Saturday, 2 July 2016

பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷுர்

   



மீண்டும் அதே சிறுவயது ஈர்ப்பா! ஒண்ணா கண்ணாமூச்சி விளையாடினார்களா ! எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம் என்ற எண்ணம் மேலிடும்பொழுது , இந்த நாவல் 1944 ல் எழுதியது என்ற பிரஞை பின் வர , அனேகமாக அனைத்து பால்யகால காதல் கதைகளுக்கெல்லாம் இந்தக்கதைதான் ஆதியோ ? என்று எண்ணத்தோன்றுகிறது .


    சிறு புத்தகம் 80 பக்கங்கள் அன்று காலையில் பாதி முடித்துவிட்டு முழுதாய் இயங்க முடியவில்லை . மஜீது & சுகறா காதல் என்ன ஆனது என்ற ஆர்வம் அன்றே மீதி புத்தகத்தை வாசிக்க முடுக்கிவிட்டது .
பலர் படங்களை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று படத்தின் முக்கிய முடிச்சுகளை மூச்சுவிடாமல் சொல்லி நம் சுவாரஸ்யத்தை சுக்குநூறாக்கிவிடுவார்கள் . இந்த புத்தகத்திலும் முன்னுரை எழுதுகிறேன் என்று அதே வேலையை பார்த்திருக்கிறார் ஒருவர்.அதனால் கொஞ்சம் ஸ்வாரஸ்யம் குறைந்தது . இனி எந்த புத்தகத்திலும் முன்னுரையை படிக்கக்கூடாது என்ற முடிவெடுக்க வைத்துவிட்டார்.


ரயில் நிலையத்தில் நீர் பூத்த கண்ணோடு வழியனுப்ப நிற்கின்ற சுகறா ,அவள் கேட்க எத்தனிக்கும் கேள்வி . இந்த காட்சியின் வீரியத்தை அல்லது ஆழத்தை வாசிப்பவனிடத்தில் உருவாக்கத்தான் அந்த 80 பக்கங்களுமோ என்று தோன்றுகிறது . இந்த கதை 70 ஆண்டுகள் ஆகியும் அப்படியே இருக்கிறது , இனி வரும் காலங்களிலும் அதே classic- தன்மையோடு இருக்கப்போகிறது . ஏன்என்றால் இனி வரப்போகும் தலைமுறைகளுக்கும் பால்ய கால சகிகள் வாய்க்கப்பெறுவார்கள் .அவர்களால் அவர்களின் வாழ்க்கையோடு எளிதாக இந்த படைப்பை பொருத்தி பார்த்துக்கொள்ள முடியும் . மற்றது சுகறா கேட்க எத்தனித்த கேள்வி ! விடை தெரியாத அந்த கேள்வியிதான் , அழியா சுவாரஸ்ய படைப்பாக இதை நிலைநிறுத்திக்கொண்டிருக்கப்போகிறது.


புத்தகம்: பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷுர்
தமிழில் - குளைச்சல் மு.யூசப் 
பதிப்பகம் : காலச்சுவடு .

Wednesday, 29 June 2016

மீயொலி மீட்டல்




அவ்வளவு முறை சொல்லியும் – கேட்காமல்,
காதோரம் மென்காற்றை உமிழ்கிறாய் !
மீயொலிக்கு சற்று அதிகமாக எப்படி
உன்னால் மட்டும் மீட்டமுடிகிறது? - இந்த கிசுகிசுப்பை.
முடிவுகள் மாறப்போவதில்லை என்று தெரிந்தும்
பாவ்லாவின் நாய்-மணி சோதனையை
நாழிக்கொருமுறை சோதித்துப்பார்ப்பதேன்?
சோதனைக்கு பிறந்தவளே!
29.06.16