திருமணத்திற்கான வாய்ப்பில்லை என்று சரஸ்வதி தேவியை சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு திரும்புகையில் எண்புறமும் சூழ்ந்த இருளும் மௌனமும் , பலா இலைகளை மென்றுகொண்டு பார்க்கும் பாத்துமாவினுடைய ஆட்டின் தீர்க்க பார்வை , ஃபாபி சம்மதம் தெரிவித்த போது அருகினில் சென்று தேவாவிற்காக சிலையாய் நின்றது , மாங்கோஸ்டின் மரத்தடியில் கிராமஃபோன் கஸல் இசையினுடே சுலைமானியின் சூடான சில மிடறுகள் , பாய்பூர் வீட்டு வெளிக்கதவை தாழிட்டு விலகுகையில் ஷாஹினாவின் "டாடா" என்ற விளிப்புடனான மழலை குதிப்பு , இன்றைக்கு காசு இருக்குப்பா வாங்கிக்க என்கையில் மீன்கார சங்கரனின் சிரிப்பு . கல்லுக்குப்பிகளுக்கு இடையே மங்கலாய் வந்து வந்து மறையும் எதிரே அமர்ந்திருக்கும் ஜான் ஆப்ரஹாமின் உருவம் . சங்கரேட்டா கடை பெஞ்சில் மகனுடன் அமர்ந்திருக்க முகத்தில் அறையும் புட்டின் ஆவியும் மிளகு காபியும் , கட்டாரியால் குத்தி குதறிய மெத்தையிலிருந்து மேலே விழும் பனியாய் பஞ்சுத்துளிகளும் வெறித்த பார்வையும் .ஷாஹினாவிற்கு கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே எங்கிருந்தோ வந்து முன் நிற்கும் சாத்தான். எம் .டி யின் உயிருக்காக இறைவனிடம் இரந்து நிற்கையில் கண்களை மறைத்த கண்ணீர்.
என்று அவரின் சுவாரஸ்யமான பல தருணங்களை நம் கண் முன்னே கொணர்கிறார் அவரின் சகபயணி ஃபாபி பஷீர் . யோசித்தால் நாற்பது ஆண்டுகளுக்கு பிந்தைய வாழ்வைப்பற்றிய சித்திரமாகவே அது இருக்கிறது . நாற்பது வயதிற்குள் பெரும் எழுத்து ஆளுமையாகிவிட்டவர் . அப்போதே ஏறக்குறைய 20 ஆண்டுகள் எழுதியிருப்பார் எனில், அவரின் எழுத்திற்கு இடுபொருளாய் இருந்த அனுபவங்கள் அதற்கும் முன்னமே இளம் வயதிலேயே வாய்த்திருக்க்கவேண்டும் . அந்த அனுபவச் செறிவை எழுத்துகளாக்கி கரைத்துவிடவே அவர் தொடர்ந்து முயன்றதாய் தோன்றுகிறது . இருந்தும் அந்த அனுபவங்களின் தின்மை அவரை சில முறை வென்றுள்ளது . இருமுறை மனப்பிறழ்வுக்கு ஆளாகி மீண்டுள்ளார். அந்த அனுபவ செறிவை அறிந்து கொள்ள இன்னும் அவரின் ஆரம்பகால வாழ்வைப்பற்றி படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிடுகிறது ஃபாபி பஷீரின் " எடியே " புத்தகம் .
இன்று பஷீர் நினைவுதினம்

No comments:
Post a Comment