Sunday, 5 June 2016

ஆதர்சனத்தின் ஆதர்சனம்









    நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் என்ற வசனத்தைப்போல . நம் ஆதர்சனத்தின் ஆதர்சனம் நமக்கும் ஆதர்சனம்தானே . அப்படித்தான் P.S.ராமையா பற்றிய அறிமுகம் கிடைத்தது . சி சு செல்லப்பா பற்றிய விஷயங்களை படித்த பொழுது இவரது பெயர் பல இடங்களில் தட்டுப்பட்டது.எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற்போல் தனக்கு கிடைத்த ஒரு விருதிற்கான பரிசுத்தொகையை கொண்டு தன்னுடைய புத்தகத்தை வெளியிடாமல் P.S.ராமையா பற்றிய திறனாய்வை வெளியிட்டார் என்பது . ராமையா பக்கம் ஆர்வத்தை திருப்பிவிட்டது . அவரின் பல புத்தகங்கள் பதிப்பில் இல்லை . தேடிய பொழுது அம்ருதா வெளியிட்டுள்ள முத்துக்கள் பத்து (பத்து சிறுகதைகள் ) கிடைத்தது. அத்தனையும் முத்துக்கள் தான், மிரள விட்டார் . மணிக்கொடி காலம் - என்ற புத்தகமும் பதிப்பில் இருக்கிறது . இந்த புத்தக கண்காட்சியில் சி சு செல்லப்பா & P.S.ராமையா படைப்புகளை தேடவேண்டும் என்றிருந்தேன் . இடையில் அழகியசிங்கர் - விருச்சம் அரங்கு கடைசியாய் அமையபெற்றதாய் வருந்தி ஒரு பதிவு இட்டிருந்தார் . அதனால் இம்முறை முதலில் அந்த அரங்கிற்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன் . மிஷ்கினின் "ஓநாய் ஆட்டுக்குட்டி " புத்தக வெளியீட்டிற்கு சில காரணங்களால் செல்லமுடியவில்லை, அவர் ப்யூர் சினிமா அரங்குக்கு வருவதாய் தகவல் . எனவே இரண்டு அரங்கிற்கு முக்கியமாக செல்லவேண்டும் முதலில் விருச்சம் அரங்குக்கு செல்லவேண்டும் என்ற முடிவோடு உள்ளே நுழைந்து ஸ்டால் 594 என்ற எண்னை தேடினால் 4 வரிசையில் கடைசியாய் காட்டியது . நேராக நடையைக்கட்டினால் 10 நிமிடத்தில் விருச்சம் வந்தது . அழகிய சிங்கர் இல்லை . கால சுப்ரமணியன் இருந்தார் . அரங்கில் நுழைந்ததும் முதலில் பழப்பு நிறமான ஒரு புத்தகம் கண்ணில் பட்டது . நமக்கென்று எழுதப்பட்டது நம்மை வந்து சேரும் என்கிற தத்துவத்தை பலர் மூடநம்பிக்கை என்று மறுப்பார்கள் , எனக்கு அதீத நம்பிக்கை உண்டு . காரணம் தொடர்ந்து பல விஷயங்கள் எனக்கு நடந்துகொண்டே இருப்பதால் . அந்த புத்தகத்தை அவ்வளவு மகிழ்ச்சியோடு எடுத்தேன் சி சு செல்லப்பா எழுதிய " ராமையாவின் சிறுகதை பாணி " (அந்த திறனாய்வு நூல் ). இந்த கண்காட்சியில் முதலாவதாக எடுத்த புத்தகம் கடந்த ஆறு மாதமாக தேடிக்கொண்டிருந்தது . கை வந்து சேர்ந்தது . 200% விலை ஏற்றத்தோடு விற்க தகுதியான இந்த புத்தகத்தை 30 % தள்ளுபடி கொடுத்தார்கள்.

No comments:

Post a Comment