Sunday, 10 January 2016

அற்றுப்போன ஆறுடி பானை

   ஒவ்வொரு வருடமும் மண்பானை எடுக்க செல்வதுபோல் இந்த வருடமும் அம்மாவுடன் சந்தைக்கு செல்ல நேரிட்டது .10 மணிக்கு மேல்தான் நல்லநேரம் என்பதால் நல்ல  நிறைவான கூட்டம் இருந்தது . " இந்த பானை ஒன்னேகால் படி வெள்ளசோறு நிக்கும்மா , இதுல ஒரு படி அரிசியோட தேங்காய் வெல்லம் போடுறப்ப கழுத்தொட்டி நெறக்க  ஒன்றபடி நிக்கும்மா " என்று எந்த பானையை எடுப்பதென்று குழம்பி நின்றவர்களுக்கு வியாபாரம் செய்துகொண்டிருந்தார் பானைக்காரர் . அக்கா இது பத்துமா.... இது தேவலையாக்கா ....என்று எல்லோரிடமும் கெட்டுகொண்டிருந்தனர் சிலர் . பொங்கல் பொருட்களை போட்டு மூடிவிட்டால் பொங்கல் பொங்கிய பின்தான் திறந்து பார்க்க வேண்டும் . அதனால்தான் இவ்வளுவு பயத்துடன் பானைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.

  பெரியம்மா அண்ணனோடு சித்தப்பா சித்தியும்  வந்து சேர 15 நிமிட ஆராய்ச்சிக்கு பின் சித்தப்பாவின் வழிக்காட்டுதலில்  மூன்று குடும்பத்திற்கும் பானைகள் Purchase - செய்யப்பட்டன . பானையின் வடிவத்தை ஆராய்கிறார்கள் சில வடிவங்களை ஏன்  என்றுகூட சொல்லாமல் விளக்கி வைக்கிறார்கள் . யது குல தோன்றலின் வாய் பார்த்த யசோதை போல சூரியனுக்கு எதிராக நிறுத்தி பானை வாய் பார்க்கிறார்கள் . விக்குவின் விரல்களாய் பாவித்து தட்டி பார்த்து ஓசை நயம் கேட்கிறார்கள் . ஒன்று பெரிதாகவும் ஒன்று சிறிதாகவும் இருக்கவேண்டுமாம் , மொத்தமாக ஒற்றை படையில் இருக்கவேண்டும் என்பதற்காக 3 பானைகளும் 2 சட்டிகளும் வாங்கினார்கள். மல்டிப்லஸ்களில் விற்கப்படும் large popcorn - னை விட மலிவாக இருந்தது ஒரு பானையின் விலை.
  
அப்போதுதான் ஒன்றை கவனித்தேன் முன்பெல்லாம் சிறிய பானைகளின் ஊடே சில பெரிய பானைகளும் இருக்கும் அது இப்போது இல்லை . அவை ஐந்துடுடி  ஆறுடி பானைகள் அதில் ஒரு இருபது இருபைத்தைந்து பேருக்கு சமைக்கலாம் . இப்போது இருக்கும் ஒன்றையுடி இரண்டுடி பானைகள் ஐந்து ஆறு பேருக்கு சமைக்கலாம் . லிட்டர் கணக்கில் குக்கர் வாங்குவது போல இது பானைகளுக்கு அளவு . சில ஆண்டுகளுக்கு முன் கூட அவை இருந்தன மிச்சமிருந்த ஒன்றிடண்டு கூட்டு குடும்பங்களுக்காக. காலத்தால் களைந்த கூட்டு குடும்ப கலாச்சாரத்தின் கடைசி எச்சமாய் இருந்த அவை அற்று போய்விட்டது என்பதை உணர சற்று நேரமாகியது எனக்கு

  கால ஓட்டத்தால் ஏற்படும் மாறுதல்கள்இவற்றை எதிர்கொள்ளுதலும் ஏற்றுக்கொள்ளுதலும் நம் கடன் . பலர் மண் பானை வாங்கியதை பார்க்க மகிழ்வாய் இருந்தது . இருந்தும் சிலர் மண் பானையிலிருந்து விலகி வெண்கல பானையில் பொங்கலிடுவதை கண்ணுரமுடிந்தது . பானையை தவிர்க்க முதல் மற்றும் கடைசி  காரணம் அதை கையாள்வதில் உள்ள சிரமம். கரண்டியை உபயோகிக்க முடியாது ஆப்பைதான் ஏற்றது அதுவும் அன்பாய் கிண்டவேண்டும், அவசரப்பட்டால் அவ்வளவுதான். ஆக்கிய பின் அதை இறக்கி வைப்பதும் சிரமம் என்பதை இம்முறை நான் இறக்கி வைத்ததால்  உணரபெற்றேன். ஆறுடி பானையை சித்தப்பாக்கள் எப்படி இறக்கி வைத்திருப்பர் என்பதை எண்ணி விக்கித்து நின்றேன்

  இவ்வளவு சிரமங்களுடன் மண்பானையில் பொங்கலிட வேண்டுமா ??? மூன்று ஆண்டுகளுக்கு முன் அம்மா  இதே மனநிலையில் என்னிடம் கேட்டாள் " இந்த வருசத்துலருந்து  வெண்கல பானைக்கு மாறிடவாடா  " என்று . இதில் இருக்கும் சிரமங்கள் பற்றி பெரிய பிரக்ஞை இல்லாத அன்று நான் சொன்னேன் " உன் பெயரன் பேத்தி கருத்து தெரிஞ்சி பொங்கல் விடுற வரைக்கும் மண் பானை இருக்கட்டுமே " என்று . இன்னும் எப்படி விளக்கி சொல்வது  என்று யோசித்து நின்றவனை சில நொடிகள் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள் . நான் சொல்ல நினைத்த விஷயங்கள்  அவளுக்கு புரிந்திருக்க வேண்டும் தாயல்லவா !

   பின் வரும் காலங்களில் பானையில் பொங்கலிடுவதை  தொடர முடியுமா என்ற பெருங்கேள்வி இருந்தாலும் . நான் பானையை விடுவதாய் இல்லை . 20 ஆண்டுகளுக்கு பின் குக்கரில் பொங்கல் வைக்கும் நிலை வந்தாலும்.மஞ்சள் வில்லைகளை கழுற்று மணியாய் இட்டு மஞ்சள் குங்குமம் இட்டு புதுப்பானையில் எடுத்து வைத்த பொங்கலை படைப்பதாய் உத்தேசம் .  ஆறுடி பானைகள் அற்றுப்போனதற்கு காலம் காணரமாக இருந்துவிட்டு போகட்டும். பொங்கலில் பானைகளே அற்றுப்போவதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை .


Usthad Hotel / 2012 / Malayalam




எப்படி நேர்த்தியாய் தொழில் செய்வதென்பதை நான் சொல்லிக்கொடுத்துவிடேன் . எதற்காக தொழில் செய்யவேண்டும் என்று நீ சொல்லிக்கொடு ......


     இந்த வாசகம் எழுதப்பட்ட சீட்டுடன் கரீம் இக்கா தன் பேரனை ஒருவரிடம் அனுப்பிவைப்பார் . நன்றாக யோசித்தால் மொத்த படத்தின் சாராம்சமும் இந்த வரிகளிள் அடங்கிவிடுகிறது .ஆரம்பத்தில் இது ஒரு விடலை பையனின் வாழ்க்கை பற்றிய படமோ என்று தோன்ற, பின் நாயகி வந்தவுடன் ஒரு அழகான காதல் கதையோ என்று தோன்ற , பின் கரீம் இக்கா வந்தவுடன் தாத்தா-பேரன் பற்றிய உணர்ச்சிபூர்வ கதையோ என்று தோன்ற செய்கிறது . கடைசியாக எல்லாம் சேர்ந்த படம் என்ற நினைப்பை ஏற்ப்படுத்துவது மட்டுமல்லாமல் .இது நம்மை பற்றிய படம் என்ற எண்ணத்தையும் . நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் எதற்க்காக செய்துகொண்டிருக்கிறோம் என்ற பெரும் கேள்வியை எழுப்பிவிட்டு நிறைவடைகிறது .

    திலகன் என்ற மாநடிகன் கரீம் இக்காவாக வாழ்ந்திருக்கிறார் . ஜெயமோகனின் சொற்றுக்கணக்கு சிறுகதையில் தக்கல் சாகிபு பற்றிய விவரணைகள் படிக்கும்போது என் கண் முன் திலகன் தக்கல் சாகிபாய் வரிந்து நின்றார் . தக்கல் சாகிபும் - கரீம் இக்கவும் வேறுவேறு நபர்கள் அல்ல என்றே நான் நினைக்கிறேன் , இருவரின் நோக்கமும் செயலும் ஒன்றே . அவர்களின் அறம் ஒன்றே .

   சில படங்கள் நம்மை ஒருவித உணர்ச்சிப்பெரு நிலைக்கு கொண்டுசெல்லும். சில அந்த நிலையை சில நாட்களுக்கு நம்முள் நிலைநிறுத்தி வைத்திருக்கும் . இது அந்த வகை படம் .

செம : இறுதி காட்சியில் இக்கா தானம் பெற்று உண்ணும் காட்சி .

பெருக்ககவே பார்க்கலாம் : Director : Anwar Rasheed Written by : Anjali Menon Starring :
 Thilakan , Dulquer Salmaan

Trailer : https://www.youtube.com/watch?v=Z1m3y4L1yzY