Saturday, 3 June 2017

 




   சைக்கிள் ஓட்டுதல் நீச்சல் பழகுதல் போன்ற சிலவற்றை புதிதாக பழகினால் சும்மா இருக்க முடியாது . எந்த சைக்கிளைப்பார்த்தாலும் எடுத்து ஓட்டத்தோன்றும் , குளமோ குட்டையோ கிணறோ எந்த நீர்நிலையைப்பார்த்தாலும் உள்ளே குதித்து நம்மை சோதித்து, நமக்கே நம்மை நிருபித்துக்கொள்ளத் தோன்றும். அப்படி நீச்சல் பழகிக்கொண்டிருந்த இரு பொடுசுகள் அந்த நாட்டிலேயே பெரிய குளம் என்று நம்பப்படும் ஒரு குளத்தில் அவர்களைச்சோதித்துக்கொள்ள இறங்கினர் .


   பல ஏக்கர் பறந்து விரிந்த அந்த குளத்தின் நடுவே ஒரு சிறிய கோவில் உண்டு கிட்டத்தட்ட ஒரு தீவை ப்போல. அந்த தீவை தொட்டுவிட்டு வருவதுதான் இலக்கு என்று தங்களுக்குள் முடிவு செய்துக்கொண்டனர் . நீரில் நீளத்தை கணிப்பது சிரமம் கானல்நீர் போல ,பெரும் தூரம் சிறிதாய்த்தெரியும் . இளம்கன்றுகள் என்பதால் பயமறியாமல் இறங்கிவிட்டன. பாதிக்குளத்தை கடக்கும்போதுதான் எவ்வளவு பெரிய தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்று ஒருவனுக்கு புரிந்தது .கூப்பாடு போட்டாலும் கரையில் செல்லும் பெரியவர்களுக்கு கேட்காதே , இப்படியே போனால் சாகவேண்டியதுதான் !
அந்த பயத்தை பதற்றத்தோடு அடுத்தவனிடம் சொல்லி , நாம் திரும்பிவிடுவோம் என்று அழத்தொடங்கினான் , மற்றவனுக்கோ இலக்கு மட்டுமே கண்ணில் தெரிந்துக்கொண்டிருக்கிறது . பயந்தவனை அசுவாசப்படுத்தினான் . நாம் இப்போது நம் இலக்கை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தில் இருக்கிறோம். முன்னே சென்றாலும் அதே தூரம்தான், திரும்பி பின்னேச் சென்றாலும் அதே தூரம்தான் , முன்னதை தேர்ந்தெடுத்தால் இலக்கை அடைத்துவிடுவோம் , பின்னதைத்தேர்ந்தெடுத்தால் நாம் தோற்று விடுவோம் . இரண்டுமே ஒன்றுதான் நாம் எதைத்தேர்ந்தெடுக்க போகிறோம் , என்பதே நம் வெற்றியை நிர்ணயிக்கும் . என்ன செய்வோம் ?என்று தீர்க்கமாக கேட்டான் . பதற்றமானவன் அமைதியானான் , முன்னோக்கி சென்று தீவில் இளைப்பாறி மீண்டனர் .அந்த மனோபாவம்தான் அந்த சிறுவனை பிற்காலத்தில் பல தூரங்களைக்கடந்து பல இலக்குகளை அடையாச்செய்தது . இன்று அவருக்கு பிறந்தநாள் .


( பயந்த அந்த நண்பனின் பெயர் தென்னன் ,இது நடந்த இடம் திருவாரூர் கமலாலயம் குளம் .பிறகு இந்தக்கதையின் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது , ஆனால் அப்படி நடந்ததிருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கிறது , ஏனென்றால் அந்த ஆளுமை அப்படிப்பட்டது )

No comments:

Post a Comment