில் தட்டுப்பட்டது.எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற்போல் தனக்கு கிடைத்த ஒரு விருதிற்கான பரிசுத்தொகையை கொண்டு தன்னுடைய புத்தகத்தை வெளியிடாமல் P.S.ராமையா பற்றிய திறனாய்வை வெளியிட்டார் என்பது . ராமையா பக்கம் ஆர்வத்தை திருப்பிவிட்டது . அவரின் பல புத்தகங்கள் பதிப்பில் இல்லை . தேடிய பொழுது அம்ருதா வெளியிட்டுள்ள முத்துக்கள் பத்து (பத்து சிறுகதைகள் ) கிடைத்தது. அத்தனையும் முத்துக்கள் தான், மிரள விட்டார் . மணிக்கொடி காலம் - என்ற புத்தகமும் பதிப்பில் இருக்கிறது . இந்த புத்தக கண்காட்சியில் சி சு செல்லப்பா & P.S.ராமையா படைப்புகளை தேடவேண்டும் என்றிருந்தேன் . இடையில் அழகியசிங்கர் - விருச்சம் அரங்கு கடைசியாய் அமையபெற்றதாய் வருந்தி ஒரு பதிவு இட்டிருந்தார் . அதனால் இம்முறை முதலில் அந்த அரங்கிற்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன் . மிஷ்கினின் "ஓநாய் ஆட்டுக்குட்டி " புத்தக வெளியீட்டிற்கு சில காரணங்களால் செல்லமுடியவில்லை, அவர் ப்யூர் சினிமா அரங்குக்கு வருவதாய் தகவல் . எனவே இரண்டு அரங்கிற்கு முக்கியமாக செல்லவேண்டும் முதலில் விருச்சம் அரங்குக்கு செல்லவேண்டும் என்ற முடிவோடு உள்ளே நுழைந்து ஸ்டால் 594 என்ற எண்னை தேடினால் 4 வரிசையில் கடைசியாய் காட்டியது . நேராக நடையைக்கட்டினால் 10 நிமிடத்தில் விருச்சம் வந்தது . அழகிய சிங்கர் இல்லை . கால சுப்ரமணியன் இருந்தார் . அரங்கில் நுழைந்ததும் முதலில் பழப்பு நிறமான ஒரு புத்தகம் கண்ணில் பட்டது . நமக்கென்று எழுதப்பட்டது நம்மை வந்து சேரும் என்கிற தத்துவத்தை பலர் மூடநம்பிக்கை என்று மறுப்பார்கள் , எனக்கு அதீத நம்பிக்கை உண்டு . காரணம் தொடர்ந்து பல விஷயங்கள் எனக்கு நடந்துகொண்டே இருப்பதால் . அந்த புத்தகத்தை அவ்வளவு மகிழ்ச்சியோடு எடுத்தேன் சி சு செல்லப்பா எழுதிய " ராமையாவின் சிறுகதை பாணி " (அந்த திறனாய்வு நூல் ). இந்த கண்காட்சியில் முதலாவதாக எடுத்த புத்தகம் கடந்த ஆறு மாதமாக தேடிக்கொண்டிருந்தது . கை வந்து சேர்ந்தது . 200% விலை ஏற்றத்தோடு விற்க தகுதியான இந்த புத்தகத்தை 30 % தள்ளுபடி கொடுத்தார்கள்.

Monday, 23 May 2016

முடிவிலி பட்டியலில் முதல் பெயர் ....


 எட்டயபுரத்தில் பிறந்தார், பாஞ்சாலி சபதம் கண்ணன்பாட்டு எழுதினார் திருவல்லிக்கேணியில் சில காலம் வாழ்ந்தார் என்று அவரின் வாழ்க்கை குறிப்புகளை குறிப்பிடிடும் ஏணைய நூல்களை பொல இது இருக்காது என்ற நம்பிக்கையை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டார் . எழுதியவர் அவரோடு பயணித்த சக பயனியல்லவா பலருக்கு தெரியாத பாரதியின் பல்வேறு முகங்களை தரிசித்த நபரல்லவா.

   90 பக்கங்களில் மிக தெளிவாக நறுக்கென்று அந்த ஆளுமையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. சில பகுதிகள் மிக சுவாரஸ்யமாக இருந்தது புதுமணப்பெண்ணாக பாரதியியை எதிர்கொண்டது , புதுச்சேரியில் அந்த கர்ப்பிணி பெண் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் நிகழ்வு (திரில்லர் படத்துக்கு நிகராக ) ,இறுதி காலத்துக்கு முன் ஒரு உறவினர் கல்யாணத்தில் கலந்து கொண்ட கதை (இதை மட்டுமே அழகான குறும்படமாக எடுக்கலாம் ,மாஸ் முடிவு ). முக்கியமாக குவளை கண்ணன் வரும் பகுதிகள் .

   பாரதி படத்தில் குவளைக்கண்ணன் பாத்திரம் காட்டப்பட்டது போன்று நிஜத்தில் இல்லை என்பது புரிந்தது . வீராவேசமாக பேசும், கவிதை பாடும் ,மனோதைரியம் நிறைந்தவரான பாரதியார் மனக்கிலேசத்திற்கு ஆளாகிறார் புதுச்சேரி சென்ற புதிதில் . அங்கு யாரையும் அவருக்கு தெரியாது, தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என்று உழன்றுகொண்டிருக்கும் பொது திடீரெண்டு குவளைக்கண்ணன் வருகிறார் அவருக்கு தெரிந்த அவ்வூரின் முக்கிய நபர்களை அறிமுகம் செய்துவைக்கிறார். பாரதி அடுத்து என்ன செய்வது என்று தவித்த நேரத்தில் விளக்காய் வருகிறார் குவளை. " எங்கிருந்தோ வந்தான் " என்று கண்ணன் பாட்டில் பாரதி பாடியது இந்த கண்ணனைதான் என்று செல்லம்மள் குறிப்பிடுகிறார் . கொஞ்சம் புத்தி கம்மி ஒண்ணுக்கு ரெண்டு தடவை சொல்லவேணும் இருந்தாலும் குவளையை அவருக்கு மிக பிடிக்கும் அவன் அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டார் அவர் என்றும் குறிப்பிடுகிறார்.
குவளை கண்ணன்


  திருவல்லிக்கேணி கோவில் யானை தள்ளிவிட்ட தருணத்தில் (தூக்கி அடிக்கவில்லை ) மூர்ச்சையாகி யானையின் காலடியில் கிடக்க , யாராவது தூக்குங்க , யாராவது வீட்டுக்கு தகவல் சொல்லுங்க என்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது , தகவல் கேள்விப்பட்ட குவளை ஓடி வருகிறார் கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே பாய்கிறார் யானை பற்றிய பிரக்ஞை எதுவும் அவருக்கு இல்லை பாரதியாரை வெளியே எடுத்து தோளில் போட்டுக்கொண்டு ராயப்பேட்டை ஆஸ்பத்ரிக்கு ஓடுகிறார் . வாசிக்கும் போது மொத்த புத்தகத்தில் இந்த பகுதி அதிக உணர்ச்சிபெருநிலையை ஏற்படுத்தியது . பாரதி என்ற பெரும் ஆளுமையை ரசிக்கும் ஆராதிக்கும் ரசிர்கள் & வாசகர்களின் பட்டியல் ஒரு முடிவிலி . இனிவரும் காலங்களிலும் அந்த பட்டியலில் பெயர்கள் செர்ந்துகொண்டேதன் இருக்கபோகிறது . அந்த பட்டியல் இருக்கும் முதல் பெயர் குவளைக்கண்ணன் . அவரின் அருமை தெரியாத அந்த காலத்திலேயே அவரை ரசித்த ஆராதித்த முதல் ரசிகன் .

பாரதியார் சரித்திரம் 
எழுதியவர் : செல்லமா பாரதியார் 
பதிப்பகம் : தையால் வெளியீடு 
பக்கங்கள் : 96 , விலை : 50

Wednesday, 18 May 2016

Walk on Water / 2004 / Israel / Germany


    ஒரு கதையுண்டு அந்த ஞானி தினமும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் பெரும் பறவைக்கூட்டம் அவரை சூழ்ந்துக்கொள்ளும் அவர் மேலே ஏறி விளையாடும் . தினமும் இதை கவனித்த ஒரு சிறுவன் எனக்கு ஒரே ஒரு பறவையை மட்டும் பிடித்துக்கொடுங்கள் நான் வளர்க்க வேண்டும் என்று மன்றாடினான் . சிறுவனின் பேச்சை தட்டமுடியாமல் நாளை ஒரு பறவையை பிடித்து தருகிறேன் என்று வாக்கு கொடுத்து சென்றார் . அடுத்த நாள் ஆச்சர்யமாக ஒரு பறவைக்கூட அவர் பக்கத்தில் வரவில்லை. மனதில் கள்ளம் வந்தவுடன் அவர் இப்போது சராசரி மனிதனாகிவிட்டார் என்பதை பறவைகள் உணர்ந்து விட்டன என்று அந்த கதை முடியும் .

   அந்த கதைக்கும் இந்த படத்துக்கும் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் ,அந்த கதை சொல்ல வரும் மையக்கருத்தைதான் இந்த படமுன் விவாதிக்கிறது . இஸ்ரேலின் மொசட் உளவுத்துறையில் உள்ள ஒரு அதிகாரிஅதுநாள் வரை அவன் வாழ்ந்த வாழ்வை பற்றிய அவனது சுயவிசாரணைதான் படம் . அவனுக்கு கொடுக்கப்படும் எல்லா assignment -களையும் வெற்றியுடன் முடிப்பவன் . பெரும்பாலும் கொலைகளாக இருக்கும். அதுபோல அவனுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறு assignment - எப்படி அவனை முற்றாக மாற்றுகிறது என்பதே கதை . ஹிட்லர் காலத்தில் அவனது இனத்தவரை அழிப்பதற்கு துணைபோன ஒரு அதிகாரியை கண்டுபிடிக்கவேண்டும் . இப்போது அவருக்கு 95-100 வயது இருக்கலாம் அவர் உயிருடன் இருக்கிராரா இல்லையா என்று கண்டுபிடித்து , உயிருடன் இருந்தால் கொல்லவெண்டும் .இதுதான் அவனுக்கு இட்ட வேலை

   ஹிட்லர் காலத்தில் நடந்த இன அழிப்பும் நாடு கடத்தல்களின் சுவடுகளும் இன்னும் பல இடங்களில் நீருபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதையும். யூதர்களுக்குள் - ஜெர்மனியர்களுக்குள் இன்னும் புகைந்துக்கொண்டிருக்கும் அந்த பழைய கருப்பு வரலாற்றின் இன பேதத்தையும் பல இடங்களில் காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர்.அந்த கிழவரை கொல்ல சொல்லும் assignment - கொடுக்கும் கட்சியில் நாயகன் சொல்வான் இன்நேரம் அந்த கிழவன் செத்திருப்பான் , இல்லையென்றலும் இன்னும் ஒன்றிரண்டு வருடத்தில் சாகப்போறான் எதுக்கு அந்த சாகப்போற கிழத்த நாம கொல்லனும் ? அதற்கு அந்த மொசட் அதிகரி அவன் உயிருடன் இருந்தால் அவன் உயிரை கடவுளுக்கு முன் நாம எடுக்கனும் என்று பதில் சொல்வார் . எவ்வளவு ஆறாத வன்மன் அவர்களுக்குள் இருக்கிறது என்பதை இந்த காட்சி நமக்கு உணர்த்தும்.

  இன அழிப்பு அல்லது போரினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி நேரடியாக படமெடுக்காமல் அதன் வீரியத்தை மட்டும் ஆழமாய் பார்வையாளனிடம் பதியவைக்கும் சில படங்கள் முக்கியமான படங்களாகின்றன அந்த பட்டியலின் இந்த படத்திற்கு நிச்சயம் இடமுண்டு.

பெயருக்காகவே பார்க்கலாம் : Lior Ashkenazi


The Man Who Knew Infinity /2016 / English


    அந்த நபரின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நாம் அறிந்திருப்போம் . எப்போது நடந்தது ,என்ன நடந்தது என்பது நமக்கு நன்றாக தெரியும் . அதை எப்படி நடத்தப்போகிறார் இயக்குனர் என்பதில்தான் தனிமனித சரிதங்களை படமாக்கும் சவால் இருக்கிறது.

   எளிமையாய் தொடங்கியப்படத்தில் முழுக்க முழுக்க அவரின் அருமை பெருமைகளை மட்டும் சொல்லி நம்மை தொந்தரவு செய்யாமல் . ஹார்டி - ராமனுஜத்திற்கான உறவின் குறுக்குவெட்டை சொல்லி ,அதைச்சுற்றி அவரின் கதையை கொண்டு சென்றது சிறப்பு .

    கணிதப்புதிர்களுக்கு விடைகளை கொண்டுவந்துவிடும் ராமனுஜத்தால் அது எப்படி வந்தது என்ற வழிமுறைகளை கொண்டுவரமுடியவில்லை. அது இல்லாமல் இவர்கள் எதையும் நம்பமாட்டார்கள் அதை கொண்டுவரும் வழியைப்பார் எனும் ஹார்டியிடம் எனக்கு விடைகள் மட்டுமே தெரிகின்றன என்ன செய்ய? என்று அப்பாவியாய் கேட்கும் ராமனுஜத்தை . வா என்னோடு என்று லண்டன் மியூசியத்திற்கு அழைத்து செல்பவர் திறந்த ஏடு இருக்கும் ஒரு கண்ணடிப்பேழைக்கு முன் நின்று, இது நியுட்டனின் கைப்பிரதி, இன்று இதில் சில விஷயங்களை யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு நிச்சயம் தெரியும் இதற்கு பாக்கத்தில் வைப்பதற்கு நிகரானது உன் பிரதி . தயவு செய்து பின்வரும் பலருக்கு இதே போன்ற சிரமத்தைக்கொடுத்துவிடதே என்று சொல்லிவிட்டு . பதிலை எதிர்ப்பார்க்காமல் செல்வார் .(பின் அந்த இரண்டுமே நடந்தது ) இந்த நிகழ்வுக்கு பிறகு கொஞ்சமேனும் படிநிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு முயற்சிக்கிறார் ராமனுஜன்.

   அந்தக்காலத்தில் அடிமைப்பட்டிருந்த இந்தியாவிலிருந்து வந்த ஒருவனின் திறமையையை கண்டுக்கொண்டு அதை எப்படியாவது உலகிற்கு நிருபிக்க வேண்டும்மேன்று ஹார்டி எடுக்கும் சிரத்தைகள் நெகிழச்செய்கிறது.
ஆங்கிலேயர்கள் எல்லோரும் நமக்கு வைரிகள் என்று ஆரம்பப்பள்ளியில் படித்தவை யாவும் உண்மையில்லை என்பது பின் நாட்களில் பலவாறு புரிந்தது . குறிப்பாக முல்லை பெரியார் ஆணை கொடுத்த John Pennycuick , தமிழ் மொழியின் மேன்மையை வெளியே காட்டிய - Robert Caldwell , தமிழின் வனப்பை உலகிற்கு எடுத்துச்சொன்ன G.U. Pope போன்றோர் . செய்திருக்கும் சேவை மிகப்பெரியது , இவர்கள் இருந்த திசைநோக்கி நமஸ்கரிக்கலாம். இன்று அந்த பட்டியலில் G. H. Hardy-ம் சேர்ந்துகொண்டார் . இன்னும் கொஞ்ச காலம் ராமனுஜன் இருந்திருந்தால் இந்த கூட்டணி எவ்வளவு அவிழ்க்க முடியாத கணித முடிச்சுகளை அவிழ்த்திருப்பார்கள் ! என்ற ஏக்கத்தை நம்மிடம் விட்டு செல்கிறது படம் .


Saturday, 7 May 2016

பிழைத்தது

    சாலையில் எதிர்படும் இறுதி ஊர்வலத்தில் தெளிக்கப்படும் ரோஜாவும் செவந்தியும் கலந்த வாடை அடி வயிற்றை சோர சொரக்க செய்யும் .மரணம் எப்போதும் ஒரு வித பயத்தை பதற்றத்தை நம்முள் விரவச்செய்கிறது . எல்லோரும் மரணத்தை நோக்கித்தான் நகர்ந்துக்கொண்டிருகிறோம் என்றாலும் கூட, முடிந்தவரை அது சார்ந்த சிந்தனைகளை பிரக்ஞையோடு தவிர்க்கிறோம். ஆனால் மரணம் சார்ந்த தத்துவ விசாரணையைத்தான் ஞானமடைதற்கான முதல் படியாய் கொடுக்கிறது இந்து மதம் . சக மக்களின் இறப்பை பார்த்த புத்தரில் தொடங்கி சகோதரனின் இறப்பால் ஞானமடைந்த J.கிருஷ்ணமூர்த்தி வரை மரணம் பற்றிய சுயவிசாரணைகள் பல மகான்களை கொடுத்துள்ளது.

  “செத்து பொழச்சவன்டா” என்று ஆர்ப்பரிக்கும் ஒரு  வார்த்தை உண்டு . உண்மையாகவே சாவை பார்த்து வந்தவர்கள் பாக்யவான்கள் பெரும் பேறு பெற்றவர்கள் . அது கொடுத்து செல்லும் படிப்பினை வேறு எதுவுமே கொடுக்கமுடியாது.Cricket -ல் ஒரு வீரர்  அதுவரை பொறுமையாய் சோபிக்காது ஆடிக்கொண்டிருக்க   , எதிரணி விட்ட ஒரு catch-க்கு பின் . அவருக்கு கிடைத்த ஒரு life-க்கு பின் அந்த  வீரரின் ஆட்டத்தின் போக்கு முற்றாக மாறுவதை கவனித்திருக்கிறீர்களா ! அதே ஆட்டக்காரர் அதே பந்துவீச்சாளர் அதே களம். எதுவுமே மாறவில்லை .அவர் அந்த ஆட்டத்தை எதிர்கொள்கிற  விதம் மாற எல்லாமே மாறிப்போகிறது . செத்துப்பிழைத்தவர்களின் வாழ்க்கையும் இப்படித்தான் மாறுகிறது . வாழ்க்கையை பார்க்கும் அடிப்படையே மாறிப்போவதால்.

  இந்த விஷயத்தைத்தான் உத்தம வில்லனில் கமல் பேச முற்பட்டார், நகைச்சுவையை கலக்க முனைந்து பேச வந்த பொருளின் வீரியம் விழலுக்கு இரைத்த நீராகியது. மனோரஞ்சனின் பாத்திரம் வரும் பகுதியை மட்டும் தனியே எடுத்து பார்த்தால் அது ஒரு காவியம் . "சாவுற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாகிவிடும்"என்ற சுஜாதாவின் வசனத்துக்கு முற்றாக வேறான நிலைப்பாட்டை மனோரஞ்சன் எடுப்பார் சாகும் நாள் தெரிந்த  பின் வாழும் நாட்களை எப்படி சொர்க்கமாக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபடுவார் . சண்டையிட்டு கொண்டிருந்தவரிடம் வலிய சென்று உறவை புதுப்பிப்பார் , தன் பெயர் சொல்லும் ஒரு படைப்பை உருவாக்கும் முயற்ச்சியில் இறங்குவார் .நாம் மனோரஞ்சனின் நிலையில் இருந்தால்  நம்முடைய   நாளை இன்று போலவே இருக்குமா ?

 இன்று படித்த P.S.ராமையாவின் "பணம் பிழைத்தது " என்ற சிறுகதை இறப்பை பற்றிய விஷயங்களை கிளறிவிட்டது . கடுமையாய் உழைத்து செல்வந்தரான  அருணாச்சல முதலியார் தன் கடைசிக்காலத்தில் காலனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப்பற்றிய கதை . கதை முடிந்த பின் அந்த அருணாச்சல முதலியாரோடு  நம்மை பலவாறு ஒப்பிட்டுக்கொள்ள தோன்றுகிறது . சாவை எதிர்கொள்கிறவர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் எதிர்கொள்வார்களா! செத்து பிழைத்தவர்கள் எல்லோரும் அப்படியே மாறிவிடுவார்களா என்பதற்கு அது அவர் அவரின் பக்குவத்தைப்போருத்தது என்று புடனியில் அடித்து சொல்கிறது இந்தக்கதை.




Sunday, 17 April 2016

காத்திருந்த கதை

தூரத்தில் வரும் தீப்பந்தங்களும்  சலசலப்பும் மழித்த தலையுடன் இருந்த சிஷ்யர்களின் கவனத்தை ஈர்த்தது . பந்தங்களின் ஒளி நெருங்க .நில்லுங்கள்! நில்லுங்கள் ! என்ற ஒலி இவர்களின் நடையையும் நிறுத்தியது . இருள் சூழ்ந்த இடம் ஒளிர வந்தவர்கள் அய்யா நீங்கள் இந்த வழியாக செல்லாதீர்கள் . இடப்புறம் சென்றால் மாற்றுப்பாதை இருக்கிறது அதுவழி சென்றால் அடுத்த கிராமத்தை அடையலாம் என்றனர் . அப்போது ஒளிப்போருந்திய அந்த மனிதர் முன்வந்தார் . அனைவரும் வணங்கினர் " அனால் அந்தப்பாதை 10 மைல் தூரம் அல்லவா இந்த வழி 3 மைல் கூட இறாதே” ஏன் சுற்றிச்செல்ல  சொல்கிறீர்  என்றார் .

     நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். இந்த 3 மைல் தூரம் முழுதும் காடுதான் அங்கு அங்குலிமாலா என்ற கொடூர ராட்சசன் இருக்கிறான் அவன் அங்கு வரும் மனிதர்களை கொன்று அவர்களின் எலும்புகளை மாலையாக்கிக்கொள்வான் . தயவு கூர்ந்து அவ்வழி செல்லாதிர்கள் என்றனர்.  . ஆசையை அறுக்க சொல்பவனிடம் உயிரின் மேல் ஆசைக்கொள்ள சொல்வது என்ன முரண் . புத்தர் சிரித்தார்.

     அனந்தாவைப்பார்த்து நீங்கள் எல்லோரும் மாற்றுவழியாக வந்து சேருங்கள் . நான் இவ்வழியாக வருகிறேன் என்றார் . சிஷ்யர்கள் மற்றும்  மக்கள் கண்ணீர் மல்க புத்தா நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எங்களுக்கு கொடுக்கக்கூடாது,உங்களின் இருப்பு இந்த உலக முன்னேற்றத்திற்க்கு மிக முக்கியம் .தயவுசெய்து முடிவை மாற்றுங்கள் என்று மன்றாடினார்  . எதையோ சொல்ல விழைந்த அனந்தா அவரின் பார்வையைப்பார்த்து புரிந்தவனாய் அனைவரையும் சமாதானப்படுத்தினான் . சில பந்தங்களை வாங்கிக்கொண்டு ,அவர் 3 மைல் கடப்பதற்குள் நாம் 10 மைல் தூரத்தை கடக்கவேண்டும் என்றபடி ஓட்டமும் நடையுமாக கிளம்பினர் .

மாற்று வழியாக கடந்து காட்டின் மறுஎல்லையை அடைந்துவிட்டார்கள். இருளில்  எந்த சப்தமும் இல்லை. ஓடிவந்ததால் இவர்களின் மூச்சு  தாறுமாறாக இறைப்பது மட்டும் கேட்டது . அனந்தாவிற்கு தாம் தவறு செய்து விட்டோமோ ,எப்படியாவது குருவை தடுத்திருக்கவேண்டும்  என்று எண்ணம் மேலிட்டது . கொஞ்ச நேரம் கழித்து சருகுகலின் சப்தம் கேட்டது . வழியில் விழி வைத்தனர் . புத்தர் எப்படி போனாரோ அப்படியே வந்துக்கொண்டிருந்தார் பின் அங்குலிமாலா தொங்கிய முகத்தோடு பணிவாய் நடந்து வந்துக்கொண்டிருந்தான் . புத்தரைத்தவிற அங்கு இருந்த அனைவரின் விழிகளிலும் நீர் வழிந்துக்கொண்டிருந்தது . அதன் பின் அந்தக்காட்டினுள் என்ன நடந்தது என்று புத்தரும் சொல்லவில்லை அங்குலிமாலவும் சொல்லவில்லை . சிஷ்யர்களும் கேட்கவில்லை .

    பின்னாட்களில் வந்த பல புத்த துறவிகள் அங்கு என்ன நடந்திருக்கும் என்று யூகத்தில் பல கதைகள் எழுதினர் . 200 க்கும் மேற்ப்பட்ட கதைகள் உள்ளன , அனால் இன்றுவரை அங்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது இனியும் தெரியப்போவதில்லை

 ப்யூர் சினிமா  -பேருரையில் மிஷிக்கின் சொன்னக்கதை


Memories of Murder ன் முடிவு போல இந்தக்கதையின் முடிவு மிரளச்செய்தது .நிச்சயமாக இது உலகின் ஆகச்சிறந்த கதை .இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இக்கதையின் சுவாரஸ்யம் குறையவே குறையாது . நாம்கூட அங்கு என்ன நடந்திருக்கும்  என்று ஒரு கதை உருவாக்கலாம்  . நாம் புத்தரைப்பற்றி எவ்வளவு புரிந்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப்பொருத்து அந்த கதையின் தன்மை நபருக்கு நபர் மாறுபடும்..அங்குலிமாலா பற்றி இணையத்தில் தேட தகவல்கள் கொட்டுகின்றன, இரண்டு படங்கள் கூட வந்துள்ளது. எப்படி இவ்வளவு நாள் இந்தக்கதையை தெரிந்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறேன் என்ற வருத்தம் ஏற்பட்டது . பின் யோசிக்க உலகின் ஆகச்சிறந்தக்கதை உலகின் ஆகச்சிறந்த கதைச்சொல்லியின் வழியாக என்னை வந்தடைய காத்திருந்திருக்கிறது  என்பது புரிந்தது . அதுவும் வருடத்தின் முதல்நாள் .

Saturday, 9 April 2016

ஜெயந்தி தியேட்டர் "நிறுத்தம்"


அடுக்ககம் எண்பைத்தைந்து லட்சம்.
என்றெழுதிய வண்ணப்பலகையின் கீழ் -பல
இறவாப்படங்களின் வசனங்கள் வருடிய சுவர்,
சுக்கு நூறாய்க்கிடக்கிறது கண்ணீர் சிந்த யாருமின்றி .
இல்லாமல் போனாலும் இன்னும் வாழ்கிறது
"ஜெயந்தி தியேட்டர் நிறுத்தம்" என்று சப்தமிடும்
நடத்துனர்களின் வாய்மொழியில்.
ஆண்டுகள் சில கடந்து அந்த நிறுத்தத்தில்
பெயர்ச்சொல்லி இறங்கும் யாரோ ஒரு அசலூர்க்காரனின்
தியேட்டர் எங்கே ? என்ற கேள்விக்குபதிலுரைக்கப்போகும்
எவனோ ஒருவனின் மனத்திரையில் என்ன ஓடும் !

Thursday, 31 March 2016

Lawrence of Arabia / 1962 / English


   


       அரேபிய உடை உடுத்திய ஒரு ஆங்கில கனவானின் புகைப்படம் அனேக திரைப்பரிந்துரைகளில் பார்த்ததுண்டு. சமீபத்தில் தான் T. E. Lawrence-பற்றிய பத்து விஷயங்கள் என்ற பத்தியியை படிக்கும்போதுதான் அது முதல் உலகப்போர் காலக்கட்டத்தில் வாழ்ந்த பிரிட்டன் தளபதி T. E. Lawrence-ன் சரிதம் என்பது தெரிந்தது. அரேபியாவை கைவசப்படுத்த அனுப்பப்பட்டவர் அவரிடம் எதிர்ப்பர்த்தற்க்கு மேல் பல காரியங்களை சாதித்து பிரிட்டனின் போர் வரலாற்றில் முக்கியமானவராகிப்போனவர் என்பது படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகரித்தது . Lawrence-ன் வாழ்க்கை வரலாறு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது ,பிரிட்டனுக்கு துருப்புச்சீட்டாய் தேவைப்பட்ட துருக்கியின் கைவசமிருந்த முக்கிய துறைமுகத்தை, எப்படி இந்த எளிய மனிதன் கைப்பற்றினார் என்பதே கரு .அவர் பெரும் வீரர் என்றெல்லாம் சொல்லமுடியாது அனால் மனிதர்களை கையாளும் வித்தை கைவரப்பெற்றவர் ஆதலால் அந்த பாலைவன மண்ணில் சென்ற இடமெல்லாம் வெற்றியே கிடைத்திருக்கிறது .


    Lawrence-ன் முடிவு தெரிந்த நமக்கு திரைப்படத்தின் முதல் காட்சியை அங்கிருந்தே தொடங்கி படத்தில் மொத்தமும் எதார்த்தமே என்று படத்துக்குள் இழுக்கிறார் இயக்குனர். தனிமனித துதிப்பாடலும் நாயகனின் நேர்மறை விஷயங்களை மட்டுமே சொல்லும் சரித்திர படங்களிலிலிருந்து முற்றாக தனித்து நிற்க்கிறது . அவர் செய்த கொலைகளையும் காட்சிப்படுத்துகிறர்கள் . அவர் நல்லவர்மட்டுமே என்று எங்கும் நிறுவ முயற்சிக்கவில்லை .50 வருடத்திற்கு முன் எப்படி இந்த போர் காட்சிகளை எடுத்தார்கள் என்பது ஆச்சர்யமளிக்கிறது அவ்வளவு பிரம்மாண்டம். போர் படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த 3.15 மணிநேர படத்தை விரும்புவர். இதுவரை எடுக்கப்பட்ட உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றாக வைக்கிறார்கள் பல இயக்குனர்கள் . Martin Scorsese ,Steven Spielberg போன்ற இயக்குனர்கள் தாங்களின் inspiration ஆகா இந்த படத்தைக்குறிக்கிறார்கள்.

செம : தன் கையால் கொடுத்த உயிரை தானே பறிக்க நேரிடும் காட்சி.

பெயருக்காகவே பார்க்கலாம் :  Peter O'Toole 

பெற்றவை : Academy Awards : 7 ,Golden Globe Awards : 6

Trailer :https://www.youtube.com/watch?v=a3tuBFHuYV4 

Tuesday, 22 March 2016

மம்முசாமியும் - காமதகனமும்

     காலையில் பல்துலக்குதல் அப்போதெல்லாம் கடினமான வேலை,காரணம் அது முடிந்தபின் அவர்கள் கொடுக்கப்போகும்  பாலும் முட்டையும் கலந்த ஒரு வஸ்த்துவின் மேல் உள்ள அசூகை. அதனால் மரபெட்டியில் ஊறிய கடலை புண்ணாக்கிற்கு மேல் தூவளாக உளுந்து பொக்கை போட்டு பல்துலக்காமல் காலை உணவை உண்டுக்கொண்டிருக்கும் மாடுகளையோ கிளுவை தழைகளை எம்பி எம்பி இழுத்து தின்றுக்கொண்டிருக்கும் ஆடுகளையோ வாய்ப்பார்த்துக்கொண்டிருந்தால் நேரத்தைக்கடத்தலாம் .எப்படி இருந்தாலும் அரைமணி நேரத்தில் அடுபங்கரையிலிருந்து  "எங்கடா அவன் " என்ற சப்தம் வரும் . சரண்டர் ஆகி கண்முடி  குடிப்பதைத்தவிற வேறு வழியில்லை. அனால் காமட்டி  நாட்களில் மட்டும் பத்து நொடிகளில் பல்துலக்கி பரவசத்துடன் உள்செல்வோம்.சின்னாத்தா வாங்கி வைத்திருக்கும் சிறு சுண்டலை தின்பதற்க்கு.  காலையிளம்காட்டியிலும் பச்சைத்தண்ணி பல்லில் படாமல் நேற்று இரவு வாங்கிய அந்த சுண்டலை தின்பது சொர்க்கம் . (மோதகம்,கொழுக்கட்டை,தாம்பல பனியாரம்,ஒரப்படை  இவைக்கும்  இந்த சொர்க்கப்பட்டியலில்இடமுண்டு).சில பதார்த்தங்களின் சுவை பதார்த்தத்தின் வயது, அதை தருபவர்கள் பெறுபவர்களின் மனநிலை ,புரிதல் மட்டுமல்லாதுஅது நிகழும் காலக்கட்டத்தைப்பொறுத்தும். சுவைக்கூடிவிடுகிறது. அந்த சுண்டலும் அப்படித்தான்.


       காமட்டி நடப்போறாங்கனா தெருவில் உள்ள குழந்தைகள் குஷியகிவிடுவோம். காரணம் அதிகநேரம் விளையாடலாம். அதுநாள்வரை ஆறுமணிக்கு வீட்டில் ஆஜராகிவிடவேண்டும், விளக்குவச்ச பிறகு வெளியில் விளையாடக்கூடாது அனால் காமட்டிக்காலங்களில் எட்டு மணிவரை தெரு விளக்கு வெளிச்சத்தில் விளையாடலாம்.  காமட்டி என்று எங்களால் அழைக்கப்பட்டாலும் அது காமதகனவிழா அல்லது காமன்விழா.இதைப்பற்றிய விவரங்களை தேடினால் இவ்விழா புகார் நகரில் சங்ககாலத்தில் கொண்டாடப்பட இந்திரவிழாவின் காலத்தியது என்கிறார்கள். மிகப்பழமையான விழா இன்றும் காவிரியின் தென் கரையில் சில கிராமங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. தெருக்களின் முச்சந்தியில் கூரைகளற்ற  சிறு மேடை அதில் பிரதிஷ்டை செய்யாமல் வெறுமனே வைக்கப்பட்ட சிறு லிங்கமும் எதிரே சிறு நந்தியும் இருக்கும் . மம்முசாமி ,மம்முதையா என்று அவரை  நாங்கள் விளித்தாலும் அங்கு வீற்றிருப்பது மன்மதனும் ரதியும். எல்லா தெருக்களின் தொடக்கமும் முடிவும் ஒரு மன்மதன் மேடை இருக்கும் . ஒரு தெருவுக்கு ஒரு கோவில் என்று வைத்துக்கொண்டார்கள். நாங்கள் ஏறி  விளையாடும் சிறு யானை போன்ற அந்த உண்டியலும் அமானுஷ்யமான  அரசமரமும் பெரு வெளியாய் தெரியும் பரைங்யா குளமும் கீழத்தெரு மம்முதையாவை மற்றவர்களிலிருந்து தனித்துக்காட்டும்.

      வெள்ளையாக்கூட கரும்பு இருக்குமென்பதை முதன்முதலில் பார்த்தது ஒரு காமட்டி நடும்போதுதான். கரும்பை நட்டு ஒரு வரட்டியை  அதனோடு இணைத்து காமட்டி நடும் நிகழ்வு நடக்கும்,  அன்றிலிருந்து   ஒவ்வொரு நாளும் ஒருவர் உபயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் .  ஏழுமணிக்கு மேல்தான் எல்லாரும் வருவார்கள் , நாங்கள் பள்ளி விட்டதிலிருந்து அங்குதான் சுத்திக்கொண்டிருப்போம். 8 மணி போல தார்ப்பாய் விரிப்பார்கள்  உபயதாரர் அபிஷேகப்பொருட்களும்  சுண்டல் பாத்திரத்துடனும்  வர . அபிஷேகம் முடிய அரைமணிநேரம் ஆகும் . அபிஷேகத்திற்கு பிழிந்த கொளருஞ்சி பழமும் பூ மாலையும் மூடி வைத்த சுண்டலும் கலந்த ஒரு சுகந்தமான வாடை எப்ப சுண்டல் கொடுப்பார்கள் என்ற ஆவலை மேலும் அதிகரிக்கும் . அடுத்த நாள் உபயம் யார் ஏற்றுக்கொள்கிரர்களோ அவர்களுக்கு வெற்றிலை சீவல் பட்டி அச்சாரமாய்க்கொடுத்தப்பின்  . சுண்டல் விநியோகிக்க தொடங்குவர் , அடித்துப்பிடித்து ஒரு சிறு களேபரத்தை உருவாக்குவோம் .எங்கள் சிறுகையில் வாங்கினால் கொஞ்சம்தான் கிடைக்குமென்று எடுத்துச்சென்ற பெரிய  டம்ளரில் வாங்குவோம் , இரண்டாம் முறை கையை விட்டால் "டேய் அதே கை " என்ற அதட்டலுடன் அளவாய் சுண்டல் தருவர் .

  பத்து நாட்களும் கொண்டாட்டமாய் சென்று இறுதி நாள் காமட்டி கொளுத்தும் தினம் வரும். அன்று  இரும்பு தடுப்புகள் அகற்றி பக்கத்தில் வைக்கோல் போர் வைத்தல்  . நாடகங்களுக்கு மேடை அமைத்தல் என்று காலையிலிருந்து அந்த இடம் பரபரப்பாயிருக்கும். மாலையில் தெருவினர்  மாவிளக்கு இடுவார்கள் கொழுக்கட்டை படைப்பார்கள் ,சிலர் வேண்டுதல் நிறைவேறியதை குறிக்கும் விதமாக அந்த நபரின் மேலேயே மாவிளக்கிடுவர்.நம்மை பார்ப்பவர்கள் எல்லாம் கையில் ஒரு கொழுக்கட்டையை திணித்துச்செல்வர் . ஒரே  நேரத்தில் திணுசு திணுசாய் பலவித  கொழுக்கட்டையை  சுவையறியும் வாய்ப்பு அன்று மட்டுமே கிடைக்கும். சிலர் வேண்டுதலுக்காய்  வாழைத்தாரை எடுத்து வந்து எல்லாருக்கும் வாழைப்பழம் கொடுத்துக்கொண்டிருப்பர். இதற்கு மேல் நம்மால் சாப்பிடமுடியாது என்ற நிலையில் தப்பித்து வீட்டிற்க்குள் நுழைந்தால் அங்கொரு கை தட்டு நிறைய கொழுக்கட்டையை நீட்டும் . இதற்கு அவர்களே தேவலாமென்று U-டர்ன் போட்டு பிய்த்துக்கொண்டு திரும்புவோம்.

      ஆரம்ப காலங்களில் அந்த இரவு,  நாடகங்கள் நடத்தப்பட்டன .என் நினைவில் ஒரு அரிச்சந்திராவும் ஒரு லவ குசாவும் மங்கலாய் இருக்கிறது. பின் அவை திரைகள் கட்டி காட்டும் படங்கலாகிப்போனது அங்கு போடப்படும் படங்கள் ஒன்று கூட முழுதாய் பார்த்ததில்லை ,படம் துவங்கி பத்து நிமிடத்தில் கொழுக்கட்டை தின்ற களைப்பில் தூங்கிபோயிருப்போம். நடு இரவில் இரண்டு சிலைகளையும் அரசமரத்தடிக்கு கடத்திவிட்டு ,அந்த கரும்பு நட்டிருக்கும் மேடையில் வைக்கோல் வைத்து தீவாரதனை காட்டி  அதனுள் கற்பூரம் இடப்படும் .தூங்கிபோயிருக்கும்  நான் இந்த நிகழ்வை பெரும்பாலும் கண்டதில்லை.அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஏதோ ஞாபகம் வந்தவனாய் வேகமாக வாசல் நோக்கி ஓடி பார்த்தால் மம்முசாமி இருந்த இடம் சிறு  சாம்பல் மேடாய் கிடக்க  ஏனோ சோகமாக இருக்கும் .
    அடுத்த இரு நாட்களுக்கு அப்பகுதியை யாரும் சீண்ட மாட்டார்கள் , நாடக மேடை அவிழ்க்கும் வரை அதை எங்களுக்கு விளையாட  கிடைத்த பெரிய பொம்மையாய் சுற்றி சுற்றி வருவோம் . மூன்றம் நாள் அந்த இடம்  சுத்தம் செய்யப்பட்டு “மூணாம்குழி மூடுறது” என்ற மன்மதனை உயிர்ப்பிக்கும் நிகழ்வு  நடக்கும். அபிஷேகம் முடித்து சுண்டல் கொடுத்து சுபமாக முடிப்பர். அதன் பின் எப்பொதும் போல மம்முசாமி  தன் இடத்தில் அமர்ந்து அருள்பாலிப்பார்.வெள்ளி - செவ்வாய் தவறாமல் அவருக்கு விளக்கிடுவர் மக்கள் . ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது உடல் நிலை சரியில்லை என்றால் பல பாட்டிகளும் அம்மாக்களும் மம்முதையா என்று இன்றும் முதலில் கூப்பிடுவது அவரைத்தான். வெளியூருக்கு செல்லும் முன் அவர் முன் இருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டு,புது சட்டையுடன் அந்த மண்ணில்  விழு என்று அதட்டும் அம்மாக்களை ஏமாற்றி விழுந்தும் விழாமலும் எழும் வித்தை தெரிந்த பிள்ளைகள் நாங்கள் காரணம் எங்களுக்கும் அவருக்குமான புரிந்துணர்வு அப்படி.கர்பகிரகத்தில் நுழைவது சிலைகளை தொடுவதில்லாம் முடியாத காரியம் என்ற நிலையில் மம்முசாமி தோழனாய்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்,  அவரை தொடலாம் விளையாடலாம், அவரை நகர்த்தி காமட்டி நடும் குழியில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். எங்களை கோபித்துக்கொள்ளமாட்டார்.

      அவர் ஏன் கிராமத்தின் எல்லா தெரு முனையிலும் இருக்கிறார் . ஏன் எப்பொதும் அவரை பார்க்கும் படி வைத்திருக்கிறார்கள்,இறைவன் காமனை எரித்த புராணம் மூலம் என்ன சொல்ல முனைகிறார்கள்  என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்க அன்பு ,காதல் ,காமம் பற்றி பல ஆழ்ந்த கருத்துகள் தோன்றுகின்றன. இன்னொரு முறை மம்முசாமியை கடக்கும் பொது அவரை லிங்கமாக ,சிவனாக பார்க்காமல் . அங்கு காதல் தெய்வங்கள் ரதி-மன்மதன் அமர்ந்திருப்பதாய் பார்த்தால்   நமக்கு அவர்கள் சொல்ல விழையும்  குறியீடுகள்  விளங்கலாம் .

ஆதி வரி

பங்குனி வெய்யிலில் சிக்னலில் 
பச்சைக்காக காத்திருக்கும் மடிப்பிடையாள். 
எங்கோ நிகழவிருக்கும் களவிக்கும் கவிதைக்கும் 
முதல் வரியை கொடுத்துவிட்டுச்செல்கிறாள். 
அவளை அறியாமலேயே !

(நேற்று மத்தியகைலாஷ் சிக்னலில் சிக்கியது )

Tuesday, 8 March 2016

பிரம்மாண்டமும் ஒச்சமும் :


   செல்லுலாய்ட் படம் பார்த்திருப்போம். மதராசிகளும் வங்காளிகளும் அசையும் படங்களை எடுக்கும் பொது நாம் ஏன் எடுக்கக்கூடாது என்று மலையாளத்தின் முதல் படத்தினை எடுக்கும் முயற்சியில் தன் சொத்துகளில் பாதியை இழப்பார் J.C. டேனியல். அந்த கால ஜாதிய பிரச்சனையால் முதல் படம் முதல் காட்சியுடன் பெட்டியில் முடங்குகிறது . பின் பல் மருத்துவம் படித்து மருத்துவராகிறார் ,சிறு clinic-நடத்துகிறார் , இருந்தும் கலை ஆசை ஓயவில்லை , மனைவியின் நகைகளை விற்று மதராஸ் சென்று மீண்டும் படம் எடுக்க முயற்சிக்கிறார் இம்முறை சிலரால் ஏமாற்றப்பட்டு , அந்த மன உலைச்சலில் வாழ்க்கையே வெறுத்து ஒரு தமிழக குக்கிராமத்தில் வறுமையில் தன் மீதி வாழ்வை கழிக்கிறார் .

   படத்தில் ஒருக்காட்சி வரும் 1965 -முதல் தேசிய விருதை "செமீன் " வென்றதை ரேடியோ பின்புலத்தில் சொல்ல பெட்டிக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு எதுவுமே தெரியாதது போல தளர்ந்த நடையில் அந்த முதல் படத்தை எடுக்க முயன்ற கிழவர் சென்றுகொண்டிருப்பார் .இந்தப்படம் J.C. டேனியல் என்று தமிழ்படுத்தப்பட்டு அவர்  எடுத்த முதல் படம் போலவே பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கிறது.

அவர்தான் அந்த முதல்படத்தை எடுத்தார் என்பதை நிரூபிக்க சம காலத்தில் ஒரு இயக்குனர் பெரும்பாடுபடுவார், இறுதியில் அவரை கவுரவிக்க அரசு சம்மதிக்கும் பொது அவர் இருக்கமாட்டார் இறந்திருப்பார் . இந்த படத்தை பார்க்கும் போதும் பார்த்த பின்னும் சி.சு.செல்லப்பா வை J.C.டேனியலுடன் மனது ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது, வாடிவாசல் படித்திருந்தாலும் அவரைப்பற்றி பெரிதாக தெரியாது . எழுத்து என்ற ஒரு பத்திரிக்கையை நடத்தினார் என்பதும் , புத்தகங்களை தலையில் சுமந்து பள்ளி கல்லூரிகளில் விற்றார் என்பதும் ஒருக்கட்டத்தில் மனைவியின் நகைகளை விற்று புத்தகங்களை வெளியிட்டார் என்ற சில தகவல்கள் மட்டுமே தெரியும் . இருந்தும் அந்த ஒப்பீடு நடந்துக்கொண்டே இருந்தது .

   பெரிய புத்தகங்களை வீராப்பாக எடுத்து பாதியில் தொக்கி நிற்கும் கேட்ட பழக்கத்தை இந்த புத்தாண்டில் இருந்து விட எண்ணி 150 பக்கங்களுக்கு மிகாத புத்தகங்களை மட்டுமே எடுப்பது என்று சேகாரங்களை தேடினால் முதலாவதாக கையில் சிக்கியது " பிரம்மாண்டமும் ஒச்சமும் - சி சு செல்லப்பா படைப்புலகம் "படித்துமுடித்தபின் இந்த மனிதனைப்பற்றி கேள்விப்பட்டவை மிகக்குறைவு என்பது விளங்கியது . இந்த புத்தகம் அவரைப்பற்றிய நினைவுகள் விமர்சனங்கள் என்று அவரைப்பற்றிய கருத்துகளின் தொகுப்பு.

    மாற்றுக்கருத்தும் விமர்சனங்களும் நல்ல இலக்கியத்தின் அடிப்படை என்ற நம்பிக்கையுடையவர் , தான் எழுதிய ஒரு எதிர் விமர்சனத்தை ஒரு பத்திரிக்கை பிரசுரிக்க மறுக்க , "எழுத்து " என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார் . பின்நாட்களின் பெரும் ஆளுமைகளாக திகழ்ந்த அனைவரும் "எழுத்தில்" எழுதுகின்றனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் "எழுத்து" மிகப்பெரும் திருப்புமுனையாக அமைகிறது . வீட்டுக்கு வரும் இளம் எழுத்தாளர்களிடம் வகை தொகை இல்லாமல் இலக்கியம் பேசுகிறார் , இல்லாத நிலையிலும் இருப்பதை வைத்து வருபவர்களுக்கு உணவிடுகிறார். வறுமை வாட்ட ஒரு காட்டத்தில் "எழுத்து " வெளிவருவது சிரமத்திற்கு உள்ளாக மனைவியின் நகைகளை விற்று மீண்டும் பிரசுறுக்கிறார். புத்தகங்களை துணி மூட்டை போல சுமந்து கல்லூரி பள்ளிகளில் விற்கிறார் . புத்தகங்கள் போட காசு வேண்டும் என்று காகித பொம்மைகளை செய்து விற்கிறார் . எதை இழந்தாலும் தன்மானத்தையும் தமிழார்வத்தையும் கடைசி வரை தன்னோடு வைத்திருக்கிறார் அந்த காந்தியவாதி . பின்நாட்களில் அவரைப்பற்றி தெரிந்தவர்கள் அவருக்கு தியாகிகள் பென்ஷன் பெற முயற்சிக்க அதற்கும் மறுக்கிறார் . தமிழ் இலக்கியத்தின் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் தன் வாழ்வில் பெரிதாக திருப்பங்கள் ஏற்படுத்திக்கொள்ளாமல் மறைகிறார் .


அவரை சந்தித்தது பற்றி எஸ் ராமகிருஷ்ணன் இந்தக்கட்டுரையில் எழுதியிருக்கிறார் .

http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=29

   அதில் செல்லப்பாவின் கடைசிக்காலங்களில் அவருக்கு விளக்கு விருது கிடைத்ததை சொல்ல எஸ்.ரா வும் அவர் நண்பரும் செல்கிறார்கள். " விருது வங்குறதுல பெருசா விருப்பம் இல்லப்பா , அதோட கொஞ்சம் காசு கொடுப்பாங்கள அதுல ஒரு புத்தகம் போடலாம் பாரு " என்று சொல்லிவிட்டு தன்னிடம் உள்ள எழுத்துப்பிரதிகளை எடுத்துக்காண்பிக்கிறார். P.S.ராமையா பற்றி ஒரு திறனாய்வை காண்பிக்கிறார் . அப்போது இடைமறிக்கும் நண்பர் உங்கள் சிறுகதை வேளியிடலாமே என்று சொல்ல . இல்ல இல்ல P.S.ராமையா புத்தகம் முதல்ல வரணும் அவரு எவளவு பெரிய ஆளுமை அவர பற்றி அடுத்த சந்ததிகளுக்கு தெரியனும் என்று சொல்கிறார் .

   இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று மிரள வைக்கிறார் இவர் . இவரை இதுவரை தெரிந்துக்கொள்ளாமல் இருந்தது நம் துர்பாக்கியம் . . தன் முன்னோடி பற்றிய விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற அவரை , அவரைப்பற்றிய விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் . அவரது புத்தகங்களை வாங்கி படிப்பது மட்டுமே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

Saturday, 5 March 2016

Where Do We Go Now? / 2011 / Lebanese


 

      மதமும் மதம் சார்ந்த பிரிவினைகளும் அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் தேவையாய் இருக்கலாம் , சாதாரண மனிதர்கள் என்றும் அந்த பிரிவினைவாதங்களிலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்கள் அவர்கள் என்றுமே கூடி இருக்கவே விரும்புகிறார்கள் . நாட்டில் மத வன்முறை பரவிக்கொண்டிருக்கும் ஒரு காலக்கட்டத்தில் அதிலிருந்து விலகி, கூடி இருக்க விரும்பும் லெபனானிய கிராமத்து பெண்களின் கதை .


    அந்த கிராமத்தில் பாதிக்கு பாதி பேர் இஸ்லாமிய - கிறிஸ்துவ மக்கள் , மசூதியும் -தேவாலயமும் பக்கத்துக்கு பக்கத்தில் அமையப்பெற்ற ஊர் . உண்மையிலேயே மாமன் மச்சானாக வாழ்ந்து வரும் குடிகள் . கடந்த காலங்களில் கணவன் , சகோதரன் , மகன் , தகப்பன் என்று அந்த பெண்கள் இழந்த உறவுகளின் மதிப்பும் அந்த உயிரிழப்புகளால் அனுபவித்த வலியையும் உணர்ந்தவர்கள், இதுவரை பார்த்த கலவரங்களும் ,இழந்த உயிர்களும் போதும் .இனி ஒரு மதக்கலவரம் அங்கு பரவக்கூடாது என்று எடுக்கும் பிரயத்தனத்தை நகைச்சுவையாய் காட்சிப்படுத்துகிறார் இயக்குனர் . அந்த பெண்களுக்கு வாழ்தல் மட்டுமே போதும் என்கிறார்கள் அவர்களின் படி வாழ்தல் என்றால் சக மனிதர்களுடன் கூடி இருத்தல், அந்த வாழ்தலுக்காக எதையும் இழக்கததயாராய் இருக்கின்றனர் . அது மதமாய் இருந்தாலும் சரி !


    மூன்று காட்சிகளில் சில நொடிகள் சில துளி இரத்தங்கள் மட்டுமே காட்டப்படுகிறது . மற்றப்படி ஒரு காட்சியில் கூட கலவரத்தையோ வன்முறைக்கட்சிகளையோ காட்டவில்லை .இருந்தும் அந்த மண்ணில் நடந்துகொண்டிருக்கும் வன்முறையின் வலியையும் அந்த மக்களின் நிர்கதியற்ற நிலையையும் முழுவதுமாக நம்மை உணரச்செய்கிறது இந்தப்படம் . முக்கியமாக குடும்பத்தைக்காட்டிலும் ஊர்மக்கள்தான் முக்கியம் என அந்த ஒரு தாய் செய்யும் காரியங்கள் . வன்முறையே காட்டமல் வன்முறையின் தாக்கத்தை மட்டும் நம்மை உணர செய்யும் இந்த ஒரு விஷயத்தில் இயக்குனர் படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்கிறார் . இயக்குனர் ஒரு லெபனானிய பெண் என்பதால் இந்த இரசவாதம் இயல்பாய் வந்ததா என்று தெரியவில்லை , மதபிரிவினைவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட படங்களில் இது முக்கியமானப்படமாகிறது . இது comedy- படமா இல்லை serious- படமா என்ற குழப்பம் படம் நெடுகிலும் நம்முடன் பயணிக்கிறது . காரணம் முழுக்க முழுக்க நகைச்சுவை நிரம்பி வழிந்துகொண்டிருந்தாலும் படம் பேசும் பொருளும் அது நம்மிடம் கடைசியாய் இட்டு செல்லும் கேள்விகளும் கனமானவையாய் இருக்கிறது .


செம : அந்த ஒரு தாய் ஊர் மக்களை காக்க எடுக்கும் முடிவுகள் , நாயகி மொழி பெயர்ப்பாளராகம் காட்சி

பெயருக்காகவே பார்க்கலாம் : Nadine Labaki

விருதுகள் : பல விருது விழாக்களில் கலந்துகொண்டுருக்கிறது Cannes Film
Festival 2011 ஆண்டின் François Chalais Prize விருதை பெற்றுள்ளது

  

Saturday, 27 February 2016

வண்ண வேட்டியும் வளைய வரும் சலங்கையும்




     தொடராக கட்டியிருந்த டியுப்   லைட்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்லும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்லும் பாதையை  நினைஊட்டியது .அந்த இருண்ட தெருவில் நடக்கும் போதுதான் நாம் நம்மை அறியாமல் விருப்பத்தோடு ஒரு குப்பத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது . இதுதான் அந்த கலக கலைஞனின் வெற்றி. வாசலில் Parking-ல் இருந்தவர்களிடம் இன்னும் - பாடி முடிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு உள்ளே சென்றால் திறந்த மணற்பரப்பில் ஒரு மேடையில் பின் புலமாக ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலும் நிறுத்திவைக்கப்பட ஒரு கட்டுமரமுமாக இருக்க பாரத நாடிய நிகழ்சி நடந்துக்கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டே நகர பக்கத்தில் ஒருவர் பழைய நியுஸ் பேப்பரில் பஜ்ஜியை பரவசத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். உற்று கவனிக்க அந்த கலக கலைஞன்தான்அது . .ஒரு தாயையும் குழந்தையையும் வந்து செல்பி எடுத்து சென்றனர்

 பரதநாட்டியத்தை நம்மால் புரிந்துக்கொள்ளமுடியாவிட்டாலும் நன்றாகவே இருந்தது . நிகழ்ச்சியை குப்பத்து குழந்தைகள் அழகாக உரையாடல் போல தொகுத்து வழங்கினர் . பின் வெள்ள நேரத்தில் நம்மை காத்தருளிய துப்புறவு தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர், அமர்ந்திருந்த அனைவரையும் எழுந்து நின்று கரக்கொஷத்தை எழுப்ப சொன்னார் T.M.கிருஷ்ணா . மேடையில் நின்ற அந்த  துப்புறவு தொழிலாளர்களுக்கு  வெட்கமும் பெருமிதமும் ஒரு சேர முகத்தில் முட்டிக்கொண்டு நின்றது மகிழ்வாய் இருந்தது .

பின் ஆவலுடன் காத்திருந்த ரகு வந்தார் , வண்ண வேட்டிக்கு மாறாக லிவிஸ் ஜீன்சில் வந்திருந்தாது நமக்கு மனக்குரையாய் இருந்தது . காலில் சலங்கையை கட்டியதும் அந்த குறை நீங்கிற்று . வணக்கம் என தொடங்கினார் அரசியல்வாதிகல்போல ஆங்கிலத்துக்கு மாறாமல் கொஞ்ச நேரம் தமிழில் பேசி ஆச்சர்யப்படுத்தினார் தமிழில் ஒரு படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருப்பதகவும் அதனால் கொஞ்சு  தமிழ் என்றார் . பின் ஆங்கிலத்திற்கு மாறியவர் TMK-வை தன் மொழிபெயர்ப்பாளராக வைத்துக்கொண்டார் . அந்த இருபெரும் கலைஞர்கள் விளையாட்டாக சம்பாஷித்துக்கொண்டதே ஆனந்தமாக இருந்தது .
ஒவ்ஒரு பாடலையும் விளக்கம் சொல்லிவிட்டு Gud Gudiya வில் தொடங்கினார்,  . மதன் கார்கி எழுதிய "அம்மா" பற்றிய  ஒரு தமிழ் பாடலை பாடினார் . தமிழில் இதுவரை வந்த அம்மா பாடல்களில் ஒரு முக்கியமான இடத்தை அந்த பாடல் நிச்சயம் பிடிக்கும்  . Jag Changa பாடலில்  அதகளம் பன்னினார் ,அமர்ந்திருந்த ஒரு பாட்டி ஆட ஆரம்பித்துவிட்டார் அவ்வளவு அதிர்வை இசையில் உமிழ்ந்தார் . இறுதியாக மண்ணின் மைந்தராய் Mysore Se Aayi - ல் மங்கலம் பாடினார். பின் பேசிய TMK இந்த விழாவிற்கு சென்ற ஆண்டு அதிகம் பொருளுதவி செய்தது Ragu dixit -என்பதை அன்போடு நினைவுகூர்ந்தார் ,இவர் நல்ல இசை கலைஞர் என்பதைக்காட்டிலும் நல்ல மனிதர் என்பது தனக்கு மகிழ்வு என்றும் குறிப்பிட்டார்.


ஒரு சில  நிகழ்ச்சிகள்தான் தனக்கு மன நிறைவைத்தரும் என்றும் இந்த நிகழ்ச்சி அதில் ஒன்று என்றும் ரகு கூறினார்  . நமக்கும் அப்படித்தான் இருந்தது காரணத்தை யோசித்தால் . எப்போதும் அலங்கரித்த மேடைச்சுவருக்கும் நமக்கும் இடையேதான்   இசைக்கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள், முதல் முறையாக கிழே கடல் மணலும் மேலே இருண்ட வானமும் இருக்க ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் நமக்கும் இடையே நின்று அவர்கள் இசையை வழங்கியது முற்றிலும் மாறுப்பட அனுபவமாக இருந்தது.

https://soundcloud.com/trdp/8-mysore-se-aayi-wav 

https://soundcloud.com/trdp/4-gudugudiya-sedi-nodo-wav