Thursday, 1 August 2019

சம்பத் சிறுகதைகள் - தொகுதி -1



இந்த சிறுகதைத் தொகுப்பில் மூன்று கதைகள் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது இன்னும் இருக்குமென்றேத் தோன்றுகிறது .ஒரு விஷயத்தை புரியவைப்பதற்கும் உணரவைப்பதற்குமான மெல்லிய வேறுபாட்டை "சாமியார் சூவுக்கு " போகிறார் மூலம் அழகாக உணர்த்தியிருப்பார் . பிரச்சார தொணி ஒரு எழுத்தில் கூட வெளிப்பட்டிருக்காது . உயிர்கள் சார்ந்த கோட்பாடுகளை நமது வசதிக்கு எப்படி வளைத்து வைத்திருக்கிறோம் என்பதை சுட்டிச் சென்றிருப்பார். அது தவறு! சரி! என்ற முடிவுகள் அற்று இப்படி ஒன்று நமக்குத் தெரியாமலோ தெரிந்தோ நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் என்று சிறு வெளிச்சத்தைக் காட்டிச் சென்றிருப்பார்.

““அலசல்” கதையின் களமும் கதாபாத்திரங்களும் நம்மை மிரட்சியடையச் செய்கின்றன. உடல் விற்று குடும்பம் காக்கும் தாயின் மகன்கள் அவளைப்பற்றி பல்வேறு கோணங்களில் அலசும் சம்பாஷணைகளின் தொகுப்பு . பலதரப்பட்ட கோணங்களில் அறிவார்ந்து அலசும் அவர்கள் . அவளுக்கும் மனமுண்டு என்ற ஒரு கோணத்தை தவறவிடுவதை இறுதியில் உணர்கின்றனர். கற்பு உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? என்ற விவாதத்தை எல்லா படைப்பாளிகளும் தொடுவதுண்டு அப்படி இவர் பாணியில் ஒரு படைப்பு "அலசல் " .


அவருடைய அனேக ஆக்கங்கள் சமூகம் , தனி மனித வாழ்வு சார்ந்த தத்துவார்த்த விவாதத்துக்குள் நம்மை இட்டுச் செல்பவை.அவரது படைப்புகள் நம்மை நிலைக்கொள்ளா விடாமல் செய்பவை . அவருடைய படைப்பில் வரும் மையக் கதாபாத்திரங்கள் வாசகனை சாட்சியாக வைத்துக்கொண்டு பெரும்பாலும் தன்னுள் பெரும் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் . சற்று யோசித்தால் நிஜ வாழ்வில் அவருள் ஒரு பெரும் விவாதம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்திருக்கிறது . அவற்றை சொற் கோட்டைகளாக்கி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அவருடைய எழுத்துலகில் பிரவேசிக்கையில் அந்த சொற்கோட்டை வாசகனின் மனப்பரப்பில் அதே கேள்வி விதைகைளை பரவவிட்டு புது தத்துவார்த்த விளைச்சல்களை கோரி நிற்கிறது . இடைவெளி குறுநாவலுக்கு பிறகு வாசித்த இந்த சிறுகதைத்தொகுப்பு அதை உறுதிப்படுத்தியது.

சம்பத் சிறுகதைகள் - தொகுதி -1 விருட்சம் வெளியீடு



Friday, 26 April 2019

குறத்திமுடுக்கு -ஜி.நாகராஜன்

அது ஒரு உடலியல் தேவை மட்டுமே மனதிற்கு அங்கு வேலை இல்லை என்று நம்புபவன் .காதல் , கல்யாணம் பற்றி ஒரு சித்தாந்தத்தை உருவேற்றிகொண்டு இருப்பவனின் உறுதி எப்படி மாறுகிறது !அந்த ஊரின் உடலியல் தேவையை நிறைவு செய்யும் குறத்திமுடுக்கு எப்படி இவனின் உளவியலில் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கிறது என்பதை எண்பது பக்கத்தில் சொல்கிறார் ஜி .நாகராஜன்.

தங்கத்தின் கதை மையமாக நிற்க, முதலும் முடிவுமற்ற செண்பகத்தின் கதையும் ,எதில் சேர்ப்பது என்று நம்மை விக்கித்து நிற்கச் செய்யும் தேவயானை கதையையும் பின்னி பிணைக்கிறது குறத்தி முடுக்கு .தான் மாறக்கூடாது என்று நிற்கும் ஒரு ஆண் மனதில் நிகழும் மெல்லிய மாறுதல்களை எழுத்தில் அவ்வளவு நேர்த்தியாய் காட்டிய அதே வேளையில் ஒரு பாலியல் விடுதியின் இருள் வெளியின் ஆழத்தையும் அழுக்கையும் செண்பகத்திற்கு நிகழ்ந்ததையும் , தேவையானை எடுத்த முடிவை வைத்து நமக்கு விளங்க வைக்கிறார் .அந்த இரு பெண் கதாபாத்திரங்கள் அனுபவித்த கோர அதிர்வில் சிறு பகுதியை நம்முள் கிடத்திவிட்டு செல்கின்றன. "காத்திரமான" என்ற வார்த்தை இவருக்காகவே உருவாகியிருக்குமோ ! என்று தோன்றுகிறது . ஏன் இப்படி எழுதுகிறேன் என்று என்னிடம் கேட்பதை விடுத்து ஏன் இப்படி நம்மைச் சுற்றி நடக்கிறது என்று கேளுங்கள் என்கிறார் .

குறிப்பாக தேவயானை கதையை பற்றிக் குறிப்பிட வேண்டும் ,அந்த நாலு பக்கத்தை மட்டும் ஒரு சிறுகதையாகக் கொள்ளலாம் . இருந்தும் குறத்தி முடுக்கின் புழுதிகளில் அலைந்துவிட்டு நாம் அந்த கதையை எதிர்கொள்ளும் பொது அவ்வளவு பிரம்மண்டமாகி நிற்கிறார் ஜி. நாகராஜன் .ஒரு மேஜிக் நிபுணர் இரண்டு நிமிட மேஜிக் செய்ய இருபது நிமிடம் மேடையையும் பார்வையாளனையும் ஆயத்தம் செய்வது போல. அந்த நாலு பக்க கதையைச் சொல்லத்தான் அத்தனை பக்கம் நம்மை ஆயத்தம் செய்தாரோ? நிச்சயம் அது ஒரு மேஜிக் .


Friday, 19 April 2019

குழந்தை மனம்

கிரமமாய் பறக்கும் தூரத்துப் பறவைகள்.
"மடையான் மடையான் பூ போடு" - என்று
கேட்கும் அரூபக் குரல்கள் .
தூவென்று துரத்தும் குழந்தை மனம் .

Monday, 15 April 2019

நித்யக்கவி



கம்பனின் கவித்திறன் பற்றி பலர் பேசி கேட்டதுண்டேத் தவிற நேரடியாக சுகித்ததில்லை . பாடல்கள் படித்து பொருள் தேடுவது சுவாரஸ்யமற்றதாக தோன்றுவதுண்டு .சமீபத்தில் சுந்தரக்காண்டம் உரைநடை வடிவில் வாசிக்க நேர்ந்தது . பக்கங்கள் நகர அவர் எவ்வளவு பெரிய கதைச்சொல்லி என்பது விளங்கியது . கதைக்குள் கதை , முன்கதை சுருக்கம் என்று திரைக்கதை ஆசிரியர்களுக்கான தீனி நிறைய விரவிக்கிடக்கிறது.

கதை கேட்பவனாய் நமக்குள் எழும் வினாக்களுக்கு அடுத்த அடுத்த பத்திகளில் நிறைவான விடைகளை விட்டு செல்கிறார் . ஒரே சமயத்தில் சொல்பவனாகவும் கேட்பவனாகவும் மாறி மாறி பாவித்து எழுதியிருப்பார் போல. நீர்த்த உரைநடை வடிவாக வாசித்த போதும் பல இடங்களில் அவரின் கவித்துவம் அதன் ஆன்மாவை இழக்காமல் அப்படியே நின்றது ஆச்சர்யமாக இருந்தது.குறைந்தபட்சம் சுந்தரக்காண்டத்தை மட்டுமாவது அவர் மொழியில் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிச்சென்றது .

Thursday, 11 April 2019

சச்சினின் சுயசரிதை

சச்சினின் சுயசரிதை புரட்ட வாய்ப்பு கிடைத்தது. தலைகாணி சைஸ் புத்தகமாக இருந்தததால் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் வாசிக்கலாமென்று 96 -உலகக்கோப்பை பகுதியை வாசிக்கத் துவங்கினால் . அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்களை எழுதியிருக்கிறார் .

அந்த உலகக்கோப்பைக்கு முன் பயிற்சிக்கு விடுதி அறையிலிருந்தே மைதானத்திற்கு வீரர்களை ஓட விடலாம் , என அணி நிர்வாகம் முட்டாள்தனமாக ஒரு முடிவு செய்திருக்கிறது . நம்மூர் சாலையில் ஓடுவதும் மைதானத்தில் ஓடுவதும் ஒன்றல்ல அது வீரர்களை காயமடைய வைக்கும் . அதே தூரத்தை மைதானத்தில் ஒடுகிறோம் என்று நிர்வாகத்திற்கு புரிய வைப்பதே வீரர்களுக்கு பெரும்பாடாகிருக்கிறது .

முக்கியமான பாகிஸ்தான் போட்டியை வென்ற பிறகு அவர்கள் பஸ் போன பாதை நெடுக மக்கள் நின்று மலர் தூவியிருக்கிறார்கள். விடுதி சிப்பந்திகள் முதற்கொண்டு அனைவரும் அவர்களை ஒரு மகாராஜா போல கவனித்ததாக குறிப்பிடுகிறார் . அந்த நிலை அரையிறுதியில் இலங்கையிடம் தோற்ற பிறகு வேறு மாதிரியாக இருந்திருக்கிறது . எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்கத்தாவை விட்டு சென்று விடவேண்டும் வீரர்கள் விக்கித்து நின்றிருக்கிறார்கள் . தன் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பிய அந்த நடைதான் தன் வாழ்நாளிலேயே மிகக் கொடுமையான நீண்ட பயணம் என்று குறிப்பிடுகிறார் சச்சின் .

அந்த போட்டிக்கு கொல்கத்தா பிட்ச் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவந்த மண்ணை நிரப்பி புதிதாக உருமாற்றிய ஒரு தகவலைக் குறிப்பிடுகிறார் . அந்த அரையிறுதி தோல்விக்கு இந்த சோதனை முயற்சி கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 98/1 என்ற நல்ல நிலையிலிருந்த இந்தியா அடுத்த 22 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்தது.

பெரிய மனச்சோர்வை மொத்த அணிக்கும் அந்த உலகக்கோப்பை கொடுத்துச்சென்றிருக்கிறது . அதிலிருந்து விடுபட இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்று மீண்டும் தோல்வியுடன் திரும்பிய அணித்தலைமைப் பொறுப்பை ஆசாரிடமிருந்து சச்சினுக்கு கொடுத்திருக்கிறார்கள் .அந்தச் சுற்றுப் பயணம் எங்களுக்கு தோல்வியைக் கொடுத்தாலும் இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை முகங்களை அளித்துச் சென்றது.இங்கிலாந்து சுறுப்பயணத்தில் புதிதாகா அணியில் அறிமுகமான இருவர் நம்பிக்கைக் கொடுத்தனர் என்கிறார் .

ஒருவர் இந்தியாவின் சுவராக பின் பரிணாமித்த டிராவிட் மற்றவர் கைவிட்டுப் போன உலகக்கோப்பையை மீண்டும் வெல்ல வலுவானதொரு அடித்தளத்தை அடுத்த 15 ஆண்டுகள் அனைத்துத் தளங்களிலும் ஏற்படுத்திவிட்டுச் சென்ற சௌரவ் கங்குலி .

Wednesday, 27 February 2019

உள்ளங்கவர் கள்வர்கள்



தேங்காய்க்கு வெல்லத்தை கரண்டி தின்றுகொண்டு சோம்பித்திரிந்து தம்பியுடன் கட்டிப்புரண்டு சண்டைபோடும் சஜியும் இடைவேளைக்கு பின் வரும் சஜியும் ஒன்றல்ல என்பதை இரண்டு முறையும் சஜி ஷம்மியிடம் பெண் கேட்கும் தொணியில் நமக்கு புரியவைத்திருப்பார் இயக்குனர். சஜி தன் வாழ்வில் சந்திக்காத அழுத்தம் இல்லை இருந்தும் அவன் நேரடியாக உருவாக்கியதொரு அழுத்தம் அவனை உடைத்துப்போட்டு பண்படுத்துகிறது .சஜி கூப்பிட்டிருந்தால் அந்த அம்மா வந்திருப்பாரோ ! அவரை கூப்பிட்டு சங்கடப்படுத்தக்கூடாது என்ற பக்குவநிலையில் சஜி இருந்தான் என்பது பின்புதான் நமக்கு விளங்குகிறது.

பிரேமத்துல பி.டி வாத்தியார், மகிஷிண்டே பிரதிகாரத்திலே போட்டோ பிரேம்கடை டிசைனர், சார்லியில் திருடன், சமீபத்தில் சுண்டி பிரம் சூடானில் டீம் மேனேஜர் என்று நம் நினைவில் நிற்கும் எத்தனையோ கதாபாத்திரங்களை சாபின் ஷபீர் செய்திருந்தாலும் அனைத்தையும் விஞ்சும் பாத்திர வடிவாக சஜி கதாபாத்திரம் அவருக்கு வாய்த்திருக்கிறது . சாரத்தை சரி செய்துகொண்டு கதவைத் திறக்கும் முதல் காட்சியில் தொடங்கி கதவிடுக்கின் வழியே காண்டத்தை பரிசாக சுண்டிவிட்டு நகரும் கடைசி காட்சி வரை அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு நொடியும் நடிப்பால் நம்மை வசிகரிக்கிறார்.படம் ஒரு நாயகனின் கதை இல்லைதான் இருந்தும் இவர்தான் நாயகனோ என்று நம்மை சந்தேகிக்க வைக்கிறார் .

Friday, 15 February 2019

எப்படி வளர்ப்பது.

கழுத்துப் பட்டையுடன் மிரண்டு நின்று
கொண்டிருந்ததொரு நெடுஞ்சாலை நாய்
என் நினைவடுக்குகளிலிருந்து நீங்க
வருடங்களாகின ,இறங்கி தூக்கி வந்திருக்கலாம்.
வீட்டுக்காரருக்குத் தெரியாமல் எப்படி வளர்ப்பது ?

Saturday, 2 February 2019

உயிரின் யாத்திரை



இந்தக் கரு ஒரு பெரும் நாவலுக்கானது அதை எழுதும் ஆவலும் திறனும் அவருக்கு இருந்தும் . தத்துவார்த்த விஷயங்கள் விரவிக்கிடக்குமதை வாசிப்பது வாசகனின் பொறுமைக்கு பெரும் சோதனையாகிவிடுமோ! என்பதால் அந்த எண்ணத்தை கை விட்டதாக சொல்கிறார் . வாசித்து முடிக்கையில் அந்த முடிவு எவ்வளவு தெளிவானது என்று நம்மால் உணரமுடிகிறது .சிறுகதையாகவும் சுறுக்க முடியாத ஒன்று, அளவுக்கு அளவுன்னு வாலி சொல்லுவார் அது போல கூடாமல் குறையாமல் கச்சிதமாக இருந்தது . ஒரே மூச்சில் வாசித்துவிடலாம் .

சதாசிவம் யார்? என்ற கேள்வி ராஜாவைப் போலவே நம்மையும் கதை நெடுக துரத்துகிறது. சதாசிவம் கூறும் தத்துவார்த்த விஷயங்களுக்கு எதிராக தர்க்கமாய் ராஜாவினுள் எழும் கேள்விகள் நம்முள்ளும் எழுகிறது . ஒரு கட்டத்தில் கதைப் போக்கில் நாம் சிந்திப்பதைத்தான் ராஜா சிந்திக்கிறான் அல்லது அவன் சிந்திப்பதைப் போன்றே நாம் சிந்திக்கிறோம். அது ஒரு சுவாரஸ்ய விளையாட்டாக கதை நெடுக நிகழ்கிறது .

ஆரம்பத்தில் இருந்த அழுத்தமும் வேகமும் இறுதியில் நகர நகர வடிவதும். மிக எளிமையாக கதை நிறைவுருவதும் ஒரு வித வெறுமையைக் கொடுத்தாலும். வெறுமைக்கும் எளிமைக்கும் இட்டுசெல்வதுதானே தத்துவங்களின் தகவு என்று சொல்லாமல் சொல்கிறாறோ என்று தோன்றுகிறது.

#உயிரின்_யாத்திரை
#எம்_வி_வெங்கராமன்

Monday, 28 January 2019

மசக்கை

கலிலியோவின் முன்னவர்களுக்கு
மசக்கையான மனைவியின்
மணிவயிறை தடவிப் பார்த்த
பிறகு கூடவா உறைக்கவில்லை !

Thursday, 10 January 2019

Njan Prakashan - Sathyan Anthikad - 2018



நாலு வரியில் சொல்லிவிடுகிற கதை, இருந்தும் கதைச் சொல்லலைக்காட்டிலும், இறுகிக்கிடக்கும் ஒரு மனித மனதில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் நிகழும் மாற்றத்தையும் அது நிகழ காரணமாக இருந்த மனிதர்களையும் சூழலையும் நமக்கு விளங்கவைப்பதே இயக்குனரின் நோக்கமாகிறது . ஒரு மலர்தலை படம் பிடித்துக்காட்டுவது போல இதை இரண்டு மணிநேரம் ரசமாக பார்வையாளனுக்கு பகிரமுடியும் என்ற இயக்குனரின் நம்பிக்கையும் அதை செய்துக்காட்டிய விதமும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது . அது அவர் மேலும் பகத் மேலும் கொண்டிருந்த நம்பிக்கையென்றே தோன்றுகிறது .இறுதிக்காட்சிக்கு முன் அந்தத் தாயிடம் விடைபெறும் காட்சியில் பகத் நடிப்பில் உச்சம் தொட்டாரென்றால் . அவன் சொல்லும் பொய்க்காதலை மேய்க்காதலென்றெண்ணி மேலுதட்டுப் புன்னகையில் நடிக்கும் நிகிலா மற்றொரு முனையில் நியாயம் செய்கிறார். இந்த ஆண்டின் கணக்கு ப்ரகாஷுடன் துவங்கியது .