Tuesday, 22 March 2016

மம்முசாமியும் - காமதகனமும்

     காலையில் பல்துலக்குதல் அப்போதெல்லாம் கடினமான வேலை,காரணம் அது முடிந்தபின் அவர்கள் கொடுக்கப்போகும்  பாலும் முட்டையும் கலந்த ஒரு வஸ்த்துவின் மேல் உள்ள அசூகை. அதனால் மரபெட்டியில் ஊறிய கடலை புண்ணாக்கிற்கு மேல் தூவளாக உளுந்து பொக்கை போட்டு பல்துலக்காமல் காலை உணவை உண்டுக்கொண்டிருக்கும் மாடுகளையோ கிளுவை தழைகளை எம்பி எம்பி இழுத்து தின்றுக்கொண்டிருக்கும் ஆடுகளையோ வாய்ப்பார்த்துக்கொண்டிருந்தால் நேரத்தைக்கடத்தலாம் .எப்படி இருந்தாலும் அரைமணி நேரத்தில் அடுபங்கரையிலிருந்து  "எங்கடா அவன் " என்ற சப்தம் வரும் . சரண்டர் ஆகி கண்முடி  குடிப்பதைத்தவிற வேறு வழியில்லை. அனால் காமட்டி  நாட்களில் மட்டும் பத்து நொடிகளில் பல்துலக்கி பரவசத்துடன் உள்செல்வோம்.சின்னாத்தா வாங்கி வைத்திருக்கும் சிறு சுண்டலை தின்பதற்க்கு.  காலையிளம்காட்டியிலும் பச்சைத்தண்ணி பல்லில் படாமல் நேற்று இரவு வாங்கிய அந்த சுண்டலை தின்பது சொர்க்கம் . (மோதகம்,கொழுக்கட்டை,தாம்பல பனியாரம்,ஒரப்படை  இவைக்கும்  இந்த சொர்க்கப்பட்டியலில்இடமுண்டு).சில பதார்த்தங்களின் சுவை பதார்த்தத்தின் வயது, அதை தருபவர்கள் பெறுபவர்களின் மனநிலை ,புரிதல் மட்டுமல்லாதுஅது நிகழும் காலக்கட்டத்தைப்பொறுத்தும். சுவைக்கூடிவிடுகிறது. அந்த சுண்டலும் அப்படித்தான்.


       காமட்டி நடப்போறாங்கனா தெருவில் உள்ள குழந்தைகள் குஷியகிவிடுவோம். காரணம் அதிகநேரம் விளையாடலாம். அதுநாள்வரை ஆறுமணிக்கு வீட்டில் ஆஜராகிவிடவேண்டும், விளக்குவச்ச பிறகு வெளியில் விளையாடக்கூடாது அனால் காமட்டிக்காலங்களில் எட்டு மணிவரை தெரு விளக்கு வெளிச்சத்தில் விளையாடலாம்.  காமட்டி என்று எங்களால் அழைக்கப்பட்டாலும் அது காமதகனவிழா அல்லது காமன்விழா.இதைப்பற்றிய விவரங்களை தேடினால் இவ்விழா புகார் நகரில் சங்ககாலத்தில் கொண்டாடப்பட இந்திரவிழாவின் காலத்தியது என்கிறார்கள். மிகப்பழமையான விழா இன்றும் காவிரியின் தென் கரையில் சில கிராமங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. தெருக்களின் முச்சந்தியில் கூரைகளற்ற  சிறு மேடை அதில் பிரதிஷ்டை செய்யாமல் வெறுமனே வைக்கப்பட்ட சிறு லிங்கமும் எதிரே சிறு நந்தியும் இருக்கும் . மம்முசாமி ,மம்முதையா என்று அவரை  நாங்கள் விளித்தாலும் அங்கு வீற்றிருப்பது மன்மதனும் ரதியும். எல்லா தெருக்களின் தொடக்கமும் முடிவும் ஒரு மன்மதன் மேடை இருக்கும் . ஒரு தெருவுக்கு ஒரு கோவில் என்று வைத்துக்கொண்டார்கள். நாங்கள் ஏறி  விளையாடும் சிறு யானை போன்ற அந்த உண்டியலும் அமானுஷ்யமான  அரசமரமும் பெரு வெளியாய் தெரியும் பரைங்யா குளமும் கீழத்தெரு மம்முதையாவை மற்றவர்களிலிருந்து தனித்துக்காட்டும்.

      வெள்ளையாக்கூட கரும்பு இருக்குமென்பதை முதன்முதலில் பார்த்தது ஒரு காமட்டி நடும்போதுதான். கரும்பை நட்டு ஒரு வரட்டியை  அதனோடு இணைத்து காமட்டி நடும் நிகழ்வு நடக்கும்,  அன்றிலிருந்து   ஒவ்வொரு நாளும் ஒருவர் உபயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் .  ஏழுமணிக்கு மேல்தான் எல்லாரும் வருவார்கள் , நாங்கள் பள்ளி விட்டதிலிருந்து அங்குதான் சுத்திக்கொண்டிருப்போம். 8 மணி போல தார்ப்பாய் விரிப்பார்கள்  உபயதாரர் அபிஷேகப்பொருட்களும்  சுண்டல் பாத்திரத்துடனும்  வர . அபிஷேகம் முடிய அரைமணிநேரம் ஆகும் . அபிஷேகத்திற்கு பிழிந்த கொளருஞ்சி பழமும் பூ மாலையும் மூடி வைத்த சுண்டலும் கலந்த ஒரு சுகந்தமான வாடை எப்ப சுண்டல் கொடுப்பார்கள் என்ற ஆவலை மேலும் அதிகரிக்கும் . அடுத்த நாள் உபயம் யார் ஏற்றுக்கொள்கிரர்களோ அவர்களுக்கு வெற்றிலை சீவல் பட்டி அச்சாரமாய்க்கொடுத்தப்பின்  . சுண்டல் விநியோகிக்க தொடங்குவர் , அடித்துப்பிடித்து ஒரு சிறு களேபரத்தை உருவாக்குவோம் .எங்கள் சிறுகையில் வாங்கினால் கொஞ்சம்தான் கிடைக்குமென்று எடுத்துச்சென்ற பெரிய  டம்ளரில் வாங்குவோம் , இரண்டாம் முறை கையை விட்டால் "டேய் அதே கை " என்ற அதட்டலுடன் அளவாய் சுண்டல் தருவர் .

  பத்து நாட்களும் கொண்டாட்டமாய் சென்று இறுதி நாள் காமட்டி கொளுத்தும் தினம் வரும். அன்று  இரும்பு தடுப்புகள் அகற்றி பக்கத்தில் வைக்கோல் போர் வைத்தல்  . நாடகங்களுக்கு மேடை அமைத்தல் என்று காலையிலிருந்து அந்த இடம் பரபரப்பாயிருக்கும். மாலையில் தெருவினர்  மாவிளக்கு இடுவார்கள் கொழுக்கட்டை படைப்பார்கள் ,சிலர் வேண்டுதல் நிறைவேறியதை குறிக்கும் விதமாக அந்த நபரின் மேலேயே மாவிளக்கிடுவர்.நம்மை பார்ப்பவர்கள் எல்லாம் கையில் ஒரு கொழுக்கட்டையை திணித்துச்செல்வர் . ஒரே  நேரத்தில் திணுசு திணுசாய் பலவித  கொழுக்கட்டையை  சுவையறியும் வாய்ப்பு அன்று மட்டுமே கிடைக்கும். சிலர் வேண்டுதலுக்காய்  வாழைத்தாரை எடுத்து வந்து எல்லாருக்கும் வாழைப்பழம் கொடுத்துக்கொண்டிருப்பர். இதற்கு மேல் நம்மால் சாப்பிடமுடியாது என்ற நிலையில் தப்பித்து வீட்டிற்க்குள் நுழைந்தால் அங்கொரு கை தட்டு நிறைய கொழுக்கட்டையை நீட்டும் . இதற்கு அவர்களே தேவலாமென்று U-டர்ன் போட்டு பிய்த்துக்கொண்டு திரும்புவோம்.

      ஆரம்ப காலங்களில் அந்த இரவு,  நாடகங்கள் நடத்தப்பட்டன .என் நினைவில் ஒரு அரிச்சந்திராவும் ஒரு லவ குசாவும் மங்கலாய் இருக்கிறது. பின் அவை திரைகள் கட்டி காட்டும் படங்கலாகிப்போனது அங்கு போடப்படும் படங்கள் ஒன்று கூட முழுதாய் பார்த்ததில்லை ,படம் துவங்கி பத்து நிமிடத்தில் கொழுக்கட்டை தின்ற களைப்பில் தூங்கிபோயிருப்போம். நடு இரவில் இரண்டு சிலைகளையும் அரசமரத்தடிக்கு கடத்திவிட்டு ,அந்த கரும்பு நட்டிருக்கும் மேடையில் வைக்கோல் வைத்து தீவாரதனை காட்டி  அதனுள் கற்பூரம் இடப்படும் .தூங்கிபோயிருக்கும்  நான் இந்த நிகழ்வை பெரும்பாலும் கண்டதில்லை.அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஏதோ ஞாபகம் வந்தவனாய் வேகமாக வாசல் நோக்கி ஓடி பார்த்தால் மம்முசாமி இருந்த இடம் சிறு  சாம்பல் மேடாய் கிடக்க  ஏனோ சோகமாக இருக்கும் .
    அடுத்த இரு நாட்களுக்கு அப்பகுதியை யாரும் சீண்ட மாட்டார்கள் , நாடக மேடை அவிழ்க்கும் வரை அதை எங்களுக்கு விளையாட  கிடைத்த பெரிய பொம்மையாய் சுற்றி சுற்றி வருவோம் . மூன்றம் நாள் அந்த இடம்  சுத்தம் செய்யப்பட்டு “மூணாம்குழி மூடுறது” என்ற மன்மதனை உயிர்ப்பிக்கும் நிகழ்வு  நடக்கும். அபிஷேகம் முடித்து சுண்டல் கொடுத்து சுபமாக முடிப்பர். அதன் பின் எப்பொதும் போல மம்முசாமி  தன் இடத்தில் அமர்ந்து அருள்பாலிப்பார்.வெள்ளி - செவ்வாய் தவறாமல் அவருக்கு விளக்கிடுவர் மக்கள் . ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது உடல் நிலை சரியில்லை என்றால் பல பாட்டிகளும் அம்மாக்களும் மம்முதையா என்று இன்றும் முதலில் கூப்பிடுவது அவரைத்தான். வெளியூருக்கு செல்லும் முன் அவர் முன் இருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டு,புது சட்டையுடன் அந்த மண்ணில்  விழு என்று அதட்டும் அம்மாக்களை ஏமாற்றி விழுந்தும் விழாமலும் எழும் வித்தை தெரிந்த பிள்ளைகள் நாங்கள் காரணம் எங்களுக்கும் அவருக்குமான புரிந்துணர்வு அப்படி.கர்பகிரகத்தில் நுழைவது சிலைகளை தொடுவதில்லாம் முடியாத காரியம் என்ற நிலையில் மம்முசாமி தோழனாய்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்,  அவரை தொடலாம் விளையாடலாம், அவரை நகர்த்தி காமட்டி நடும் குழியில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். எங்களை கோபித்துக்கொள்ளமாட்டார்.

      அவர் ஏன் கிராமத்தின் எல்லா தெரு முனையிலும் இருக்கிறார் . ஏன் எப்பொதும் அவரை பார்க்கும் படி வைத்திருக்கிறார்கள்,இறைவன் காமனை எரித்த புராணம் மூலம் என்ன சொல்ல முனைகிறார்கள்  என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்க அன்பு ,காதல் ,காமம் பற்றி பல ஆழ்ந்த கருத்துகள் தோன்றுகின்றன. இன்னொரு முறை மம்முசாமியை கடக்கும் பொது அவரை லிங்கமாக ,சிவனாக பார்க்காமல் . அங்கு காதல் தெய்வங்கள் ரதி-மன்மதன் அமர்ந்திருப்பதாய் பார்த்தால்   நமக்கு அவர்கள் சொல்ல விழையும்  குறியீடுகள்  விளங்கலாம் .

No comments:

Post a Comment