Wednesday, 19 July 2017

முகிழ்த்தலும் முறித்தலும்....


அடிப்படையில் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான காட்சிகள்தான் . இந்தக்காட்சிகளின் மையம் ஒன்று போலவே தோன்றுகிறது . இரண்டுக்காட்சிகளிலும் ஒரு முக்கியமான முடிவை ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்துகிறார் , அந்த விஷயம் அவளைச் சேரும் பொது அவர்கள் அங்கு இருக்க விரும்பவில்லை . அவர்கள் தங்களுக்கே புரிந்த ஒரு சங்கேத பாஷையில் உரையாடிக்கொள்கின்றனர் . முதல் காட்சி ஒரு காதலை முகிழ்த்தெடுத்தது மற்றது முறிக்கிறது . இரண்டுமே இரண்டு மேதமைக்கலைஞர்களின் ஆக்கங்கள் .





[ Namukku Parkkan Munthiri Thoppukal - 1986 -Padmarajan ]

சாலமனின் எதிர்பாராத வருகையும் , அதற்கு தயாராய் இருப்பது போல எதிர்கொள்ளும் அவனது தாயாரின் அணுகுமுறையும் , அந்த பாத்திரம் எப்படிப்பட்டது என்பதை நமக்கு சொல்லிவிடுகிறது . நடு இரவில் வருவான் , பின் சொல்லாமல் கொள்ளாமல் செல்பவன் . ஒரு நாடோடியின் அணுகுமுறை கொண்டவன் . ( சார்லி படத்து துல்கரின் கதாப்பாத்திரம் சாலமனின் சாயல் கொண்டிருந்தது ). அப்படி பட்டவன் அந்த முறை திரும்பி செல்வதை தாமதிக்கிறான் . பக்கத்து வீட்டில் இருக்கும் சோபியா அவனை எதோ ஒரு விதத்தில் வசீகரிக்கிறாள் . இந்த முறை சாலமனின் அணுகுமுறையின் இருக்கும் மாற்றத்தை குடும்பத்தினர் ஒருவாறாக யூகிக்கின்றனர் இருந்தும் பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை .
ஒருநாள் இரு வீட்டிற்கும் இடையே இருக்கும் வேலியை சரிசெய்யும் சோபியாவிடம் பேச்சு கொடுக்கிறான் .எப்போ திரும்ப செல்கிறாய் ? என்கிறாள் . இன்னைக்கு இருக்கலாம் என்கிறான் .ஏதேதோ பேசிவிட்டு திராச்சைத்தோட்டத்தை பற்றிய பேச்சு வருகிறது. திராச்சை தோட்டங்களை பார்த்திருக்கிறாயா ? என்கிறான் , பைபிளில் வரும் சாலமன் ராஜாவின் திராச்சை தோட்டங்களைப்பற்றி வாசித்ததுண்டு நேரில் பார்த்ததில்லை என்கிறாள் . உன்னை ஒருமுறை அங்கு அழைத்து செல்வேன் என்கிறான் . சாலமனின் song of songs - ல் வருவதுபோல என்று அந்த அத்தியாயத்தை சொல்ல ஆரம்பிக்கிறான் . ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி இதற்கு பிறகு தெரியுமா என்கிறான் . மறந்துவிட்டது என்கிறாள்.மீதியை சொல்லுங்கள் என்று வற்புறுத்துகிறாள் . பைபிளை எடுத்து அந்த அத்தியாயத்தை வாசி . என்று சொல்லிவிட்டு புன்முறுவலோடு செல்கிறான் . அவள் உடனே வீட்டிற்கு சென்று அந்த அத்தியாயத்தை வாசிக்கிறாள் . அதில் வரும் சாலமன் ராஜ சொல்வதுபோல இருக்கும் காதல் கசியும் அந்த ஷரத்துகள், இந்த சாலமன் சொல்வது போல அவளுக்கு படுகிறது . அவனது காதலை அவள் உணர்ந்து கொள்கிறாள்.




[Fallen Angels - 1995 - Wong Kar-wai ]


ஓங் -சி ஒரு paid killer அவனுக்கு தொழில்சார்ந்த அனைத்து வித உதவிகளும் புரிபவள் அவள் . அவன் செய்யும் கொலைகளுக்கு வேவு பார்த்து ஸ்கெட்ச் போட்டு தருவதே அவள்தான் . பெரிதாக இருவரும் சந்தித்துக்கொள்வதில்லை இருந்தும் அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பு .அவ்வப்போது அவன் போகும் இரவுவிடுதிக்கு சென்று அவன் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்திருப்பாள் . ஒருநாள் தன் விருப்பத்தை அவனிடம் வெளிப்படுத்துகிறாள் , அதைப்பற்றிய முடிவை அவன் சொல்லவேண்டும் என்று வேண்டி நிற்கிறாள். அவனால் சரியாக ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை . அவன் தொழிலுக்கு இதுபோன்ற விவகாரங்கள் சரிவராது என்ற எண்ணம் கொண்டவன் .அவன் தொழிலுக்கு அவள் சிறந்த துணையாக இருக்கமுடியும் ஆனால் அவன் வாழ்கையில் அவள் வருவது சரியாக இருக்காது என்ற முடிவை அவன் எப்போதும் செல்லும் அந்த விடுதியில் எடுக்கிறான் . அங்கு அவளும் வருவாள் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது .அந்த சிப்பந்தியிடன் ஒரு சில்லரை காசைக் கொடுத்து , என்னைத்தேடி ஒருத்தி வருவாள் . நான் இனி இங்கு வரமாட்டேன் இதை அவளிடம் கொடுத்து 1818 என்று சொல்லு. என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான் . அந்த விடுதியில் ம்யூசிக் பிளேயரில் அவள் எப்போதும் பாடல்கள் கேட்கும் வழக்கமுடையவள் என்பது அவனுக்கு தெரியும் . பின் அவள் அந்த 1818 பாடலை ஒலிக்கவிடுகிறாள் . அவனை மறந்துவிடு என்று பொருள் தொனிக்கும் அந்த பாடல் இழைகிறது . அந்த முறிவை அவள் உணர்ந்துக்கொள்கிறாள் .


No comments:

Post a Comment